பெருங் கனவு தேசம்-6  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்

உடம்பின் அனைத்து இயக்கங்களும் மெய்மறந்து ஓடிக்கொண்டிருந்தன. அப்படியரு அதிர்வை இரண்டாவது முறையாகச் சந்திக்கிறேன். கிளீனராக வேலை பார்த்த ஒரு அதிகாலையில் கண்முன்னே ஒரு லாரியும் டாடா சுமோ வாகனமும் நேருக்கு நேர் மோதி டாடா சுமோவில் இருந்த 16 உயிர்களும் தூக்கி வீசப்பட்டுத் துடிதுடித்து உயிர் தொலைத்த அதிர்வுக்குப் பிறகு, ஸ்டீபனுடைய மரணம்.  நெஞ்சை பிழித்தெடுத்த அதிர்வு. பழகியது எட்டே நாள். உடன் பிறந்து ஒன்றாய் உயிர் நீத்ததுபோல் வலித்தது.
அண்ணா நகர் அறையில் பிழிந்த சோகம் போதாதென மீண்டும் வேலைக்குச் சென்ற இடத்தில் துணி மாற்றும்போது உடன்வந்த அவனுடைய அழுக்குத் துணியில் நீண்டது. ஒவ்வொரு நடையிலும் ஒவ்வொரு முறை மண் கவிழ்ப்பாலும் மண் ஏற்றியதிலும் அடங்காத அவன் நினைவுகள் செரிக்காமல் கிடந்து நெஞ்சைக் குதறி எடுத்தன. எவ்வளவு முயன்றும் டிப்பரின் முகப்புக் கண்ணாடி முன்பு, அவனே நின்றான்.
புதுக் கிளீனரிடம் அந்த ஒரு வார காலத்தில் நான் பேசிய, சைகையில் வினவிய, சில வார்த்தைகளைத் தவிர வேறொன்றும் பேச முடியவில்லை. அந்த ஏழு நாட்களில் டிப்பர் மூன்று பஞ்சர்களைச் சந்தித்தது. 11 முறை அணைந்து நின்றது. இருபக்க பார்வைக் கண்ணாடி (Side mirror)களும் எதிர்வரும், முந்திச் செல்லும் வண்டிகளால் உடைந்துபோயின. கிளீனருக்குப் பயம். எனக்கும்தான்.
நாமக்கல் வண்டியில் கிளீனராகப் பயணித்து வண்டியோட்டத் துவங்கியதே ஒரு வித்தியாசமான தருணம். விருதுநகர் அருகே போய்க்கொண்டு இருக்கும்போது, சற்றுமுன்பு அடிபட்டு சாலையில் ஒருவன் கிழிந்து கிடந்தான். மரணம் அவனைக் கவ்விக்கொண்டிருந்த ஒரு கணத்தில் விக்கித்து அமர்ந்திருந்த என்னிடம் ''வண்டியை இப்ப ஓட்டு'' என்று ஓட்டுநர் எனக்கு முதன் முதலாக வாய்ப்புக் கொடுத்தார். உடல் அதிர, நெஞ்சு விம்ம அந்தக் கணத்தில் வண்டியெடுத்துப் பழகிய எனக்கு... இன்று ஸ்டீபனால் பெரும் கலக்கம்.
ஏழாம் நாள் இரவு அது. கருமண்ணால் ஆன அந்த மண்குன்றில் டிப்பர் நின்றுவிட்டது. மண்குன்றின் உச்சியில் இருந்து டிப்பர், செல்ஃப் மோட்டாரை எவ்வளவோ தட்டிப்பார்த்தும் பயனில்லை. கிளீனரைக் கூப்பிட்டு, மெக்கானிக்கை அழைத்துவரச் சொன்னேன். அவன் போன சிறிது நேரத்தில் என் பெருமுயற்சிக்குப் பின் வண்டிக்கு உயிர் வந்துவிட்டது. நான் என்னுடைய வண்டியைப் பின்னோக்கி ஓட்டிச்சென்று மண்ணைக் கொட்டவேண்டும். பின்புறம் பார்த்துச் சொல்ல வேண்டிய கிளீனரை வேறு அனுப்பிவிட்டது கவலையாக இருந்தது. வேறு வழியில்லை. மண்ணைக் கொட்ட, சேறும் சகதியுமான அந்த மண் சகதியில் வண்டியை வேகமாக பின்னோக்கி எடுத்தேன். அப்பொழுதுதான் எதிலும் மாட்டாமல் இருக்கும். எனது இருக்கையில் இருந்து பின்னால், வெளியே தலை நீட்டிப் பார்த்தபடி வண்டியை மிக வேகமாகப் பின்னோக்கி ஓட்டிக்கொண்டிருந்த கணத்தில் ''டமார்'' என்ற பெரும் சத்தம் அந்த இருள் கவ்விய இரவினைக் கிழித்தபடி கேட்டது.
பெரும் பதட்டத்தில் வண்டியும் அணைந்துவிட்டது. கீழே இறங்கி ஓடினேன். அந்த மலை உச்சிக்குக் கீழிருந்து மேலே ஏற, மிக வேகமாக வந்த வேறொரு டிப்பர் நான் பின்னோக்கி வருவதை எதிர்கொள்ள முடியாமல் எனது வண்டியின் பின்புறத்தில் மோதி அதன் கேவின் எனப்படும் முன்பகுதி பிய்ந்து தனியாக தொங்கிக்கொண்டு நின்றது. அந்த வண்டியின் ஓட்டுநரும் கிளீனரும் தூக்கி வீசப்பட்டிருந்தார்கள்.
உடல் நடுங்க, என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த டிப்பரின் தலைப்பகுதி முழுதும் சிதைந்துவிட்டது. ஓட்டுநரும் கிளீனரும் கதறியபடி கிடந்தார்கள். அதற்குள் அடுத்தடுத்த வண்டிகள் வந்துவிட்டன. நான் ஓடத் தொடங்கினேன்.
அவர்கள் பிழைத்தார்களா எனத் தெரியாது. சிறைதானா இனி எனக் குழப்பம். எதிர்காலம் என்கிற ஒன்றிருப்பது  தொலைந்துபோக பதைத்து ஓடினேன். ராயபுரம் கணேசன் அடித்தே கொல்லப் போகிறான். ஓட்டுநர் உரிமம் போய்விட்டது. முடிந்தது வாழ்க்கை. விடியப் போவதில்லை இரவு.
ஏழுநாள் படியும் வாங்கவில்லை. கிடைத்த ஒரு வாகனத்தில் தப்பியோடினேன். ஸ்டீபனோடு துவங்கி, ஸ்டீபனோடு முடிந்துவிட்டது. கையிருப்பை வைத்துக்கொண்டு அண்ணா நகர் வந்துவிட்டேன். பசிக்கவில்லை. இரண்டு உயிர்களைக் கொன்றுவிட்ட தகிப்பு உடலில் வெந்துகொண்டிருந்தது.
பொதுத் தொலைபேசி நிலையத்தில் இருந்து ராயபுரம் அலுவலகத்துக்கு நடுக்கத்தோடு போன் பண்ணி, எனது புதிய கிளீனரின் பெயர் சொல்லி இருக்கானா என மதியம் 3 மணிக்குக் கேட்டேன். போனை எடுத்த கணேசன் என் குரலினைக் கண்டுகொண்டார். அவரிடம் நான் இதுவரை பேசிய வார்த்தைகள் இருபதுதான். மூன்று வாரங்களுக்கு மேலாகிப்போன அந்த இருபது வார்த்தைகளின் சொந்தக்காரனை அவர் அடையாளம் கண்டது புரிந்ததும் பெரும் அழுகை வெடிக்க, ''நான் ஒண்ணும் பண்ணலேண்ணே... மேல ஏறின வண்டிதான் நான் ரிவர்ஸ் வர்றதைக் கவனிக்கலை'' என்றழுதேன்.
''எல்லாம் கேள்விப்பட்டேன்... தப்பு உன் மேல இல்ல... நீ நேர்ல வா பேசிக்கலாம்'' சரியென அவரிடம் கூறிவிட்டாலும் நேரில் செல்ல பயம். தொடர்ந்து இரண்டு நாட்கள் யோசித்து மூன்றாம் நாள் தயங்கித் தயங்கிப் போனேன். பல மணி நேரக் காத்திருப்புத் தொடர, கணேசன் வந்தார்.
''தப்பு உன்மேல இல்லேன்னாலும் வண்டிக்குப் பெரிய சேதம். நான் மொதலாளிக்குப் பதில் சொல்லணும். நீ ஏழுநாள் ஓட்டின காசு 7,000  ரூபாய் இருக்கு. மீதி 15,000 கொடுத்துட்டு லைசன்ஸ் வாங்கிக்க''
அவர் அப்படிச் சொன்னதும்தான் கொஞ்சம் தெம்புவந்தது. வண்டிக்கு நடக்கும் பாதிப்புகளை நிர்வாகமே பொதுவாக ஏற்றுக்கொள்ளும் என்றாலும் இதுபோன்ற விபத்தின் மூலம் கணேசனின் தனி வருமானமாக அது மாறும். வண்டியில் அடிபட்ட ஓட்டுநர், கிளீனருக்குப் பாதிப்பில்லை. விழுந்தது மண்ணில் என்பதால் பிழைத்தார்கள்.
நானும் பிழைத்துக்கொண்டேன். ஆனாலும் ஓட்டுநர் உரிமம் கையில் வாங்க, 15,000 வேண்டும். என்ன செய்வது?
(கனவுகள் நிஜமாகும்..)
 http://en.vikatan.com/article.php?aid=25486&sid=735&mid=31

This entry was posted on Monday, 2 September 2013 at 14:28 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment