பெருங் கனவு தேசம்-9  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்

'' 'என் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மணியையும் ஏன் ஒவ்வொரு நிமிஷத்தையும் நானே செதுக்கினதுடா’ - இது 'பில்லா-2’  வசனம். மிகக் கூர்மையாகத் தோன்றினாலும் எந்தவொன்றையும் எவ்வளவு திட்டமிட்டாலும்  நிச்சயமாகச் செதுக்கவோ, வகுக்கவோ, பெருக்கவோ முடியாது என்பதற்கு நான் துவங்கிய பயணங்கள் கட்டியம் கூறுகின்றன. எதற்கு வந்தோம், எதைநோக்கி நகர்கிறோம் என்றே தீர்மானிக்க முடியாத, அல்லது அதன் வல்லமைகளை அடையாத ஒரு பாமரனின் சவால் நிறைந்த வாழ்க்கையாகவே பெருங்கனவு தேசம் வழிநடத்தியது. சவால்களை எதிர்கொள்ள மறுப்பவனை நோக்கி வீசப்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது?
துறைமுகத்தில் எங்களைப்போலவே எண்ணற்ற திருட்டுகள் நிறைந்து இருந்தன. சிறு தேவைகளைப் பூர்த்தி செய்வதுபோல பெரும் திருட்டுகள் எளிதாக நடக்கும் தளமாக இருக்கிறது துறைமுகம்.
12,000 ரூபாய் திருடிய மகிழ்ச்சியில் ராயபுரம் கணேசன் அண்ணனைச் சந்திக்கச் சென்றேன். என்னைப்போன்ற ஒருவன் வெளியேறினாலும் நூற்றுக்கணக்கான காக்கைகள் சோற்றுப்பருக்கைக்காக அந்த அலுவலக வாசலில் எப்போதும் காத்திருப்பதை உணரமுடிந்தது. வறியவர்களும், வேலை இல்லாதவர்களையும் பற்றிய பட்டியலைத் தயாரிக்க அரசு இதுபோன்ற வாசல்களின் முன்பு கடை போட்டாலே புரிந்துவிடும். ஏனெனில், இந்த நாட்டில் வறியவனின் குடும்ப அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் உண்மையான மாத, வருட வருவாயைவிட பணக்காரர்கள் கொடுக்கும் வருவாய் பட்டியல்தான் வியக்கவைக்கும். வறியவனுக்குக் கிடைக்காத, சென்றுசேராத, பல இலவசங்களைச் சொந்தவீடு வைத்து, வாடகைவிட்டு, கொழுத்துத் திரியும் பணக்காரர்களுக்கு வியர்வை இல்லாமல் சென்றுசேர்கிறது.
தயங்கித் தயங்கிக் கொடுத்த 12,000 ரூபாயினை இரண்டுமுறை எண்ணினார். மூன்று முறை நிமிர்ந்து பார்த்தார். பின் 2,000-ஐ என் கையில் திரும்பக்கொடுத்து உடன் எனது ஓட்டுனர் உரிமத்தையும் திருப்பிக்கொடுத்தார். தொடர்ந்து இரும்பு திருடி, அதற்குப் பழக்கப்பட்ட அடிமையாகிவிடுவோமோ என்று பயந்துகொண்டிருந்த எனக்கு கணேசனின் செயல் வியப்பூட்டியது.
''திரும்ப வேலையில சேந்துக்கிறியா'' இதுவும் என்னை உச்சக்கட்ட வியப்பில் ஆழ்த்தியது. மிகுந்த நன்றிகளைச் செலுத்திவிட்டு வெற்றி வீரனாய் அண்ணா நகர் கூட்டை நோக்கி வந்தடைந்தேன்.
நாகராஜனும் நானும் வலிக்க வலிக்க சமைத்து உண்டோம். திகட்ட திகட்டப் பேசினோம். சலிக்க சலிக்கத் தூங்கினோம். எல்லாம் முடிந்து நாகராஜனிடம் அணையை உடைத்தேன். இனி வேலைக்குச் செல்வதில்லை. சினிமாவைத்தவிர, இனி மாற்றி யோசிக்கப்போவதில்லை என்ற என் முடிவை...  நாகராஜன் 'புகழேந்தியிடம் விட்டுவிடலாம்’ என்றான். எங்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு சினிமாக்காரர் புகழேந்திதான்.
புகழேந்தி...  சினிமாமீது தீராதபசி தொடங்கியது, வளர்ந்தது என இவரால் எனக்குள் நிகழ்ந்தது ஏராளம். என் அண்ணனின் பள்ளித்தோழரான இவர், ஊருக்கு வரும்போதெல்லாம்  அவர்  வேலை செய்யும் படங்களின் தலைப்புகளைக் கேட்பதிலும், அதைப் பிற நண்பர்களுக்கு எடுத்துச் சொல்வதிலும்,  தினத்தந்தியில் அந்தப் படம் பற்றிய செய்தி வருகிறதா என அனைத்து சினிமா துணுக்குகள்வரை படிப்பதிலும் கழிந்து அதுவே என்னை இந்தப் பெருநகரத்துக்குப் பின்நாட்களில் இழுக்கும் நியூட்டன் விதியாகிப்போனது.
ஒரு அடர்ந்த வெயில் நாளில் அவரைத் தேடியலைந்து  முகவரியற்ற ஒரு முகவரியைக் கண்டடைந்தோம். கலைஞர் நகரின் வால்நுனிபோல வடபழனியை நோக்கி நீட்டிப் படுத்திருந்தது இராணி அண்ணா நகர். முன்பெல்லாம் நகர், அபார்ட்மென்ட்ஸ் என்கிற வார்த்தைகள் ஏதோ தேவலோகத்தில் புகைக்கு நடுவே மிதந்துசென்று தேவகன்னிகளைச் சந்திப்பதுபோல என எண்ணிக்கொண்டிருந்த எனக்கு இராணி அண்ணா நகர் பேரிடியை இறக்கியது.
சில ஏக்கர் பரப்பளவில் கொத்துக் கொத்தாய் வானத்துக்குக் கீழே தொங்கிக் கொண்டிருந்தன அடுக்கக குடியிருப்புகளாய். இத்தணூண்டு பரப்பளவில் கிட்டத்தட்ட பல ஆயிரம் மக்கள்.  படிகளெங்கும் நெகிழிக் குடங்களில் மஞ்சள் நீர் நிறைந்திருந்தது. ஒரு மணி நேரம்கூட நிற்கமுடியாத குப்பைகள் சூழ்ந்த, குழந்தைகள் தவழ்ந்த, மட்டைப் பந்தாடிய பல்வேறு தரப்பு இளைஞர்கள், அதை புறாக்கூட்டிலிருந்து எட்டிப்பார்க்கும் அழகுப் பெண்கள் என எல்லாவற்றையும் கடந்து புகழேந்தியின் அறைக்குள் பிரவேசித்தோம். நாங்கள் வந்ததை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. ஊரில் சினிமாக்காரன் என்ற பட்டத்தோடு கிறுக்குத்தனமான தொளதொள உடையில் நெடிது வளர்ந்த தாடியோடு அன்னியத் தன்மையோடு மிரட்சிசேர்த்து வைத்திருந்தவர் புகழேந்தி. இந்த ஒடுங்கிய அறையொன்றில் நிரம்பிய புத்தகக் குவியல்களும் ஒளி, ஒலி நாடாக்கள்கொண்ட பெட்டிகளும் மேலும் சத்யஜித்ரேவின் கேமரா கோணம் பார்க்கும் புகைப்படமொன்றும் 'மிர்ச்சி மசாலா’ படத்தின் மிளகாய் வத்தல்களைப் பார்த்தபடி நிற்கும் சபானா ஆஸ்மியின் புகைப்படமொன்றும் நிறைந்திருந்த அறையில் ஜீன்ஸ் பேண்டை முக்காலாக வெட்டி அதை மூன்றுக்கு நாலாய் உடுத்தி இருந்த புகழேந்தி... செத்துவிட சமயம் பார்த்துக்கொண்டிருந்த  தொலைக்காட்சியில் ஓடிய பாலுமகேந்திரனின் 'யாத்ரா’வை இடைநிறுத்தி எங்களை வரவேற்றார்.
ஊரின் வளங்கள் பற்றியும் உறவுகளின் நலம் விசாரிப்புகளையும் முறைப்படி கேட்டறிந்தவரின் முகத்தில் இன்னமும் இயலாமை நிறைந்த புன்னகை பூத்தபடியே இருந்தது. நான் பிரமிப்பின் உச்சியில் நின்றேன். பேச்சின் இடை இடையே அலமாரிகளில் அடுக்கப்பட்டிருந்த ஆல்பர்ட் காம்யூ, டால்ஸ்டாய், தாய், கோபல்ல கிராமம், குறத்தி முடுக்கு எனப் புத்தகப் பெயர்கள், எழுத்தாளர்களின் பெயர்கள் என மனம் ஓடி ஓடி விசாரிப்புகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தது. அவர் அதிகம் பேசவேமாட்டார். பின்னாளில் நன்கு வாயாடும் நான், அவரின் அறைத் தம்பியாக நீடித்து நீடித்து வாசித்து வாசித்துப் பேசுவதைச் சுருக்கிக் கொண்டிருக்கிறேன். சிரிப்பை மறந்திருக்கிறேன். நாகராஜன் மெல்ல பேச்சைத் துவங்கினான்.
''அண்ணே... நானும் சினிமாவுல அசிஸ்டென்ட் டைரக்டரா''
நாகராஜன் பேச்சை முடிக்கும்முன்பே அவரின் கூரிய பார்வை கொடுத்த குரோதம் அவனைத் திக்குமுக்காடவைத்தது. நாகராஜனும் நானும் முன்பே பேசி வைத்திருந்தோம். எனக்குப் பதிலாக அவன் உதவி இயக்குநராக முயற்சி செய்ய வந்திருப்பதாகச் சொல்வதின் மூலம் புகழேந்தி அண்ணனின் பதிலை அறிந்து அதன்பின் முடிவெடுப்பது.
