பெருங்கனவு தேசம்!
உலகத்தின் எல்லாக் கொள்ளளவும் மனித சிந்தனையில் அடங்குகிறது. எல்லாச் சிந்தனைகளும் காதலில் வெடிக்கிறது. ஸ்டீபனின் சிந்தனை இந்த மண்ணின் அவலங்களில் முளைத்து காதலில் திளைத்துக் கிடந்தது. இருவரும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார்கள். தொட்டுக்கொள்ளாமலே பகிர்ந்துகொண்டார்கள் பேரன்பை. வனிதா சடாரென அங்கிருந்து விலகினாள். இல்லை... ஓடினாள். அவள் ஓடும்வரை ஓடும் தூரம் வரை காதல் அலைவரிசையை நீட்டினான் ஸ்டீபன். பெரும் வாகன ஓட்டத்தை அவளுடைய ஓட்டம் கட்டுக்குள் அடக்கியதோ இல்லை காதல் அலைவரிசை கட்டுப்படுத்தியதோ தெரியவில்லை. அவள் ஓடினாள். வாகனங்கள் நின்றன.
வனிதா எதிர் நடைபாதையில் நின்ற பொது கழிப்பிடத்தின் பெண்கள் பகுதிக்குள் நுழைந்தாள். ஸ்டீபன் என்னை அவனுடைய வீட்டில் அமரச்செய்தான். அவனும் பொது கழிப்பிடத்துக்கு நடந்தான். அவன் ஆண்கள் பகுதிக்குள் புகுந்தான். ஒரு வேட்கையின் இருவேறு முனைகள் எப்படி ஒன்றினையும் என சிந்தித்தபடி அறையைத் துலாவினேன்.
கிழிந்த பாயொன்றும் அழுக்கு தலையணையொன்றும் அறையை நிரப்பி இருந்தன. அந்த ஏகாந்த மணத்தை நுகர்ந்தபடி சில நூறு கொசுக்கள், ஈ போல கொழுத்துத் திரிந்தன. சில கொசுக்கள் அங்கே இறைந்து கிடந்த மாவோவின் மீதும் லெனினின் மீதும் அமர்ந்திருந்தன. சில எப்படியாவது அந்தப் புத்தகக் கட்டைகளை புரட்டி வாசித்துவிட வேண்டும் என்கிற வெறியோடு முயற்சி செய்துகொண்டு இருந்தன. பாப்லோவில் இருந்து வண்ணதாசன்வரை அந்தக் கூடாரத்தை நிறைத்து இருந்தார்கள். என் நெஞ்சம் செருக்கேறி நின்றது. அடங்காதப் பசி எடுத்தவனின் அகத்துக்குள் நான் அடைந்து கிடந்ததே அந்தச் செருக்குக்கான பின்னணி.
ஒரு புராதன ரேடியோ என்னை அழைத்தது. தயங்கித் தடவி உயிரூட்ட, எந்தப் பிசிறும் இல்லாமல் கணீர் குரலில் ' செந்தமிழ் தேன்மொழியாள்... நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்' என மகாலிங்கம் சிலிர்த்துக் கொண்டு இருந்தார். பொதுக் கழிப்பிடத்தில் காதலர்களின் மொழி பேசிக்கொண்டு இருக்க, மகாலிங்கம் தமிழை மீட்டிக்கொண்டு இருக்க, ஓர் அற்புதத்தின் எல்லையில் முகிழ்த்துக் கிடந்தேன். முற்றும் நினைவிழந்த வானம்பாடியைப் போல...
வர்ணனையாளர்களின், விளம்பரக் கடைவிரிப்பு ஒலிகளைக் கடந்து கடந்து, ' வசந்த முல்லைப் போல'வும் 'பாட்டு பாடவா... பார்த்து பேசவா'வும் ரீங்கரித்து முடக்கும் கணத்தில் முகமெங்கும் நட்சத்திரங்களின் வெளிச்சம் கீறிய வெளுப்போடு ஸ்டீபன் வந்தான். அவன் முகக்கோடுகளில் புரிந்தது தழுவிய முத்தங்களின் எச்சில்கள்.
'காதல்னா ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என யாராவது சொன்னால் ஒன்று அவர்கள் ஏமாறுகிறார்கள் அல்லது பிறரை ஏமாற்றுகிறார்கள். அதுவும் இல்லையென்றால் வறட்சியானவர்கள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறவர்கள். ஒரு நொடியில் கடந்துபோகும் பெண்ணின் மீது ஆண்களுக்குள் நுழையும் ரசாயன மாற்றத்தை பொட்டாசியம் சல்பைடா, இல்லை வெறொன்றா என யாரும் தரம் பிரித்து அறிய முடியாது. சில நேரம் பொட்டாசியமாகவும் சில நேரம் கார்பன் மோனாக்சைடாகவும்கூட அது வெடிக்கும். அது வெடிப்பதற்கு தேவை இரண்டுதான். காத்திருப்பு. மற்றொன்று தொடர்வது. இது பெண்களுக்குப் பொருந்துமா, பெண்களின் மனவோட்டம் என்ன என்பதை அவர்களில் வரியில் இருந்தே வெளிப்பட வேண்டும். நான் வெளிப்படுத்துவது ஒரு உயரிய மடமையின் வெளிப்பாடு. பெண்களுக்கு, ஆணாதிக்கம் மிக்க இந்தச் சமூகம் கொடுத்து இருக்கும் முரண்பாடு வடிவம். அவர்களாலேயே தீர்மானிக்கப்படும்.
ஸ்டீபன் தன்னுடைய காதல் கதையை ஒரு போராளியின் தன்மையுள்ள, எந்தவித ஒப்பனையும் இன்றிச் சொன்னான். என் மனக்கண்கள் அவனுடைய காதலுக்கான ஊற்றுக்கண் தோண்டி ஒப்பனை செய்து அழகு பார்த்தது. அப்போது வனிதா உள்ளே நுழைய பேச்சறுபட்டது. காதலி காதலுனுக்காகச் சமைக்கும்போது ஏற்படும் சுவையும் மணமும் அதிகம் என்பதைத் தெரிந்துகொண்ட தருணம் அது. உள்ளக்கிடக்கையோடு அவர் அளித்த மாட்டுக்கறி விருந்து என் தாயின் கைப் பக்குவத்தில்கூட சாப்பிட்டது இல்லை. உலகின் மிகச் சுவையான கறியில் ஒன்று மாட்டுக்கறி. அதை ஏன் ஒரு சாராருக்கு என ஒதுக்கி வைத்தார்கள்?
'எனக்குத் தெரிஞ்சி முத ஆளு நீங்கதான்'
எனக்கு எதுவும் புரியவில்லை வனிதாவிடமே கேட்டேன்.
'புரியலை'
'ஸ்டீபன்... யார் கூடவும் நின்னு பேசி பார்த்ததில்லை. இப்படிக் கூட்டிவந்து பார்த்தும் பார்த்தது இல்ல'
நான் ஸ்டீபனைப் பார்த்தேன்.
நான் ஸ்டீபனின் கரம் பற்றிக்கொண்டேன். மனமெங்கும் பொங்கி வழிந்தது புன்னகை. ஒரு நீண்ட கனவைப் போலவே அந்த நிகழ்காலம் நொறுங்கி விழுந்தது. அவனுக்கும் எனக்குமான உறவின் மையம் இன்றளவும் நீடிக்கிறது. எப்போதோ கிடைக்கும் வண்ணாரப்பேட்டை பிரயாணங்களில் அந்தப் பகுதி இன்னும் கண்முன் வீற்றிருக்கிறது. ஸ்டீபனும் - வனிதாவும் நெஞ்சில் நிறைந்து கிடந்தார்கள். இப்பொழுது அந்தப் பொதுக் கழிப்பிடம் முன்பை விட நாறிக் கிடக்கிறது. வனிதாவை நான் முதலாவதாகவும் கடைசியாகவும் சந்தித்த தருணம் அதுதான். ஏன் ஸ்டீபனையும்கூட அதற்கடுத்த நாட்களில் என்னால் சந்திக்கவே முடியவில்லை.
ஓர் இரவு முழுவதும் அந்தக் கூடாரத்தில் படுத்துக்கிடந்த எனக்கு அவன் பேசிய பேச்சுகள், கோபங்கள், சமூக விழுமியங்கள் என இன்னும் நான் பெரும் மனச்சுமைகளை நீக்க அவனே காரணம்.
ஒரு நாள் அவனோடு இருந்துவிட்டு, அண்ணா நகர் வந்து நண்பர் நாகராஜிடம் சகலமும் சொன்னேன். இங்கும் அதேபோல் பல நினைவலைகள்... நிகழ்வுகள்.
நீண்டு பெருத்த அந்த ஒரு வாரத் துயரைத் துடைத்துவிட்டு ஸ்டீபனைக் காணும் ஆவலோடு வேலைக்குச் சென்றேன். ஸ்டீபன் வரவில்லை. வரவே இல்லை.
புதிய கிளீனரோடு மனம் ஒட்டவில்லை. ஒரு வார இரவும் பகலும் அவனே ஆக்ரமித்து இருந்தான். போன முறையைவிட இந்த முறை குறைவான நடையே ஓட்டி இருந்தேன். உடல் சோர்வைவிட மனச் சோர்வு வாட்டியது.
ஒரு வாரப் பணி முடிந்ததும் வழக்கமான சம்பிரதாய முனைப்புகளுக்குப் பிறகு, வண்ணாரப் பேட்டையை அடைந்தேன். தொலைவில் இருந்து பார்க்கும்போது கூடாரமும் தென்படவில்லை. லேசான அச்சத்துடன் அவ்விடம் நெருங்க நெருங்க இனம் புரியாத பயம் கவ்வத் தொடங்க. அந்த இடம் வெறுமையாய் நின்றிருந்தது. மனிதர்கள் சாவதானமாய் நடந்துகொண்டிருந்தார்கள்.
கொஞ்சம் தொலைவில் இருந்த பெட்டிக் கடைக்காரரிடம் கேட்டேன்:
'அத ஏம்பா கேட்கிற...போனவாரம் ஒரு நா ... ஒரு கார்க்காரன் ஃபுல் மப்புல ரோடு எது ப்ளாட்பாஃர்ம் எதுனு தெரியாம ப்ளாட்பாஃரத்துல ஏத்திட்டான். ஃபுல் ரேசு... ஒண்ணும் பண்ண முடியில. செவத்தியா இருப்பாம்ப்பா அந்தப் பய. சட்னி மாதிரி குடலு பிதுங்கிப் போய்ருச்சுப்பா... மூஞ்சே இல்லை..'
என் காதில் கரகரவென இரும்புகள் உராயும் ஒலி கேட்டது. சுற்றிலும் பார்த்தேன். தூரத்து தொலைவில் என்னை அடையாளம் கண்டுகொண்டு வனிதா ஓடி வந்தாள்.
நான் பேச ஏதுமற்று நின்றுகொண்டு இருந்தேன். உடைகள் களைந்து அழுக்கடைந்த முகத்தோடு முடிகள் காற்றில் பறக்க வனிதா என்னை நோக்கி வந்தாள்.
அவளால் பேச முடியவில்லை. என் முன்னே அமர்ந்து ''ஓ’ வென அழத் தொடங்கினாள். வெறித்து வெறித்துப் பார்த்தேன். அவள் சட்டையை மீறித் தெரிந்த ஸ்டீபனின் பச்சை குத்திய பெயர் முள்ளாக நெஞ்சில் தைத்தது.
'வண்டி ஏறினத பார்த்துல இருந்து இவளுக்கு ஏதோ ஆயிருச்சுப்பா... கோச்சுக்காத'
வனிதாவை அவர்கள் கூட்டிப்போக, நான் சிலையாக அந்தப் பெரும் நகரத்தில் நின்றுகொண்டு இருந்தேன். வேகவேகமாய் நடந்த சுவடுகளை அறியாத வாகனங்கள் அந்தச் சாலையில் போனபடியும் வந்தபடியும் இருந்தன.
நான் எல்லாவற்றையும் மறக்க நினைத்து எல்லாவற்றையும் சேமித்தபடி நடக்கையில் சில துளிகள் இரத்தக்கரை படிந்த நிலையில் என் கால்களில் இடறியது ஒரு புத்தகம்.
அந்தப் புத்தகத்தின் அட்டையில் மாவோ சிவப்பாய் மின்னிக்கொண்டு இருந்தார். தூரத்தில் வனிதாவைப் பெற்றோர் அழைத்துப்போய்க்கொண்டு இருந்தனர். நான் மாவோவைக் கையில் எடுத்துப்பார்த்தேன். அவரின் முகத்தில் முகமற்ற, தலை நசுங்கிக் கூழான ஸ்டீபன் சிரித்துக்கொண்டு இருந்தான். நான் அங்கிருந்து வெறிநாய்ப்போல ஓடிக்கொண்டு இருந்தேன்.''
(கனவுகள் நிஜமாகும்...)
http://en.vikatan.com/article.php?aid=24638&sid=702&mid=31
This entry was posted
on Monday, 2 September 2013
at 14:26
. You can follow any responses to this entry through the
comments feed
.