போங்கடா ..நீங்களும் உங்க சினிமாவும் .......  

Posted by நாண்

                               இது விளையாடும் நேரம்..என் மன கிணறில் தூர்ந்து போய் தொங்குகிற சினிமாவை பற்றி பேசி விடக்கூடிய சூழல் எனக்கில்லை..ஆனாலும் சில பதிவுகள் தேவையிருப்பதன் பொருட்டு கொட்டிவிட தீர்மானிக்கிறேன்..


                     காலம் என்னை மாற்றியமைக்கலாம்..நான் காலத்தின் சுழலில் சிக்கி கொள்ளலாம் .அப்போது நீங்கள் என்னை நோக்கி இந்த பதிவை முன் வைத்து கேள்வி கேட்கவோ வெட்டி போடவோ உரிமையுண்டு என்ற ஒப்புதலுடனே இதை எழுதுகிறேன்..

                    மிக கடினமாக கடந்து வந்த எனது திரைப்பாதை பச்சை என்கிற காத்து என்ற படத்தின் மூலம் தீராத மன வடுவை சந்தித்திருக்கிறது..கோபத்தில் கொப்பளிக்க துவங்கிய மனம் இன்று அதையே ரணமாக கொட்டுகிறது..இந்த பதிவில் சமூகம் தவிர்த்து பேச விரும்பாத நான் சுய புலம்பலை செய்யும் அளவுக்கு நீர்த்து கிடக்கிறேன்..

                 ஒப்பனையில்லாத வாழ்வை சுமக்க ஆசை கொண்டு ஒப்பனையான வாழ்வை தேடிக்கொண்டவன் நான்..

                முகம் ஒன்று கூற..பேச்சு ஒன்றாய் நீடிக்கும் கழுகுகளின் மத்தியில் திரை விரிந்திருக்கிறது..கற்பனைகளை விட சரியாக சொல்லப்படும் எதார்த்தம்  மேலானது என்ற என் புரிதலை சமீப முன்கான் திரையரங்குகளின் பார்வையாளர்கள் உடைத்தேரிந்தபோது துவளாத எல்லோரின் பேச்சிலும் வேறு ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது..


                 நீ தலித் மகனா என கேட்க விரும்ப வில்லை இந்த உலக சூழல் ..தேவரின் மகனென்றால் படம் அற்புதம் என்னும் மாயையை என்னென்று சொல்வது ..எல்லா தரப்பு மனிதர்களையும் கேட்டு அறிந்து கொண்ட சினிமா..தேவரின் பிள்ளைஎன்றால் மட்டும் தான் வெளியாக வேண்டுமா என்ன..அதிலும் சில அரசியல் பின்புலத்தை சமீபமாக உட்கொண்டவனிலிருந்து,காலம் தோறும் உட்கொண்டவன் வரை அப்படியென்ன தேவர் மோகம்..

                   நான் படைக்க வந்தேனா..இல்ல சாதி சான்றிதழ் வைத்து பிழைக்க வந்தேனா.. இப்படியே நீடித்து கிடந்தால் துவக்கு ஈழத்தில் மட்டுமல்ல இங்கேயும் வெடிக்கும் ..

                  கேவலமாக நடக்கும் இந்த கூத்துக்களை எவனும் பேச மாட்டான்..நான் பேசுவேன்..உதவி இயக்குனர் வாய்ப்பிலிருந்து கிடைத்த தயாரிப்பாளர் வரைக்கும் இங்கே புறக்கணிக்கப்பட்டவன் நான்..

                 ஒன்று கிடைக்க ஒன்றிலிருந்து ஒன்பதாய் கிளைத்தெழ   ஆசை கொண்ட நான் இன்று முனை மழுங்கி நிற்கிறேன்..காலத்தின் சூழலில் என் தன்னிலை தொலைத்து பெரியாரின் பேரன் என்று சொல்லி கொண்ட நான் பெண்ணை என் படம் வெளியாக தூதனுப்பவும் தயாராகி விட்டேன்..

                ஒரு தேர்ந்த சூதாடிக்கு மட்டுமே இந்த திரை சரி..கேவலப்பட்ட இந்த திரையில் நான் சந்தித்த எல்லோருமே ஏதோ ஒரு வகையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள என்னை களவாட முற்படுபவர்களே..
         
                 அவரவருக்கான ஆசைகளுக்கு ஒட்டு மொத்த படத்தை சுமந்த நான் மட்டுமே பலிகடா என்னும் அவலசுவையையை தினமும் ருசிக்கிறேன்..காலத்தின் நுனிகளில் என் கனவுக்கோட்டைகள் தகர்வதை இனி உங்களோடு நானும் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன்..அவரவர்களுக்கான அவரவர்களின் அன்பிற்காக நான் எனது அன்பையும் எனது குடும்பத்தையும் பலியிட்டு விட்ட ஆதங்கத்தின் கூறுகளில் என் ஆன்மா தவிக்கிறது..சக மனிதனாக எனது நேசிப்புகள் சுருங்கிக் கொண்டே போகின்றன..


                சில நண்பர்களின் அதீத புரிதல் மட்டும் நீளாவிடில் தற்கொலை என்னும் மாய வலைக்கு நான் இரையாகி இருப்பேன்..ஆகவே என்னை யாரும் மன்னிக்க வேண்டாம்..என் படம் வெளியாகும் தினத்தில் அதை பார்க்கும் போது  நான் கட்டி வைத்திருந்த எனது வரையறை நழுவி திரை தோறும் புழுக்கள் ஆக்கிரமிக்கும்..என்கிற வேதனையோடு இப்பதிவை முடிக்கிறேன்..


This entry was posted on Friday 10 June 2011 at 13:38 . You can follow any responses to this entry through the comments feed .

2 கருத்துரைகள்

மிகுந்த வேதனையுடன் எழுதியிருக்கிறீர்கள்... உங்கள் ஆதங்கம் புரிகிறது...

24 June 2011 at 01:20

உங்கள் மனவலி புலப்படுகிறது. தீராத வேதனையுடன் எழுதியுள்ளீர்கள். காலம் சிறந்த தீர்ப்பினை வழங்கட்டும்!

24 June 2011 at 01:21

Post a Comment