புகழ் அண்ணன் தனது தொளதொள சட்டையை எடுத்து மாட்டினார். பக்கத்து வீட்டிலிருந்து 'தண்ணீர் விடுறாங்க’ எனக்கேட்ட குரலுக்கு வாகாய் சமையற்கட்டிலிருந்து இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டார். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவருடன்  நடந்தோம். ஓரிடத்தில் குழுமமாய் நின்ற பெண்களுடன் நாங்களும் குடங்களுடன் நின்றோம். ஆண் என்றதும் பெண்கள் உடனே நீர் பிடித்துக்கொடுத்தார்கள். ஒரு குடத்துக்கு 50 பைசாவீதம் ஒரு ரூபாய் கொடுத்து தண்ணீரை அவர் ஒரு குடம் சுமக்க, நான் ஒரு குடம் சுமக்க மாடியேறிவந்து அறைக்குள் தண்ணீர் குடம் வைப்பதற்குள் பெருமூச்சு வாங்கியது. இப்படித்தான் ஒரு கனவுலகவாசியின் நாட்குறிப்புகள் இருக்கின்றன எனப் புரிந்துகொண்டோம். மீண்டும் நாகராஜன் கேட்க முயன்றான்.
''அண்ணே.... அஸிஸ்டென்ட்...''
''டீ சாப்பிடலாம் வாங்க...''
புகழ், சட்டென அறையைப் பூட்டி சாவியை வீட்டின் வெளிப்புறம் இருந்த ஆணியில் தொங்கவிட்டுவிட்டு வேகமாக நடந்தார். அவரின் நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடினோம். நடிகர் பார்த்திபனின் கோயில் நோக்குக் குடியிருப்புக்கு எதிரே இருந்த காமராஜர் சாலை தேனீர்க்கடையில் தேனீர் சொன்னார். வந்தது. அமைதியாகப் பருகினோம். புகழ் அண்ணன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து ஆழமாக உள்ளிருந்து புகையை வெளியே கக்கினார். இல்லை... என் கனவை நசுக்கினார்.
'தம்பி... ஊர்ல இருந்து கிளம்பும்போது நான் வெச்சிருந்த கனவு... இந்தத் தெருவுல, நகரத்துல, இங்க இருக்கிற சாக்கடையில குழம்பித்தவிக்குது. என்னோட 10 வருட சினிமா வாழ்க்கையில இதுவரைக்கும் ஒரு படம்கூட முழுசா வேலை பார்க்கல. ஒருவேளை நாம மதுரைக்காரனா பொறந்திருந்தா நமக்கு சினிமாவுல கொஞ்சம் வாய்ப்பு கிடைக்கும். நம்ம பகுதி ஆட்களுக்கு இது சாத்தியமில்ல. நான் ஊருக்கு வர்றதுன்னாகூட ஏதாவது ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு அடிச்ச காச வெச்சித்தான்வருவேன். இனிமே ஊருக்கு என்னால போய்ப் பொழப்ப பார்க்கமுடியாது. இது வேற உலகம். வேற மனிதர்கள். தினம் தினம் பசிக்குப் போராடவே சரியாயிடுது. அதனால உனக்கெல்லாம் இப்போ சினிமா வேணாம். ஒருவேளை நான் ஜெயிச்சா உன்ன கூப்பிட்டுக்குறேன். அதுவரைக்கும் சினிமா ஆசை வேணாம். நிறைய வலிக்கும். தாங்க முடியாது.’
புகழ் அண்ணன் விலாவரியாகச் சொல்லிக் கூட்டிவந்த இடம் ஒரு பேருந்து நிறுத்தம். 'இந்த பஸ்ஸில் ஏறிப்போனா வடபழனி முருகன் கோயில் ஸ்டாப்வரும். அங்கே இருந்து அண்ணா நகருக்கு பஸ் இருக்கு. போய் இருக்கிற வேலையை ஒழுங்காபாத்து நாலு காசு சம்பாரிங்க. இனிமே உங்களை கோடம்பாக்கம் பக்கம் நான் பார்க்கக்கூடாது.’
வந்த பல்லவனில் ஏற்றிவிட்டார். திகைப்பும் ஆற்றாமையும் ஒருங்கேசேர பேருந்தில் ஏறினோம். அவர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் அதே வேக நடையில் இராணி அண்ணா நகரை நோக்கிப்போனார். பேருந்தின் பின் கண்ணாடி வழியே அவர் நடப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். மனம் வலித்தது."
(கனவுகள் நிஜமாகும்...)

 http://en.vikatan.com/article.php?aid=26256&sid=772&mid=31

This entry was posted on Monday 2 September 2013 at 14:34 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment