மெரினாவிலிருந்து வந்த பின்பு அண்ணாநகர் அறையிலும், அங்கிருந்து குறுக்காகப்போனால் பாடி சிவசக்தி தியேட்டரில் இரண்டு பொழுதுகளும், சில பழைய இளம் பருவ நினைவுகளைப் பேசித் திரிந்ததிலும் போய்விட்டன. இன்று முழுநேர ஓட்டுநராக வேலையில் சேர வேண்டும். முழுக்க நடுத்தர மற்றும் ஏழை மக்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட திருவொற்றியூரில் இறங்கி அங்கிருந்து எர்ணாவூர் கேட்டுக்கு வந்தாகிவிட்டது. நான் போன இடத்தில், அழுக்கு லுங்கியும் முகம் முழுக்கக் கரி அப்பி, பல நாள் குளிக்காமல் கிடந்தவர்கள் நின்றிருந்தார்கள். என்னைப் போலக் குளித்துவிட்டு வந்தவர்களின் நடுவில் ராயபுரத்தில் ஓட்டுநர் உரிமத்தை வாங்கி வைத்திருந்தவரும் நின்றுகொண்டு இருந்தார். அவர் பெயர் ராயபுரம் கணேஷ். தொலைவில் நிறைய டிப்பர் லாரிகள் மஞ்சள் நிறம் மறந்து, வயசான கிழட்டு கருத்த யானைகளைப் போல அணிவகுத்து நின்றிருந்தன. ஓரிடத்தில் லாரி பட்டறை ஒன்றும் டயர் கழட்டி மாற்ற ஒரு பஞ்சர் கடை ஒன்றும் இருந்தன.
ராயபுரம் கணேஷ் சொல்லச் சொல்ல, ஒருவர் கையெழுத்து வாங்கியபடி பணம் கொடுத்துக்கொண்டு இருந்தார். எல்லோரின் முகங்களிலும் வருத்தம் அப்பிக் கிடந்தாலும் யாரும் காட்டிக்கொள்ள முடியாமல் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு இருந்தனர். குளித்துப் புதிதாக நின்றிருந்த அனைவரையும் கூப்பிட்டு ஆளுக்கு 100 ரூபாய் பணம் கொடுத்து வண்டிஎண் சொல்லி அதில் பணியை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். வண்டி எத்தனை நடை அடிக்குதோ அதற்கேற்ப சம்பளம்.
மிகுந்த மகிழ்ச்சியோடு வண்டியில் ஏறி அமர்ந்து, இயக்க முயன்றும் ஒவ்வொரு முறையும் தகறாறு செய்தது டிப்பர். என்னுடைய கிளீனர் பெயர் ஸ்டீபன். வண்டியில் பேட்டரி சரியில்லை. 'தள்ளித்தான் ஸ்டார்ட் பண்ணணும்’ என்றான். முதல் கோணல் முற்றிலும் கோணல். வந்த வாய்ப்பை விடமனசில்லை. நாமக்கல் வண்டியில் பழகிய பலருக்கு ஓரளவு சின்னச் சின்ன லாரி மெக்கானிசம் தெரியும். இந்த வகையில் லாரியின் பேட்டரியைக் கொஞ்சம் கவனித்தேன். பின் கிளீனரை வண்டி அடியில் முதல் டயருக்கு முன்னால் ரேடியேட்டர் அருகில் இருக்கும் செல்ப் மோட்டாரைக் காட்டி, தட்டிக்கொண்டே இருக்கச் சொன்னேன். அவர் தட்ட, நான் பொத்தானை அமுக்கிவிட்டு அமுக்கிவிட்டு உசுப்ப, வண்டிக்கு உயிர் வந்துவிட்டது.
தூரத்தில் நின்றிருந்த ராயபுரம் கணேஷ் இதைக் கவனித்தார். வண்டியை நன்கு ரெய்ஸ் பண்ணிவிட்டு, முதல் கியர் போட்டு இரண்டடி நகர்த்திவிட்டு, மீண்டும் நியூட்ரல் செய்துவிட்டு இறங்கி கணேஷ் அண்ணனிடம் ஓடினேன்.
'அண்ணே... இப்படியே எல்லா நேரமும் இருக்காது. பேட்டரியை மட்டும் மாத்திக் கொடுங்கண்ணே'
'ஒரு நடை ஓட்டு... அப்புறம் மாத்தி தரச் சொல்றேன்'
- அவ்வளவுதான். அதற்கு மேல் பேச முடியாது. கிளீனர் வழிகாட்ட, நான் வண்டியோட்ட, நாங்கள் சென்று சேர்ந்தது... ஒரு அனல்மின் நிலையத்தின் பின்பகுதி.
நாங்கள் நுழைந்த பகுதியை விவரிக்க ஒரே ஒரு வார்த்தை போதும். பகலிலும் ஹெட்லைட் போட்டுத்தான் வண்டி ஓட்ட முடியும். நீண்ட டயர்கள் உருளையில் எங்கேயோ உருண்டு போய்க்கொண்டு இருக்கும். அதில் நிலக்கரியோ அல்லது கழிவுகளோ எதோ ஒன்றைச் சுமந்தபடி அந்த டயர்கள் சில கிலோமீட்டர் தொலைவுகள் பயணித்து இரும்பு உலை ஒன்றில் நிலக்கரியைக் கொட்டும். அதே போல், கழிவுகளைச் சுமந்துவரும் உருளை டயரும் கழிவுகளை ஓரிடத்தில் கொட்டும். அங்கங்கே எரியும் சில பிளான்ட் விளக்குகளும் எடை மேடையின் அருகில் நிற்கும் விளக்குகளும் அடர்ந்த இருளைக் கிளப்பி நிற்கும் புழுதிக்குள் மின்மினிப் பூச்சிகளைப்போலத் தெரியும். ஒவ்வொரு வாகனத்தையும் கழுகுப் பார்வையில் இருந்து பார்க்கும்போது இருண்ட மேகக் கூட்டத்துக்குள் நிலா பாய்ந்து செல்வதைப்போல மிக பிரமாண்டமாக இருக்கும்.
வண்டியேறி, சிறிது தொலைவிலேயே நிறுத்தி, உடைகளை மாற்றி, லுங்கி, பனியனுக்கு வந்துவிட்டோம். முகத்தில் கண்ணைத்தவிர வேறு எதுவும் தெரியாமல் இருக்கும்படி கர்ச்சீப்பால் கட்டிக்கொண்டோம். பல ஓட்டுநர்கள் இதைக்கூடச் செய்வதில்லை. பழகிவிட்டது போல.
டயரில் இருந்து கொட்டும் கழிவுக் கருமண்களை பொக்லைன் இயந்திரம், வரும் டிப்பர்களில் தூக்கிக் கொட்டும். அங்கிருந்து வண்டியை எடை மெஷினில் நிறுத்தி எடைபோட்டுவிட்டு அங்கிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி மலைபோல குவிந்து கிடக்கும் கழிவுகளோடு இவற்றைக் கொண்டுபோய் கொட்ட வேண்டும். இதுதான் வேலை. அந்த அடர்ந்த இருளில் எதிரே வரும் டிப்பர் இப்படித்தான் வருகிறது என யூகித்து முடிக்கும்முன்பே காற்றைப்போல, மின்னல் வேகத்தில் கடந்து மறைந்துவிடும். எந்த டிரைவருக்கும் ஒரு வாரம்தான் வேலை. மறுவாரம் விடுமுறை. மீண்டும் அதற்கு அடுத்த வாரம் இணைந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 15 நாட்களுக்கான உழைப்பை 7 நாட்களில் முடிக்க வேண்டும். இரவு பகல் எந்த நேரமும் அந்தப் புகைக்குள்ளேயே பயணப்பட வேண்டும். அனுபவமிக்க டிரைவர்கள் ஒரு நாளைக்கு அதிகப்படியாய் 13 நடைவரை அடிப்பதுண்டு.
காலைக்கும், மாலைக்கும், இரவு 7 மணிக்கும் சிலர் சைக்கிளில் இட்லியோ, வடையோ, கட்டுச் சோறோ கட்டிவந்து விற்றுப்போவார்கள். இரண்டு மூன்று முறை சைக்கிள் டீ வரும். மற்றபடி பான்பராக், சிகரெட்டுகள் விற்பனை மிக ஜோராக இருக்கும். இரவும் பகலும் கண் விழித்து ஓட்டுவதற்கு சிலர் சிகரெட்டையும் பலர் பான்பராக்கையும் வாயில் முன் உதட்டில் அடக்கிக் கொள்வார்கள். ஒரு நடைக்கு டிரைவருக்கு 75 ரூபாய், கிளீனருக்கு 25 ரூபாய். சிலர் ஒரே நாளில் 1,000 ரூபாய்கூடச் சம்பாதிப்பது உண்டு. ஆனால், எவ்வளவு ஓட்டினாலும் ஆயிரத்தைத் தாண்டி கணேஷிடம் கணக்கு இருக்காது. தினமும் ஒருவர் வந்து அந்த 7 நாட்களிலும் ஒவ்வொரு வண்டிக்கும் 100 ரூபாய் வீதம் சாப்பாட்டுச் செலவுக்குக் கொடுத்துப் போவார். சில நேரங்களில் அவர் வருகைக்காகப் பசியோடு காத்திருப்பதும் நீடிக்கும்.
ஒவ்வொரு நாளும் மரணக் கிணற்றில் வண்டி ஓட்டுபவனின் வாழ்க்கையைப் போலத்தான் எங்களுடையது. முழுதாகச் சரிசெய்து தராமல் பிரேக் ஷூஸ் மாத்தாமல் அப்படியே விடப்பட்டிருந்த வண்டிதான் என்னுடையது. பிரேக் பிடிக்க ஒரு ஆள் ஏறி நின்று நான்கு ஐந்துமுறை பம்ப் அடிப்பதுபோல அடிக்க வேண்டும். எங்கேயாவது திடீரென வண்டி நின்றுவிட்டால், பின்னால்வரும் டிப்பரைக்கொண்டுவந்து வண்டிக்குச் சமமாக நிறுத்தி, கடப்பாரையை வண்டிகளுக்கு இடையில் கொடுத்து, அது இறுகி நின்றதும் வண்டியை நகர்த்தி, அதன் மூலம் ஸ்டார்ட் செய்து லோடைக் கொண்டுபோய்ச் சேர்ப்போம். ஒரே ஒரு ஆறுதல் கிளீனர் ஸ்டீபன் மட்டும்தான். அவனால் சரளமாக ஆங்கிலம் பேச முடிந்தது. அவனது ஆங்கிலத்தில் சென்னையில் உள்ள பலர் பேசுவது போன்ற பீட்டர்கள் இல்லை. விசாரித்தபோது அவன் ஒரு ஆங்கிலோ- இந்தியன் என்று சொன்னான்.
ஒரு ஆங்கிலோ-இந்தியனை இந்தத் தோற்றத்தில் கற்பனை செய்ய முடியவில்லை. எப்போதுமே மனிதன் கற்பிதங்களின் கனவுவெளிகளிலே தடுமாறிக்கொண்டு இருக்கிறான். உண்மை சுடும்போது பதறிப் போகிறான் அல்லது பயந்து விலகி ஓடுகிறான். அதனாலேயே, பெரும்பாலான மனிதர்கள் உண்மைகளைத் தரிசிக்க மறுக்கிறார்கள். என்னையும் உண்மை சுட்டது. ஸ்டீபனின் முகத்தில் சே குவேராவின் கிறுக்கல் மீசையும் ஆதிமூலத்தின் கோட்டோவியங்களைப் போலக் கொசுறு தாடிகளும் இருந்தன. வெள்ளையாகவும் இல்லாமல் வெள்ளைக்கும் மாநிறத்துக்கும் இடையிலான அசத்தல் நிறத்தில் இருந்தான்.
திருச்சியில் அம்மா இருப்பதாகச் சொன்னான். அப்பா வேறு திருமணம் செய்து (ஓடிப் போனதாகவும்) கொண்டாரென்றும் தேடிப்பிடித்து, கட்டையால் இறுக்கிவிட்டு சென்னை வந்ததாகச் சொன்னான். அவன் கஞ்சாவை சிகரெட்டில் நுழைக்கும் அழகும் அதனை, நடுவிரல்களுக்கு இடையில்வைத்து கைகளைக் குவித்து அதையே குழலாகப் பாவித்து ஊதி இழுத்துப் புகை மென்று புகை துப்பும் அழகும் அலாதியாக இருக்கும்.
'படா பசங்க... உழைச்சவன் வயித்துல கடிச்சி உறிஞ்சிற கொசுங்கதான் டிப்பர் லாரி ஓனருங்க. தூத்துக்குடியில உக்காந்துக்கிட்டு அடியாள வெச்சி வேலை செய்றானுங்க. அந்த ராயபுரம் கணேசு பய சரியான சம்பளம் கேட்ட ரெண்டு டிரைவரைக் கொன்னு நிலக்கரியில புதைச்சவனாம்...எல்லோரும் அவனுக்குப் பயந்து நடுங்கி சாவுறானுங்க. எல்லாத்தையும் சம பங்கா பிரிச்சி உழைக்கிறதுக்கும் ஷேர் கொடுக்கணும். இந்த உக்காந்து திங்கிற கமிஷன் நாய்களை டயர்க்கு அடில உருட்டிவிடணும்'
ஸ்டீபனின் இந்த உறுதியான, பிசிறு இல்லாத வார்த்தைகள் அவனிடம் இருந்து வெளியே வரும்போது கஞ்சா புகைகூட பயந்து பயந்துதான் அவன் மூக்கிலிருந்து வெளியேறும். அவன் பேசும் நடப்பு அரசியல், உடமை விவாதம் என்று எல்லாவற்றிலும் ஒரு பார்வை என அவன் தனி ஆளாக நின்றான். அரசியல்சார்ந்து வாதிட எனக்குப் பல இடங்களில் குருவாக வாய்த்தவன்.
'சட்டசபைக் கூட்டம் நடக்கும்போது எல்லா ரெளடிப் பயலும் எம்.எல்.ஏ. ஹாஸ்டல்லதான் இருப்பான். எல்லாப் பயலும் முழு போதையில் கிடக்கிற அந்த நேரமா பார்த்து ஆர்.டி.எக்ஸ். கட்டிட்டுப்போய் ஹாஸ்ட்டல வெடிக்கவெச்சிடணும். ஒரு பய உயிரோட இருக்ககூடாது. புதுசா வந்தவன் அதுக்கப்புறம் பயப்படுவான். ஒழுங்கா வேலை செய்வான். பழைய களை எல்லாம்போய் புது ரத்தம் பாயும்'
முதல்வாரத்தில் வண்டி ஓட்டியதில் 6,000 ரூபாய்க்கு 3,200 ரூபாய் கணக்கு சொன்னார்கள். மறுப்பேதும் இன்றி வாங்கிக்கொண்டேன்.
ஒரு வாரமும் போட்டிருந்த ஒரே உடையான லுங்கி, சட்டை, பனியனைச் சுருட்டி பட்டறைக்குள் ஒளித்து வைத்தோம். அந்தக் கறுத்துக்கிடக்கும் துணிகளைக்கூட திருடிக்கொள்ள ஆட்கள் உண்டு. ஏழைகளின் தேசத்தில் பிணமும் உணவுதானே.
எந்த நேரமும் பீய்ச்சியடிக்கும் பிளான்ட் நீரில் அழுக்கு தீரக் குளித்தோம். இல்லை...இல்லை... உடல் தெளியக் குளித்தோம். எவ்வளவு குளித்தாலும் நகக் கண்களிலும் ரேகை நரம்புகளிலும் பீடித்துக்கிடக்கும் கறுமை போகாது. அது உணவோடு மற்றும் பிற வேலைகளும் செய்யச் செய்யத்தான் மறையும். அது மறையும் போது நாம் மீண்டும் பணிக்கு வந்திருப்போம். எனவே, தொடர் அழுக்கு என்பது தவிர்க்கவே முடியாது. சுத்தம் என்பது, உழைக்கும் வர்க்கத்துக்கு மனச்சுத்தம் மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ளாத சுத்தக்காரர்கள், உழைக்கும் மக்களை அந்நியப்படுத்தி, ஒதுக்கி வைக்க முயல்வார்கள் மனச் சுத்தமில்லாமல்.
ஸ்டீபனுக்கு வருமானம் இந்தத் தடவை மிகக் குறைவாகவே இருந்தது. வருத்தத்தில் இருந்தான். இந்தச் சூழலுக்குப் பழகிய டிரைவராக இருந்தால், இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்றவனுக்கு நான் கொடுத்த 200 ரூபாயை வாங்க விருப்பம் இல்லை.
'லாரியில்உழைக்கும் உழைப்பு என்பது, ஏனைய உடல் உழைப்புகளைவிட கடினமானது. கொடியது. 24 மணி நேரமும் வெப்பத்தில் அமர்ந்திருக்க வேண்டும். கண், காது, விழிப்போடு இருக்க வேண்டும். கால்களும் கைகளும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் உடனடி மரணம். ராணுவ வீரனைவிட ஒரு ஓட்டுநரின் வேலை சவாலானது; துணிச்சலானது; அபாயகரமானது.
ஸ்டீபன் ஒரு வேலையை, மனிதர்களின் வலிகளைப் புரிந்து பேசுவது வியப்பாகத்தான் இருந்தது. ஸ்டீபன் தன்னுடன் வண்ணாரப்பேட்டைக்கு வரும்படி அழைத்தான். எனக்கு அப்போது அவனுடைய அரவணைப்பு தேவைப்பட்டது. ஏனெனில், இரண்டாண்டு மோட்டார் வாழ்வில் பெரும் துன்பங்களை அனுபவித்துக் கற்றுக் கொண்ட வேலையில், இன்று முதல் சம்பளம். வானம் எனக்குக் கீழே படர்ந்து இருந்தது. அதனால், அவனுடன் சென்றேன்.
அவனுக்கும் என்னிடம் மனசுவிட்டுப் பேசவேண்டி இருந்தது. சமூகக் கோபத்தைத் தெறிப்பவனைக் காதல் தெறித்து இருந்தது. அவனுக்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் வனிதாமீது காதலாம். இவன் ரூட்டுவிட்டா அவளும் நல்லா ரூட்டுவிடுறாளாம். பேசினால் படிந்துவிடும் என்று நம்பிக்கையோடு சொன்னான். நானும் ஊருக்குக் கடிதம் எழுத இன்லேண்ட் லெட்டர் வாங்கிக்கொண்டேன்.
அவனுடன் நடந்து செல்லும்போது, இதுதான் வீடென அடையாளம் காட்டினான். அதிர்ந்துபோனேன்.சாலை ஓரத்தில் பல டென்ட்டுகள். அவன் கை காட்டிய திசையில் அவனுடைய பிரமாண்டமான கூடாரவீடு நாலரை அடி உயரத்தில் நின்றிருந்தது. ஸ்டீபன் மகிழ்ச்சியாக இருந்தான். வீட்டினை நெருங்க நெருங்க... அவனுடைய குதூகலம் அதிகரித்தது. அவன் கூடாரத்தை ஒட்டிய கூடாரத்தில் மஞ்சள் நிலா ஒன்று அரை வட்டம் வெளியே எட்டிப் பார்த்தது. அந்த அரை வட்டத்தில் ஒற்றை போதையூட்டும் கண்கள் இருந்தன். அதுதான் வனிதா.
- (கனவுகள் நிஜமாகும்...)
http://en.vikatan.com/article.php?aid=24638&sid=702&mid=31
This entry was posted
on Monday, 2 September 2013
at 14:24
. You can follow any responses to this entry through the
comments feed
.