undefined
undefined
பெருங் கனவு தேசம்-7
பெருங்கனவு தேசம்

அந்த வகையில் மிகப்பெரும் நெடிய வரலாற்று நிலப்பரப்பான சென்னை பூர்வ குடிகளின், மீனவ குடிகளின் ஒரு சிறிய கிராமமாக இருந்தது. படையெடுப்புகளை வணிகம் என்று நம்பி வாழ்வளித்த அந்த அப்பாவி பூர்வ குடிகளின் கிராமம் அவர்களையே அழித்து, அவர்களின் ரத்தத் துளிகளால், எலும்புக் கால்களால், ஒடுங்கிய கண்களின் ஒளிகளால் இன்று பெருநகரமாக, பயமுறுத்தும் கான்கிரிட் காடாக எழுந்து நிற்கிறது. எந்த ஒரு சமூகமும் தனது இனம், மொழி, கலை, பண்பாட்டுக் கூறுகளை செம்மைப்படுத்தி பொது உடைமைச் சமூகமாக திகழ மறுக்கிறதோ அல்லது அதன் கூறுகள் அழித்தொழிக்கப்படும்போது கிளர்ந்து எழ மறுக்கிறதோ அப்போது அது அடிமைச் சமூகமாகிறது. அப்படித்தான் நானும் நான் பார்க்கிற சென்னையும்.
ஒரு 15,000 ரூபாயைத் திரட்டுவதற்காக பாரிமுனையில் இருந்த தம்புச் செட்டித் தெருவில் பல பேருடன் நானும் ஒருவனாக நின்றிருந்தேன். அந்தக் குறுகலான தெருவெங்கும் விளிம்பு நிலை மனிதர்கள். அகன்ற பெருவிழிகளால் உருட்டி மிரட்டியபடி அந்தத் தெருவில் சிறுமிகள் அம்மணமாக நின்றிருந்தார்கள். தாங்கள் நெய்த மண்ணில் கிழிந்த உடைகளுடன், சாக்கடை ஓரத்தில் சொந்த நிலத்தின் அகதிகளாக, வாழ இடமற்ற பரதேசிகளாக பெரும் இரும்புக் கேட்டுகளுக்குக் கீழே அந்தக் காலையில் படுத்துக்கிடந்தார்கள். புணர்தலிலும் நாகரிகம் பயின்ற இனத்தின் எச்சங்கள் தெருவோரங்களில் உடைந்து கிடந்தார்கள். இந்த சென்னை போன்ற பெருநகரப்பரப்புக்குத் தேவையற்றவர்களாக, வாழத் தகுதியற்றவர்களாக, கொசுக்களின் கூட்டில் இடம்கேட்டு ஒண்டிக்கொண்டிருந்தார்கள்.

நான் கிளினராகப் பயணிக்க எங்களைச் சுமந்த டிப்பர் வண்டி, பம்மல் என்ற ஊரைக் கடந்து ஓடியது. இதுவரை நான் அனுபவித்தது கறுப்பு மண் வாசனையை என்றால் இந்த வாசனை செம்மண். இங்கே மனிதர்கள் செந்நிறத்தில் இருந்தார்கள். வளத்தை அள்ளிக்கொட்டிய இந்தத் தேசத்தின் வண்ண மண்களின் நிறத்தில் சுயத்தை இழந்திருந்தேன். மண் இவ்வளவு சிகப்பாகவா இருக்கும். பிணக் குவியலின் வழியே நெடித்து ஓடும் இரத்தம்போல திட்டுத்திட்டாக நின்ற மண் எங்கள் வண்டியில் ஏறியது.
சென்னை விமான நிலையத்தில் பால் வெள்ளை பறவைகளாக அங்கங்கே விமானங்கள் நின்றிருந்தன. எங்கோ கருவிழிக்கு வெளியே மேகத்தைக் கிழித்தபடிச் செல்லும் சிட்டுக் குருவிகளாக விமானத்தைக் கண்டு, கை கொட்டிச் சிரித்து விளையாண்ட எனக்கு இந்த விமானங்களை அருகே பார்க்கப் பிடிக்கவே இல்லை. எத்தனை வளவளப்பாக விமானங்கள் இருந்தபோதும், கண் சிமிட்டி அவை என்னை அழைத்த போதும், தனது முரட்டு இறக்கைகளை வீசி மிரட்டிக் கூப்பிட்ட பிறகும்கூட அது எனக்குப் பிடிக்கவே இல்லை. மிக மிகப் பாதுகாப்பான பகுதி என எல்லோரும் சொல்லிக்கொண்ட விமான நிலையத்தின் ஓடுபாதைகளுக்குள் வரைபடங்களில்கூட பெயரில்லாத ஓர் ஊரைச் சேர்ந்தவன் மிக எளிமையாக நுழைய முடிந்ததும் ஆச்சர்யம்தான். அங்கே எனக்கு ஒரு கேள்வி தோன்றியது. பயங்கரவாதிகள் விமானங்களைக் கடத்த என்ன எழவுக்காகப் பலநாள் திட்டம் தீட்டுவதாகப் பேசிக்கொள்கிறார்களோ தெரியவில்லை. இவ்வளவு எளிதாக நானே உள்ளே நுழையும்போது விமானம் அருகில் நின்று அதை உதாசீனப்படுத்திவிட்டு மண்ணை கொட்டிக்கொண்டு இருக்கும்போது அவர்களால் முடியாதா? எல்லாம் அரசியல்.

இப்படி மண்ணை வாரவும் மண்ணைக் கொட்டவும் என இரு வாரங்கள் நகர்ந்தன. இப்படியே போனால் 15,000 புரட்ட பல மாதமாகிவிடும். முகத்தில் ஏமாற்றமும், மனதில் வறட்சியும், வார்த்தைகளில் ஏழ்மையும் மட்டுமே தங்கியிருந்த அந்த நாட்களைக் கடந்து மீண்டும் தம்புச் செட்டித் தெருக்களில் ஒரு நாள் விழுந்தேன்.
முதலாளி இப்போதும் சொற்பொழிவாற்றினார். கிழட்டு ஓநாயின் உறுமல் அவரிடம் இருந்தாலும் காரணம் புரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் அவரின் பின் மாலைப்பொழுதொன்றில் நின்றபோது தெரிந்தது. வேலைக்கான கூலிக்காக நின்றவனின் ஆன்மாவை முடக்கிப்போடவே இந்தச் சொற்பொழிவுத் தந்திரம். கெட்ட வார்த்தைகளைக் கானங்களாகப் பாடினார்.

அந்த நேரத்தில் என்னைத்தேடி என்னுடைய ஓட்டுநர் வந்தார். மூன்றுவார உழைப்புக்கான கூலியில் மூன்றில் ஒரு பங்கை இலக்கணம் பேசியவர்களிடம் இருந்து வாங்கிவந்திருந்தார்.
என்னால் பொறுக்கமுடியவில்லை. வெந்து தணிந்தது காடு. 'இங்க எல்லாரும் இப்படித்தான்... இவங்க போக்குல போய்தான் புடிக்கணும். அடுத்தது க்ராவல் ஏத்தப் போறோம்... அதுல உன்னோட காச எடுத்துடலாம் வா’
ஓட்டுநர் கொடுத்த நம்பிக்கை. தரையில் நழுவிக் கிடந்த நம்பிக்கை, மீண்டும் நெஞ்சில் ஏறியது.
அடுத்த பயணம் எவனைக் கண்டும் அஞ்சாதே. எமனைக் கண்டும் அஞ்சாதே என அவ்வப்போது தனது தவழும் அலைகளால் நம்பிக்கையூட்டும் கடலின் ஒரு முனை. ஆம், நாங்கள் துறைமுகத்தில் இருந்தோம்.''
(கனவு நிஜமாகும்...)
http://en.vikatan.com/article.php?aid=25700&sid=743&mid=31
This entry was posted
on Monday, 2 September 2013
at 14:30
. You can follow any responses to this entry through the
comments feed
.