என் ஊர் : இயக்குநர் கீரா
விலை நிலங்களாகும் வெங்காய பூமி!
'பச்சை என்கிற காத்து’ திரைப்படத்தின்
மூலம் யதார்த்த சினிமாவின் புதிய பரிமாணம் தொட்டவர் இயக்குநர் கீரா என்கிற
மூர்த்தி. தன் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் பற்றிய
நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் இங்கே...
''சுத்துப்பட்டி இருபது கிராமங்களுக்கும் எங்கள்
ஊர்தான் தலைமை. ஆயிரம் ஆண்டு பழைமையான சிவன் கோயில் எங்க ஊர்ல இருக்கு.
அதேபோல, மலை மேல ஒரு முருகன் கோயில் இருக்கு. சிவன் கோயிலில் இருந்து மலைக்
கோயிலுக் குப் போக ஒரு சுரங்கப் பாதை உண்டு. ஒரே புதரா கெடக்கும்.
அதுக்குள்ள எப்படியாவது போயிடணும்னு சின்ன வயசுல முயற்சி பண்ணியிருக்கேன்.
ஆனா, பெரியவங்க யாராச்சும் பார்த்துட்டு விரட்டி விட்டுடுவாங்க. இப்பவும்
அந்தச் சுரங்கம் வழியா மலைக் கோயிலுக்குப் போகணும்கிற ஆசை மட்டும் இருக்கு.
செட்டிகுளத்தைப் பத்தி திருச்சி, பெரம்பலூர்
வட்டாரத்துல கேட்டீங்கன்னா வெங்காய பூமினுதான் சொல்வாங்க. அந்த அளவுக்கு
இருபது வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊர் முச்சூடும் வெங்காய விவசாயம்தான்.
இப்ப அது முழுசா குறைஞ்சுப்போச்சு. பல விவசாயக் குடும்பங்கள் எங்கள்
கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்தில் குடியேறிட்டாங்க. படிச்சவங்க விவசாயம்
செய்றதைக் கேவலமா நினைச்சு விளை நிலத்தை வித்துடுறாங்க.செட்டிகுளத்தோட
விவசாயம் அழிஞ்சுக்கிட்டே வருது.
நான் படிச்ச பள்ளிக்கூடம், என்.எஸ்.கிருஷ்ணன் நிகழ்ச்சி
நடத்தி அதில் கிடைச்ச காசுல கட்டினது. அதனால எங்க ஊருக்குள்ள அந்தப்
பள்ளியை 'என்.எஸ்.கே. பள்ளிக் கூடம்’னுதான் சொல்வாங்க. படிக்கிற வயசுல நான்
செய்யாத சுட்டித்தனமே இல்லை. புத்தகப் பையைப் பாலத்துக்கு அடியில
வெச்சிட்டு காடுகள்ல நாவப் பழம், இளந்தப் பழம் பறிக்கப் போயிருவோம். சரியா
பள்ளிக்கூடம் முடியிற நேரத்துல வந்து பறிச்சதை '10 பழம் 5 பைசா’னு வித்து
செலவுக்கு வெச்சுக்குவோம். காடுகள்ல சுத்தறதும், கோழிக்குண்டு
விளையாடறதும், புறா புடிக்கறதும்தான் படிக்கறப்ப எங்களுக்கு இருந்த வேலை.
சிவன்கோயில்ல
புறா நெறைய இருக்கும். அதனால, பகல்ல கோயில் தளத்து மேல ஏறி புறா
எங்கெல்லாம் இருக்குனு வேவு பாத்திரு வோம். ராத்திரில எல்லாரும் தூங்குன
பின் னாடி நானும் என் நண்பர்கள் மூணு பேரும் புறா பிடிக்கப் போவோம்.
சிவன்கோயில்தளத்து மேல ஏறுறது ரொம்ப சிரமம். இருந்தாலும் கால் வைக்கச்
சின்னச் சின்ன இடம் இருக்கும். அதுல ஏறிடுவோம். தவறி விழுந்தா கீழ் தளத்
துல இருக்குற இளந்த முள் மேலதான் விழணும். அப்படி ஒரு நாள் புறா புடிக்கப்
போறப்ப என்கூட வந்து இருந்தவன் 'கணக்கு பிள்ள வர்றாருடோய்’னு என்னைப்
பயமுறுத்துறதுக்காக சும்மானாச்சுக்கும் சத்தம் போட்டுட்டான். அந்த
அவசரத்துல இறங்கி இளந்த முள் இருக் கிற தளத்துல விழுந்திட்டேன். பின்
பக்கம் மண்டை உடைஞ்சு, ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போய்
காப்பாத்தினாங்க. இது மாதிரி கீழே விழுந்து என் உடம்புல காயம் படாத இடமே
கிடையாது.
சிவன்கோயில் தளத்துல நெறைய ஓலைச் சுவடிகள் கொட்டிக்
கிடக்கும். அதைக் கிழிச்சு கிழிச்சு விளையாடுவோம். அதோட அருமை எல்லாம்
இப்பதான் புரியுது. இப்பகூட சிவன் கோயில் தளத்துல தேடினா ஓலைச்சுவடிகள்
கிடைக்கும்.
நான் சின்னப் பையனா இருக்கும்போது எங்க ஊருல இருக்கிற
பெரிய ஏரி, சின்ன ஏரியில தண்ணி நிரம்புனதும், நீச்சல் போட்டி வெப்பாங்க.
ஆனா, கடந்தப் பத்து வருஷங்களா இந்த ரெண்டு ஏரியும் நிரம்பவே இல்லை.
என் ஊர் என்னை அரவணைத்து, காத்து அன்பு கொண்ட மனிதனாக
வளர்த்தெடுத்து உள்ளது. எல்லா ஊர்களையும் போல எங்க ஊரிலும் சேரி தனியாதான்
இருக்கு. சாதிகள் அழிந்து, பசுமைக்கொண்ட ஊராக மீண்டும் என் ஊர் மாறும்
என்றுதான் இன்றும் கனவு காண்கிறேன்!''
- மகா.தமிழ்ப்பிரபாகரன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=21340
This entry was posted
on Monday, 2 September 2013
at 14:38
. You can follow any responses to this entry through the
comments feed
.