ஆரியத்தில் குளிர் காயும் உயர்சாதிகளின் மனக்கிடங்கு..  

Posted by நாண்

கொஞ்ச நாளாக எமது மனதில் பெருத்த சந்தேகங்கள் கிளை விட்டபடியே இருக்கின்றன..ஆரியம் எம்மை விழுங்க பார்க்கிறது, பார்ப்பான்
 நம்மை காலம் காலமாக அடிமையாக்கி வைத்திருக்கிறான்..திராவிடம் வெல்ல வேண்டும்..இப்படி பெரியாருக்கு பின் வந்தவர்களின் கதைப்பில் உண்மையிருப்பதாக தோணவே இல்லை..

              பெரியார் நமக்கு போதித்த கருத்துக்களிலும் ,சிந்தனையிலும்,எந்த மாற்றமும் நமக்கில்லை..இன்றும் ஆட்சியை நிர்ணயிக்கிற சக்தியாக மொட்டை தலையன் சோ முன்னிருத்தப்படுகிறான்..பார்ப்பன தெருக்களில் வீட்டு வாசல் முன்பு வாடகைக்கு விடப்படும் பலகையில் சைவம் மட்டுமே என நம்மை குத்திக்கிழித்துக் கொண்டிருக்கிறான்..எல்லாம் சரி..

                     அதை சாக்காக வைத்துக்கொண்டு சாதியை அதன் வலிமையை பெருக்கியது யார் குற்றம்..இன்று சாதிக்காக போராடியதை சொல்லப்படும் இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன..இடைநிலை சாதிகளை வளர்த்து கொண்டிருக்கின்றன..எந்த சாதி பெரும்பான்மையாக உள்ளதோ அந்த சாதிக்கான எதிர் சாதிகளை அந்த பகுதியின் வேட்பாளராக அறிவிக்க எந்த முன் வருவதில்லை..அந்த சாதி ஓட்டுக்கள் வேணும் என அவர்களையே நிறுத்துகிறார்கள்..

          அதன் மூலம் ஏற்கனவே கொளுத்து திரியும் இன்றைய ஆதிக்க சாதிகள் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கப்பட்டவர்களாகவே வைத்திருக்கிறார்கள்..தலை நிமிர்ந்து நிற்க விடுவதில்லை..திருமா ,கிருஷ்ண சாமி போன்றவர்களும் இந்த சூழலுக்குள் சிக்கி கொண்டு ஏதோ இரண்டு சீட்டு மூணு சீட்டு கிடைத்தால் போதுமென அதன் மூலம் பெரிய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி விட்டதாக கனவு கண்டு அம்மாக்களையும் சேற்றில் தள்ளி மேலும் அவர்களை தனிமை படுத்துகிறார்கள்..

      இதன் மூலம் என்ன மாற்றத்தை சாதித்து விட்டார்கள்..வடமாவட்டங்களில் வன்னியரின் ஆதிக்கமும்,தென் மாவட்டங்களில் தேவர்,முன்பு தலித்தாக அடையாளப்படுத்தப்பட்டு இன்று நாடார்கள் ஆகி பெருன்சாதி வட்டத்திற்குள் வந்தவர்களும்,கொங்கு மக்களாலும் ,இன்ன பிற உயர் சாதிகளாலும் மேலும் ஒடுக்கப்பட்டவர்கள் கீழான மனிதர்களாகவே மாற்றப்படுகிறார்கள்..

         தமிழ் தேசியம் குறித்து சிந்திப்பவர்களும் சாதி குறித்து பேச மறுக்கும் அவல சூழல் யாரால் வந்தது..இன்றைய தலித் தலைவர்களாலும்,திராவிடம் பேசிய இன்றைய தலைவர்கலாலுமே வந்தது..எவன் கேட்கிறான் இதை..

                பார்ப்பனர்களை விட பல மடங்கு தலித்துகள் மீது நேரடி வன்முறை செலுத்தும் உயர்சாதிகளை யார் கண்டிப்பது..

               ஒரு சின்ன உதாரணம் ..எனது ஊர் சின்ன ஊர்..அங்கே ஒரு வீட்டில் இழவு விழுந்தால் குடி வெட்டியான்,குடி சக்கிலி ,குடி வண்ணாத்தி ,குடி பரியாரிகள் போக வேண்டும் இதுவே இன்றும் நிலவும் விதி..
   
             பிணம் புதைத்த பின்போ,தீ வைத்த பின்போ வெட்டியான் என அழைக்கப்படும் பறையர்களில் ஒருவர் ஆதிக்க சாதிகளிடம் வருவார் ..அவர்கள் உக்கார வெள்ளை வேட்டியை வண்ணார் எனப்படும் சாதியை சேர்ந்தவர் விரிப்பார்..ஆதிக்க சாதிகள் அதில் அமர்ந்த பிறகு எதிரில் தலித் சாதிகள் நிற்க வேண்டும்..அவர்கள் நிற்கும் பகுதியில் ஒரு உயர் சாதியினர் நின்றாலும் நீ என்ன வெட்டியானாடா அங்க போயி நிற்கிற என கேட்பார்கள்..

                  பின்பு குடி வெட்டியான்,வண்ணார்,சக்கிலி,பறையாடித்தவ்ர் ,பரியாரி .,என அனைவரும் மொத்தமாக நெடுஞ்சான் கிடையாக விழுவர் ..அதன் பிறகு ஒவ்வொருவருக்கும் மொத்தமாக மாற்றி வைத்திருக்கும் சில்லறையிலிருந்து 25 ரூபாய் தூக்கி போடுவார்..பத்தவில்லை என்று அவர்கள் மீண்டும் நெடுஞ்சான் கிடையாக விழுவர்..அப்போது அதிக்க சாதியிலிருந்து ஒருவன் அவன் வயசு ௨௦ கூட இருக்காது..அவன் காலில் விழுந்த பெரியவரான பறையரை பார்த்து "மயிறு உங்களுக்கெல்லாம் எவ்வளவு கொடுத்தாலும் அடங்காதுடா..?"என்பான்..
               ஆதிக்க சாதியிலிருந்து ஒரு பெரியவர் அந்த ஆதிக்க சாதி பையனிடம் சொல்வார்" டேய்..அது அவன் உரிமையடா  ..அவன் கேக்கணும் நாம கொடுக்கணும்"..என்பார்..

          இப்படியாக நீண்டு கொண்டே போடும் அவர் நாற்பது ரூபாய் வாங்குவதற்குள் எட்டு முறை நெடுஞ்சான் கிடையாக விழுந்து கிடப்பார்..
அது பழைய காலம் என எவனும் ஒத்து ஊத முடியாது..நானே சாட்சி..இன்னமும் எனது ஊரில் ஏதாவது ஒரு இழவு விழும் பொது அதை பார்க்கலாம்..

        ஆனால் இதை பற்றி இது வரை பெ.தி.க ,கம்யுனிச இயக்கங்கள் பரவலாக போராடியதை தவிர வேறு என்ன பார்ப்பனியம் குறித்து நீங்கள் திட்டுவதால் நிகழ்ந்தது..
                           தொடர்ந்து இன்னமும் மாறாத அமைப்பும் அதன் வழியே ஏமாற்று அரசியல் தலைவர்களாலும், வெறும் தமிழ் தேசியம் பற்றி மட்டும் பேசுபவர்களாலும், எந்த  சாதிய வேரருப்பும் சாத்தியமில்லை..திட்டமிடப்படாமலேயே இறுக்கி வைத்திருக்கும் இன்றைய சாதி அமைப்புக்கு நீங்களே..காரணம்..ஓட்டெடுப்பு முறையில் மாற்றம் வேண்டும்..பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திர வேள்விக்கு..முடிந்தால் அனைத்து தலைவர்களும்..இரட்டை வாக்குரிமைக்கு குரல் கொடுங்கள் பார்ப்போம்..மற்ற உயர்சாதிகளுக்கு ஈடாக பிரதிநிதித்துவத்தை கோருங்கள் பார்ப்போம்..இப்படி எதுவும் செய்யாமால்..தலித் மானத்தோடு,பொருளாதார ,சிந்தனையோடு வளர வழி விடுங்கள் பார்ப்போம்..எவனும் செய்ய மாட்டான்..



This entry was posted on Sunday 22 May 2011 at 04:26 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment