பெருங்கனவு தேசம் பாகம் -2  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்!

''எப்படியோ... பல்வேறு லாரி அனுபவங்களுக்குப் பிறகு, ஓட்டுநர் உரிமம் பெற்றாயிற்று. இனிப் படையெடுக்க வேண்டியதுதான் பாக்கி. வீட்டில் எல்லோரிடமும் சென்னையில் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து ஒரு இயல்பான வாழ்வை, ஏற்ற இறக்கம் ஏதும் இல்லாத மரப்பாச்சி பொம்மை போல நாட்களை நகர்த்தப்போவதாகச் சொல்லியாயிற்று. எல்லோருக்கும் பெருத்த மகிழ்ச்சி. கவனத்தைச் சாலையில் வைத்து வாழும் வாழ்க்கை என்னுடையது இல்லை. மனதில் கனவுகள் நிறைத்து, அதை நிகழ்த்திப் புறப்படுகிறேன் என யாருக்குமே தெரியப்போவதில்லை.
அப்பொழுது எல்லாம் பாரிமுனைதான் சென்னையின் தலை. அங்கு இருந்தே தன்னுடைய உடல்களுக்கு ரத்தம் பாய்ச்சுவதுபோல, எல்லா மூலை முடுக்குகளுக்கும் பேருந்து பாயும். ஒரு மரண யோக, எம கண்டத்தில் அதிகாலை ஐந்து ஏழுக்கு இரண்டாவது முறையாகப் பேருந்தில் பயணித்து சென்னையின் பாரீஸ் எனப்படும் பாரிமுனையைவந்து அடைந்தேன்.
முதல் பேருந்துப் பயணம் வேறுவிதமாக இருந்தது. தாம்பரம் விமானப் பயிற்சி நிலையத்தில் பயிற்சிப் பரீட்சைக்காக பனிரெண்டாம் வகுப்பின் விடுமுறையில், அண்ணனுடன் சென்னைக்குவந்து வேளச்சேரி கன்னிகாபுரத்தில் அண்ணனின் வகுப்புத் தோழி வீட்டில் தங்கினோம். அந்த வீட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்து பார்த்தாலும் கிண்டி குதிரைப் பந்தய மைதானத்தில், குதிரைகள் சீறிப் பாய்வது புள்ளிகளாகத் தெரியும். மிகக் குறுகலான சந்துக்குள் புகுந்து மரப் படிக்கட்டுகளின் வழியாக மேலே ஏறினால், வான வெளிச்சத்தை மறைக்க ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளால் மூடப்பட்டிருக்கும். அந்த வீட்டில் இருக்கும் ஒற்றை அறையில் ஐந்து பேரோடு ஏழாவதாக நாங்களும் புகுந்தோம். பொதுவாக சென்னையில், வரும் விருந்தினர்களை அவசரமாக உபசரித்து அவசரமாக வெளியேற்றும் போக்கு பல வீடுகளில் கண்டிருக்கிறேன். அதற்கு இடப்பற்றாக் குறையும் பொருளாதாரக் கட்டமைப்புமே நுண்ணியக் காரணிகளாக இருக்கும். இந்த வீட்டில் அது இருந்தாலும் ஒரு முழுநாள் தங்கினோம். ஹவுஸ் ஓனர், விருந்தினர் (ஹவுஸ் ஓனர் என்ற பதம் எனக்கு புதிதாக இருந்தது. சென்னை ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசும் விந்தையைப் புரிய சற்று சிரமமாக இருந்தது.) வந்தால் தண்ணீருக்குத் திட்டுவார் எனச் சொல்லி அவர்கள் வழக்கமாகக் குளிக்கச் செல்லும் இடத்துக்கு ஒரு மதில் சுவரின் மீது ஏறிக் குதிக்கச்சொல்லி அழைத்துப்போனார்கள்.
நாங்கள் மதில் ஏறிக் குதித்தது ஒரு வனத்தில். அது சாதாரண வனம் இல்லை. மான்களும், ஏரிகளில் மீன்களும்,  அதிசய வண்ணப் பறவைகளும் நிறைந்து இருக்கும் வனம். இந்த அதிவேக இரைச்சலுடன் கூடிய உலகத்தின் பெருநகரங்களில் ஒன்றான இந்த சென்னையில் இப்படி ஓர் இடத்தில் இருந்த மான்கள் எங்களைக் கண்டு அச்சம் கொள்ளவில்லை. ஆசை தீர ஏரியில் நீராடினோம், புற்களில் புரண்டோம், கனிகளை உண்டு, குரங்குகளுக்கும் கொடுத்தோம். அளவு கடந்த பசுமையை, பெயர் தெரியாத மரங்கள் நீட்டிய நிழலை, பறவைகளின் எச்சங்களால் இயற்கை வரைந்த நவீன ஓவியங்களை என வியந்து வியந்து மாண்டோம். அந்த மாய உலகத்தைப் பிரிய மனம் இன்றி மதில் ஏறிக் குதித்தோம். வீடு வந்தடைந்து வனம் பற்றிய சிலாகிப்பில்தான் சில உண்மைகள் தெரிந்தன. சில ஆயிரம் ஏக்கர்களைக்கொண்ட அந்த வனத்தில்தான் ஆளுநர் மாளிகை இருக்கிறது. அந்த இடம் மிகுந்த பாதுகாப்புக்கு உரியது என்றும் புரிந்த போது அதிர்ந்துபோனேன். ஒரு ஆளுநர் மாளிகை இருக்கும் ஒரு வனம் எங்களைப் போல சாதாரண மனிதர்களும் வெகு எளிமையாக நுழையக்கூடிய இடமா? ஆளுநருக்கு அவ்வளவுதான் பாதுகாப்பா... அல்லது ஆளுநர்கள் இந்த தேசத்தில் பயன்படாதவர்கள் என்கிற எண்ணமா... எனக்கு விளங்கவே இல்லை.
தாம்பரம் விமானப் பயிற்சி மையத்தில் ஒரே நேரத்தில் சில ஆயிரம் மாணவர்களுக்குப் பயிற்சி நடந்தது. அதிகாரி இந்தியில் உரையாற்றினார். ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே கேள்வித்தாளில் இருந்தன. தமிழகத்தின் ஒரு மூலையில் இருந்து, தமிழ்வழிக் கல்வியிலேயே படித்து,ஆங்கிலத்தை மண்டையில் கொட்டிக் கொட்டி மனப்பாடமே செய்து, வாந்தி எடுத்துத் தேறிய என்னைப் போன்ற மாணவர்களுக்கு எதற்காக ஆங்கிலத்திலும் இந்தியிலும் கேள்வித்தாள் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை. தென்னிந்தியா தவிர்த்து, மற்ற எல்லா மாநிலங்களிலும் இந்தி இருப்பதால் வட இந்தியர்களே ஆங்கிலம் தெரியாவிட்டாலும் இத்தகைய துறைக்குள் கோலோச்சுவதின் உண்மை அப்பட்டமாகப் புரிந்தது. அவரவர் தாய்மொழியில் கேள்வித்தாள் கொடுத்து அவர்கள் தேறிய பின், நிர்வாக வசதிக்காக இந்தியையும் ஆங்கிலத்தையும் பயிற்றுவிப்பதுதானே பல்வேறு மொழிக் குடும்பங்கள் உள்ள ஒரு தேசமாக, ஒருங்கிணைந்த இந்தியா இருக்க முடியும். இல்லையென்றால், வடவரின் ஆதிக்கத்தில்தானே பிற மொழிக்காரர்கள் அல்லலுறக்கூடும் என்று தோன்றியது. தேடித் தேடி பொது அறிவை வெல்ல முயன்றது அர்த்தம் இல்லாதுப் போனது மண்டைக்குள் ஓடியது. வெளியே வந்ததும் அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டாம். நிச்சயம் தோல்விதான் என்று முடிவுசெய்து அண்ணனை அழைத்துக்கொண்டு வந்துவிட்டேன். சென்னை வந்ததற்கு மெரினா கடற்கரையில் கோடிக் காலடித் தடங்களோடு எங்களின் தடத்தையும் பதித்தோம். எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிகளில் நின்று புகைப்படம் எடுத்தோம். அந்த நாட்களில் கேமராவுடன் சிலர் எப்போதும் நின்றுகொண்டு இருப்பார்கள். பணத்தையும் முகவரியையும் கொடுத்துவிட்டுச் சென்றால் புகைப்படத்தை ஊருக்கு அனுப்பிவைப்பார்கள்.
இது இரண்டாவது பயணம். நிரந்தரக் குடியேற்றம் அமைக்கத் திட்டமிட்ட பயணம். பாரிமுனை அந்த அதிகாலையிலும் அற்புதமாக இருந்தது. தேநீர்க் கடையில் மசாலா டீ நாக்கைச் சுட்டது.
தூங்கி வழியும் முகங்கள், இரவு முழுவதும் வேலை செய்த அலுப்பில் எரிச்சலுடன் பதில் பேசும் தேநீர்க் கடை ஊழியர்கள், காலைப் பயணத்துக்குத் தயாராகும் விபூதிப் பட்டை பேருந்து நடத்துனர்கள், ஓட்டுநர்கள், இதுவே தங்களுடைய வசந்த மாளிகை என லட்சம் கொசுக்களுக்கு மத்தியில் சாக்குப் பைகளுக்குள் உடம்பைத் திணித்து இருந்த சாலையோர மக்கள், நடப்பதையே இழிவாகக் கருதி கார்களிலும் பைக்குகளிலும் மட்டுமே பயணித்து, குளிர்சாதனப் பெட்டிகளால் சுற்றுச்சூழலை கேடாக்கும் அலட்டலான மேட்டுக்குடி மனிதர்கள், வெளிச்சம் வரும் முன் தொப்பையைக் குறைக்க, வியர்வையில் குளிக்கும் விந்தை மனிதர்களை எல்லாம்  கடந்து நான் சென்றது அண்ணா நகரில் உள்ள திருமங்கலத்துக்கு.
விடிந்திருந்தது. கறுப்பாகவும் வெள்ளந்தியாகவும் இருப்பது புறக்கணிக்கப்பட்டு இருந்த அந்தப் பகுதிக்குள் விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் கண்டிருந்த வெள்ளை, மாநிற, பளபளத்த, மருவற்ற தோல் மனிதர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள்.
ரப்பர் செருப்பும், பேகி பேன்ட்டும், தொள தொள சட்டையுடனும் எவ்வளவு வாரினாலும் அடம்பிடித்து படிய மறுக்கும் சுருள் தலையோடு நின்றிருந்த என்னை, ஒரு காவலாளி விநோதமாகப் பார்த்தார். வீட்டு எண்ணைச் சொன்னதும், ' நெனைச்சேன்... அந்த ப்ளாட்டுக்குத்தான் வந்திருப்பேனு'  அந்த அடுக்ககக் குடியிருப்பில் என் நண்பன் தங்கி இருந்ததே திகைப்பாக இருந்தது.
அவ்வளவு நவீன வீட்டில் ஒரு கிழிந்த பாயும், அவனுடைய சில லுங்கிகளும், இரண்டு மூன்று பேன்ட், சட்டைகளும் ,ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியும், ஒரு ஸ்டவ்வும், இரண்டு மூன்று பாத்திரங்களும் இருந்தது. கூடவே குளிக்கும்போது பளீரென பூத்துவாலையை முகத்தில் இறைக்கும் ஷவர் இருந்தது. அழுக்குத்தீர குளித்தேன்.
மொட்டை மாடியில் நின்றபடி எங்களின் கிராமத்து நினைவுகளைக் கிளறிக்கொண்டோம். மொட்டை மாடியில் இருந்து திருமங்கலம் பேருந்து நிலையம் சீனியைப் பற்றிக்கொண்டு பறக்கும் எறும்புகளைப் போல பரபரத்துக் கிடந்தது. நாங்கள் பேசிக்கொண்டதில் தெரிந்த ஒரு விஷயம். இந்தக் குடியிருப்பில் நாங்கள் குடியிருக்கவில்லை. காவல் காக்கிறோம். அதாவது, வீட்டுக்காரருக்குப் பல இடங்கள், பல வீடுகள், இந்த வீட்டில் கடைசியாகக் குடியிருந்தோரால் பிரச்னை. அவர்களை அனுப்பிவிட்டு, கொஞ்ச நாட்களுக்கு யாருக்கும் வாடகைக்கு விடாமல் எங்களைக் காவல் இருக்கச் சொல்லியுள்ளார். அவ்வளவே. 'எவ்வளவுடா வாடகை?’ என்றேன். 'பத்தாயிரம்' என்றான். எனக்கு மயக்கம்வந்தது.
வந்த வேலையின்  விஷயம் சொல்லி நண்பனிடம் பேருந்துக்கான விவரம் கேட்டு நிறுத்தத்தில் காத்திருந்தேன். பல்லவன் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறைவந்தது. ஆனால், ராயபுரம் பேருந்து கிடைக்கவில்லை. ஒரு பகுதிக்குச் செல்லும் பேருந்துகள் நீண்ட நேரம் வருவதில்லை. வந்தாலும் தொடர்ச்சியாக, ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நேரத்தில் வருகின்றன. மொத்தக் கூட்டமும் அடித்துப் பிடித்து பிதுங்கி வழிந்தபடிச் செல்வதைப் பார்க்க அருவருப்பாக இருந்தது. அதே பேருந்தை இயக்குபவர்களின் அலட்சியம் குறித்து எந்த மக்களும் கவலைப்படாததைப் பார்க்கும்போது கோபமாக வந்தது. பின்னாட்களில் அவையே சலித்துப்போனதும் உண்டு.
எப்படியோ போராடி, ஒரு பேருந்தின் படிக்கட்டுகளுக்குள் முண்டி நுழைத்துக்கொண்ட பிறகுதான் ஒரு உண்மை புரிந்தது. என்னைச் சுற்றி நிறையப் பெண்களும் படியில் தொங்கிக்கொண்டு இருப்பது. நெரிசலில் ஆண்களும் பெண்களும் ஒருவரோடு ஒருவர் பிணைந்திருந்தார்கள். அந்தச் சூழல் அபாயகரமாகத் தோன்றியது. பெண்கள் எந்த நெளிதலையும் காட்டவில்லை. தினம் தினம் பயணித்து இந்த நெருக்கடிகள் அவர்களுக்கு மரத்துவிட்டதைக் கண்டுகொள்ள முடிந்தது. திரையில் காட்டும்போது காதலர்கள் விரல்களைத் தொட்டுக்கொண்டாலே சிலிர்ப்பது, இனி நகர ஆண்களுக்கும் பெண்களுக்கும் சாத்தியம் இல்லை. உழைக்கும் நடுத்தர மக்களின்மீது திணிக்கப்பட்ட வன்முறை இது. நடத்துநர் வேறு ஓர் இடத்தில் இருந்தார். பயணச்சீட்டு எடுக்க முடியாமல் தவித்தபோது, எல்லோரும் அவரவர் நின்ற இடத்தில் இருந்தே முன்னால் நின்றவர்களிடம் கொடுத்து, டூ ட்வன்ட்டி பைஃவ் ஒண்ணு; த்ரீ பிஃப்ட்டி ஒண்ணு எனக் காசு கொடுத்து அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். எனக்குக் குழப்பமாக இருந்தது. பயணமே ஒரு திகில் அனுபவமானது. கிடைத்த இடைவெளியில் எப்படியோ மேலேறி ஒரு ராயபுரம் கேட்டேன். ஊர்ப் பெயர் சொல்லிக் கேட்பது அவ்வளவு நாகரிகமில்லை போல. பலர் பார்த்தார்கள். அல்லது பலர் பார்ப்பதாக நான் உள் சுருங்கிக்கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக ராயபுரம்வந்தது. கையில் இருந்த முகவரியைப் பலரிடம் கேட்டு, குழப்பி... குழம்பி ஒரு வழியாக நான் சென்றுசேர வேண்டிய இடம்வந்தேன். நான் பார்த்த அண்ணா நகர் வேறு. ராயபுரம் வேறு. ஒரே நகரத்தில் இரண்டு முகங்கள். மேலும் இந்த நகரத்தில் பல முகங்கள் இருக்கக்கூடும்.
ராயபுரம் கறுப்பாக இருந்தது. வீடுகள் முதல் கடைகள் வரை, பட்டறைகள் முதல் மனிதர்கள் வரை எல்லாவற்றிலும் கறுமை அப்பிக்கிடந்தது. அந்தக் கறுமை புகையாலா, தூசியாலா, கருமண்ணால் ஆன புழுதியாலா, அல்லது தினம் கடந்து செல்லும் ஆயிரம் லாரிகளாலா அல்லது எல்லாம் சேர்ந்த கலவையா எதுவென்று தெரியவில்லை. மனிதர்களின் முகங்களில் தேங்கி அவர்களின் உடல் நரம்புகள்வரை ஊடுருவி இருக்க வேண்டும் இந்தக் கறுமை எனப்பட்டது.
நான் தேடிச் சென்ற அந்த அலுவலக வாசலில் பலபேர் அழுக்கு ஏறிய லுங்கியில் இருந்தார்கள். பரட்டை தலையில் முகத்தை நுழைத்து இருந்தார்கள். உடல் பெருத்த ஒருவர் என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை வாங்கிப் பார்த்தார். அதைத் தனது மேஜையில் வைத்துக்கொண்டார். இரண்டு நாள் கழித்து என்னை எர்ணாவூர் வரச் சொல்லிவிட்டு... என் பின்னால் நின்றவனைப் பார்த்தார். ஓட்டுநர் உரிமத்தைக் கேட்பதா... வேண்டாமா என எனக்குப் புரியவில்லை...''

(கனவுகள் நிஜமாகும்...)

 http://en.vikatan.com/article.php?aid=24095&sid=679&mid=31

This entry was posted on Monday 2 September 2013 at 14:16 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment