பூச்சாண்டி 4  

Posted by நாண்

தமிழ் நாட்டின் தற்போதைய ஒரே ஒரு முக்கியமான தலைப்பு செய்தி... உடனே நீங்க அதீதமா கற்பனை குதிரைய கண்டமேனிக்கு ஓடவிட்டு பரபரப்பா யோசிக்காதிங்க..
                                     
                       முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் பிரச்சனைய தீர்க்க நடவடிக்கை எடுத்திருப்பாங்க போல அப்புடினோ , கனிமொழி தன் தவறை ஒத்துக்கிட்டு தண்டனையை அனுபவிக்க தயாராயிட்டாங்க அப்புடினோ, சோனியாவையும் ராஜபக்சேவையும் ஐ நா சபையில நிப்பாட்டி நார் நாரா கிழிச்சுட்டாங்க அப்புடினோ அதிமுக்கியமான  செய்தியை எல்லாம் நான் சொல்லமாட்டேன்.. இதெல்லாம் நடக்காதுன்னும் , ஒரு வேலை நடந்தா அன்னிக்கு உலகம் கண்டிப்பா அழிஞ்சுபோயிடும்னும் எனக்கும் தெரியும்..


                                                  இது அதை எல்லாம் விட முக்கியமான ஆனா கொஞ்சம் சோகமான செய்தி.. கிட்டத்தட்ட தமிழ்நாடே முக்கி முக்கி மூச்சு விடாம ஒப்பாரி வைக்க வேண்டிய பெரிய சோகமான செய்தி.. உடனே பரபரப்பா மறுபடியும் ஈழ மக்கள் பிரச்சனை போலன்னு யோசிக்காதிங்க.. அப்புடியான செய்தியாவே இருந்தாலும் நாம எதுக்கு அழப்போறோம்.. நாம எல்லாம் தமிழனுங்களாச்சே.
அதும் இந்தியாவ சேர்ந்த தமிழ்நாட்டு தங்க தமிழனுங்க வேற.. நாமளாவது..
தமிழன் செத்தா அழுகுறதாவது?  அப்புடியான சிரிப்பு செய்தியெல்லாம் இல்ல.. இது ரொம்ப சீரியஸ் செய்தி... ஐயோ அழுவுங்கப்பா.. அழுதுகிட்டே கேளுங்க.. நம்ம ஒப்பற்ற ஒரே தலைவர் ரஜினிகாந்த் உடல் நிலை சரி இல்லாம   ஆசுப்பத்திரியில இருக்காரு... எப்புடி அழுகை வருது... இப்ப சொல்லுங்க இதைவிட முக்கிய சோக செய்தி உலகத்துல இருக்குதா? உடனே
நீங்க செய்யவேண்டியது ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் அழிக்கிறதுதான்... முடிஞ்சா இந்த உலகத்தையே அழிச்சா கூட சந்தோசம்.. எது?! போடா(...................) வா?! இப்ப எதுக்கு என்னை இவ்வளவு கேவலமான வார்த்தையில என் பரம்பரையவே தோண்டி எடுத்து திட்டுறீங்க?! எங்க அண்ணன் தம்பிக எல்லாம் செஞ்சுருக்கிறதை பாருங்க.. என் பேச்சு எவ்ளோ  சரின்னு உங்களுக்கே தெரியும்...
                                                                
வீட்டுல கஞ்சிக்கே வக்கில்லேனாலும் பத்து வட்டிக்கு கடன் வாங்கி தலைவர் படம் நூறுநாள் ஒடனும்னு பாலாபிசேகம் செஞ்சவுங்க இப்போ ஒரு படி மேலே போயி ஏழு மணி நேரம் யாகம் செய்றாங்க.. அம்மாவுக்காக அரை கிலோ மீட்டார் தூரம் கடைக்கு போயி மாத்திரை மருந்து வாங்கி தராதவன் தலைவர் சரியாகனும்னு 1305 படிக்கட்டுகளை முட்டி போட்டு ஏறி பிரார்த்தனை பண்றான்.. 
                                                           
   உள்ளூர்ல  சொந்த அண்ணன் தம்பிகளை (தலித்துகளை) தேரை தொட விடாம விரட்டி விரட்டி வெட்டிபொட்டவன் தமிழையே தப்பு தப்பா பேசுற எவனோ ஒருத்தனுக்காக வெள்ளித்தேர் இழுக்கிறான்... வீட்டுல பொண்டாட்டி புள்ளைங்களுக்கு சுடு தண்ணி கூட வச்சு தராதவன் அவர் சரியாகனும்னு தீச்சட்டி  எடுக்கிறான்....  
                                                               
இவனுங்க போதாதுன்னு எங்க அக்கா தங்கச்சிக ஒரு படி இன்னும் மேல போயி கோயில்ல சிறப்பு பிரத்தனை பண்ணி விரதம் இருக்கிறாங்க..
                                                           
இப்ப சொல்லுங்க இவனுங்ககிட்ட எல்லாம் தமிழ் விடுதலை, தமிழர் விடுதலைன்னு  பேசுறவன் பைத்தியக்காரன் தானே... கொத்து கொத்தா ஈழத்தில் செத்து விழுந்தப்போ கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிச்சு ஒட்டக்கூட நாதி இல்ல...இருக்குறவன் பூராம் சொந்தங்களை தொலைச்சுட்டு நிக்கிறானேன்னு அழுதததும் இல்ல..எந்த போராட்டத்துக்கும் வந்தது இல்ல..நம்ம எல்லாம் போராடுவோம்னு நினைச்சு தீக்குளிச்சு செத்தவன் வீடு பக்கம் கூட போகல...
                                                             
  இவன் உழைப்பால கிடைச்ச கொஞ்ச பணத்தையும் டிக்கெட் எடுத்து வாழ வச்சதோட நிறுத்திக்கல.. இன்னும் இன்னும் நிறைய குடுக்கனும்னு எப்புடி அலையுறான் பாருங்க.. உடம்புக்கு சரி இல்லாம போவது இயற்கை.. பணம் இல்லாதவனுக்கு வேணும்னா பிழைக்கிறது சிரமமா இருக்கலாம்.. தேவைக்கு அதிகமா பணம் இருக்கிறவன்
தானே சாகுறேனு சொன்னாலும் மத்தவன் பொழைக்க வச்சுடுவான்....
                                                                 
  ஏதோ ரஜினி என் சாப்பாட்டுல மண்ணை அள்ளி போட்டுட்டார் போலன்னோ , அவர் மேல எனக்கு தனிப்பட்ட கடுப்புன்னோ, வயித்தெரிச்சல் பிடிச்சோ நான் இதை பேசல..அவர் தொழிலை அவர் செய்தார்.. அதற்காக எல்லாம் அவரை  என் தலைமுறையின் தலைவனாகவோ, கடவுளாகவோ நம்மால் கொண்டாட முடியாது.. ஒரு சக மனிதனாக  அவர் உடல்நலம் குன்றியமைக்கு வருந்தலாம்.. அவ்வளவே...
                                                                     ஏற்கனவே தமிழனை இருக்கிற நாயி நரி எல்லாம் ஏறி மேஞ்சுக்கிட்டு கிடக்கிற இந்த சூழலிலும் இப்படியான வேலை செய்றவனை என்ன  செய்யலாம்? தயவு செய்து மக்களே .., இது போன்ற முட்டாள்களை எங்கேனும் சந்திக்க நேர்ந்தால் யோசிக்கவே வேண்டாம்.. நங்கு நங்குன்னு நாலு கொட்டு வைங்க.. நாலு அரை அறைய முடிஞ்சா இன்னும் சந்தோசம்... இவனுங்களை இப்புடியே விட்டா நாளைக்கு ரஜினிய சாமியாக்கி நம்ம இனத்தை இன்னும் கூடுதலா அசிங்கபடுத்தினாலும் கூட  ஆச்சரியப் படுறதுக்கில்ல....  

                                         

காற்றில் அலையும் கனவுக் குழந்தைகள் ..  

Posted by நாண்

ஒரு அலைபேசி அழைப்பில்தான்
துவங்கியது நம் காதல்...
அடுத்த அழைப்பில்  நானும் நீயும்
கணவன் மனைவியானோம்..
தொடர்ந்த அழைப்புகளில் நம் 
உடல் வேட்கைகளாலும்
வெப்ப வார்த்தைகளாலும்
நிரம்பி வழிந்தது....
நம் கனவுப் படுக்கை அறை..
மூன்று குழந்தைகளுடன்
வாழ்வின் எல்லா அடுக்குகளையும்
மகிழ்ச்சியால் திளைக்க வைத்தோம்..
நம் குழந்தைகள் பள்ளி சென்ற ஒரு
சுப தினத்தில் என் அலைபேசி அழைப்புடன் 
நம் காதலும் உன்னால் துண்டிக்கப் பட்டது..
அனாதைகளாய் காற்றில் மிதந்து
திரிகின்றன நம் குழந்தைகள் ...

பெண் விடுதலை ..அப்படின்னா..??  

Posted by நாண்

பெண் விடுதலை குறித்தான தொடக்க கேள்விகளிலேயே ஆண்களின் வலைப்பின்னல் சூத்திரத்தால் அது நீர்த்து போகவே செய்கிறது..
                                                                                                                                                                             துவக்கத்தில் பெண் வழி சமூகமாக இருந்த நமது நாகரிகம் ஆண் வழி சமூகமாக நீண்டு ..ஆண்களின் ஏகோபித்த விடுதலைக்காகவும் இன்ன பிற சமூக குடிகள் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமும் பெண்களுக்கான வரையறைகளை கட்டமைத்து அதன் விடுதலை பற்றிய நீண்ட விவாதங்கள் தொடர்ந்து கிளம்புகின்றன..                                                                                                        
ஆனால் இன்று பரிமானமடைந்திருக்கும் விடுதலையின் வேட்கையானது பெண்களின் உடையிலேயே முடிந்து போகிறது என எண்ணுகிறேன்..
                               
''நீச்சலுக்கு செல்லும் பெண் நீச்சல் உடை அணியாமல் சாரியா க...ட்ட முடியும்? கடற்கரையில் ஒரு பெண் நீச்சல் உடையில் இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? கடலில் நீந்தவும் குளிக்கவும் அதுதானே வசதியானது? அது எப்படி ஆபாசமாக - கலாசாரத்திற்கு எதிராக முடியும்? தமிழ் ஆண்கள் வேட்டி கட்டிக்கொண்டா அலைகிறார்கள் இல்லையே. ஆண்கள் மட்டும் விதவிதமாக மேற்குலக ஆடைகளை அணியலாம், பெண்கள் மட்டும் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும். ஆண்கள் வசதியாக எல்லா ஆடைகளையும் கழட்டி விட்டு சிறு காற்சட்டையை அணிந்து கொள்ளலாம் ஆனால் பெண்கள் மட்டும் வேகாத வெயிலில் பொசுக்கும் வெப்பத்தில் மீட்டர் கணக்கில் சாரியை உடலில் சுற்றிக்கொள்ள வேண்டும். கலாசார காவலர்களே இது என்னப்பா நியாயம்?''என எமது நண்பர் ஒருவரின் எழுத்தின் வழியே தான் எனக்கும் இது தோன்றியது..                                                                                                                             
ஆசிய கண்ட பெண்களுக்கு உடைகள் விடயத்தில் ஒரு தனித்துவ மேன்மை வெவ்வேறு இனங்களுக்குள் வேறு மாதிரியாக இருந்தாலும் ஆனால் பெண்களே கலாச்சார உடையணிய கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.. என்கிற மாயை இருக்கிறது..எனக்கு தெரிந்து இதில் நான் வேறுபடுகிறேன்..நமது கலாச்சாரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதே..ஆனால் பெண்களின் மீது மட்டும் அது விடிய பல காரணங்கள் இருக்கின்றன..                       
                                                                                 ஆசிய கண்டத்தில் எவ்வளவு ஆணாதிக்கம் மிகுந்திருந்தாலும் ஆணேஅதிகாரத்தை செலுத்தினாலும் நமது தொல் குடியின் பெண் வழி சமூக நிலையே இன்னமும் இங்கு நிகழ்கிறது..பெண்களே சமூக நிலையை உள்ளோடி நிர்ணயிக்கிரவர்களாகவும் ஆண் அதிகாரத்தின் பின்னிருந்து இயக்கம் சக்தியாகவும் எமக்கு படுகிறது..அதே சமயம் ஒரு படி நிலையில் பிறப்பு முதல் இறப்பு வரை ஏதாவது ஒரு ஆணை சூழ்ந்தே அவள் இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது..அதற்க்கு நம்முடைய முன்னோர்களே அழுத்தமான காரணிகளாக இருக்கின்றனர் .குழந்தை திருமணத்தின் மூலம் அவளின் உரிமைகள் மறுக்கப்பட்டு அதுவே நெடிய பிற்போக்குதனங்களுக்குள் அவளை அடைத்திட முதல் காரணியாக அமைந்தது..இது மேல் தட்டில் மட்டுமல்ல தலித் முதலான ஒடுக்கப்பட்ட சமூகத்திலும் இப்படியே..சாதியாலும் ,உடமை மறுப்பாலும்,அதிகார மறுப்பாலும் பெரும் அவதிக்குள்ளானது பெண்களே..இந்தியா போன்ற நாடுகளில் புரட்சியின் வடிவம் சுருங்கி போனதற்கு பெண் விடுதலையை ஊக்கப்படுத்ததது மிக முக்கியமான காரணம்.
                                                                                                    
.நமது பெரியார் இங்கே பெண் விடுதலை குறித்து பேசும்போது மேலை நாடுகளில் பெண்களுக்கான விடுதலை ஓரளவு நிகழ்ந்தே இருந்தது..அங்கே பெண்கள் அதனாலேயே நுகர்வு கலாச்சாரத்தின் மிக பெரிய வளர்ச்சி நிலையிலும் தங்கள் விடுதலையை தக்க வைத்துக்கொள்ள முடிந்தது..    மேலை நாட்டு பெண்கள்   நீண்ட பாரம்பரியத்தை சுமந்தும் அதிலிருந்து பெண்களுக்கான விடுதலையை நோக்கி முன்னேறியும் ,அவர்கள் எல்லா சமன் பட்டியலை கற்றபிறகு நிகழ்ந்த பொது தன்மை அதுவென நினைக்கிறேன்,,அதற்க்கு முன்பாக பல நூறு ஆண்டுகள் மேலை நாட்டு பெண்களும் தங்களுடைய சமநிலைக்கான விடுதலையை வென்றெடுத்த பிறகே .. இன்று நீங்கள் பேசும் பொது தன்மைக்கு மாறி இருக்கிறார்கள்.              
                                                                                                         .    ஆனால் இங்கே நடப்பது வேறு..அவர்களுக்கான சமன் பாட்டியல் பற்றிய அக்கறை இல்லாத ,சின்ன சின்ன முணுமுணுப்புகளை தவிர ஏதும் பெண்களுக்கு ஆதரவாக நிகழ்ந்து விடாத சூழலில் காலனியை விட்டு ஓடிய நாட்டாமைகள் அங்கிருந்த படியே நவகாலனியின் மூலம் இங்கே ஆதிக்கம் செலுத்த வணிகத்தை பரப்ப முகப்பூச்சிளிருந்து ஜட்டிவரைக்கும் பெண்களை மாடலாக தேர்ந்தெடுத்தனர் 
                                                                                                                                               ..இங்கிருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்குமான இயங்கியல் கவர்ச்சியை பெரிது படுத்தி அழகை மூலதனமாக்கி,வெள்ளைத் தோலை சிறந்ததாக மாற்றி அவர்களின் வணிக மனோபாவத்திற்கு வளரும் நாடுகளை இறையாக்க திணிக்கப்பட்ட உலகமயமாக்கலால் மேலும் பெண் உடல் மீதான வேட்கையை செலுத்தி ,ஆசிய நாடுகளை மயக்கி வைத்திருக்கின்றன ..இதன் மூலமாக இந்த பண்பாட்டியல் வளர்ச்சிகள் பெண் விடுதலைக்கு பதிலாக பெண் மீதான இனக்கவர்ச்சி மாயாத்திர்க்குள்ளேயே சிக்க வைக்கின்றன..                            இந்த ஊடக வன்முறை மூலம் பெண்களின் மீதான உடை நெகிழ்வுகள்  கூட ஆண்களை தூண்டி விட எதுவாக குறிப்பாக இந்திய திரைப்படங்கள் உருவாக்கிய நுகர்வு தன்மைக்கு பெண்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.                                                                                 .உலகெங்கிலும் பெண்கள் விளம்பர போக பொருளாக பயன்படுத்தப்பட்டாலும் சூழல்கள் வேறு வேறாக இருந்தன.கல்வி,வேலை,அதிகாரம் என ஆசிய பெண்கள் கண்டடையும் முன்னே மிக பெரும் வணிக பொருளாக பெண் மாற்றப்பட்ட படியால் உண்மையான விடுதலையை நோக்கி நகர்வதர்க்குள் உடை மீதான (அதுவும் குறிப்பான வணிக உத்தி)விடுதலையில் பெண்கள் நகர்ந்தது அல்லது நகர்த்திய காரணிகள் சிலவால் தேங்கி நிற்கிறது..உடை விசயத்திற்கு பேசுவதை விட அரசியல் அதிகாரத்தை சமன்படுத்த ,பகிர்ந்து கொள்ள தூண்டப்படுவதில்லை பெண்கள் என்பதை கவனித்தாலே..இதும் ஆண் செலுத்தும் வணிக உத்தியில் பெண்களை மடை மாற்றுவதே..                                                                                           ஆண்கள் இந்திய ,ஈழ சூலில் வெறும் கோவணம் கட்டி  பெண்கள் மத்தியில் நடமாடும் நிலை இருந்தது..ஆனால் இன்று நுகர்வின் பெரும்பகுதி பெண்ணை மையப்படுத்தி இருப்பதாலும் ஊடக பாலியல் வன்முறை நடப்பதற்கு முன் காலங்களிலேயே பெண் ஆணுக்கு நிகரான விடுதலை மனோபாவத்தை உருவாக்க முடியாமல் போன தொல்வியாலுமே இது தொடர்கிறது என நினைக்கிறேன்..                                                                                                                           இதை உடைக்க என்ன வழி என்றும் நான் யோசித்து குழம்பியாயிற்று,,நடக்கிற இந்த மாற்றங்களோடு பாலியல் உணர்வை கடந்து நிற்கிற மனநிலைக்கு எப்படி தயாராக முடியுமென தெரிய வில்லை..                                                         பெண் விடுதலைக்கான மாற்றம் இத்தகையே நெருக்குதல் களோடுதான் நிகழுமெனில் அதை உள்வாங்கி கொள்ளத்தான் வேண்டும்..அல்லது ஒரு சர்வ வல்லமை படைத்த அரசு அதிகாரத்தின் மூலம் அது தன நேர்மையை இழக்காமலும்,கொள்கை உறுதி மூலமும் ,பெண் விடுதலையை வென்றெடுக்க வேண்டும்..ஒரு தலை முறை மாற்றத்திற்கு பிறகு அந்த சர்வ வல்லமையும் தகர்ந்து போக வேண்டும்.                                                                                                                                                     
.இது சாத்தியமா இல்லையோ..இது போன்றதொரு நடவடிக்கைகள் நிகழ வில்லையெனில் ஆண்களை உருவாக்கி வைத்திருக்கும் பன்னாட்டு கம்பனிகளின் வியாபார தந்திர வெற்றியை (பெண் மீதான நுகர்வு )ருசித்த படியே தான் ஆசிய கண்ட பெண்களின் விடுதலை நிகழும்..அது எல்லா கட்டுடைத்தலையும் நிகழ்த்துவதான மாயையில் பிற்போக்கை நோக்கி மேலும் நீளும்..அதோடு பெண் விடுதலை குறித்து ஆண் விவாதிப்பதே தவறு பெண்களையே விவாதிக்க விடும்போதுதான் உண்மையின் எல்லையை தொடும்..இல்லையெனில் ஆண்களான எங்களுக்குள் பெரியாரை(அதிலும் ஆண்)  படித்திருந்தாலும் கூட முழுமையான விடுதலைக்கான பாதையை பெண்களுக்கு விடுவோம் என்பது மாயையே..அப்படி ஆண்கள் சொல்வதும் ஒரு தந்திரமே..
உங்களிடமிருந்து வேறு சரியான சாட்டையடிகளை எதிர்பார்க்கிறேன்....

எனக்கு தேவை சில விளக்கங்கள்..  

Posted by நாண்


                        தமிழ் சூழலில் குறும்படங்கள்..
 தமிழ் பெரும்பரப்பில் வணிகமயப்பட்ட திரைப்படங்களின் ஊடாக மேல்தட்டு மனோபாவங்களும்,கலைக்கு எதிரான வன்முறை சொல்லாடல்களும் கொழுத்து கிடந்தன..

                     நான் சென்னையை நோக்கி இடம் பெயருகையில் குறும்படம் ,ஆவணப்படம் ,செய்திப்படம் என்கிற சொல்லாடல்கள் என் காதுகளை முதன் முதாலாக வந்தடைந்ததே எனது நண்பன் உமர்,மற்றும் மாறி மகேந்திரன் மூலமாகத்தான்..உலக சினிமா என்கிற வேறு ஒரு அடையாளம் மிக்க தனித்த திரைப்படங்கள் புதிய உலகை காட்ட துவங்கிய தருணம் அது ,ரஜினி,கமல்,எம் .ஜி .ஆர் ,சிவாஜி ,ராமராஜனை தவிர பெரிய புரட்சிக்கான மூலம் தெரியாத நான் புதிய உலகங்களை கண்டடைந்த பொது நண்பர் விஸ்வாமித்திரன் மூலம் அவரது அறைகளில் சித்தா மருந்து அரைத்துக் கொண்டு அதிக புரிதல்களை நோக்கி பயணப்பட்டிருந்தேன்..அதன் நீட்சியாக டான் போஸ்கோவில் அஜயன் குறும்பட விழாவை நடத்தும் பொது சிறிய கதவில் பெருங்காற்று நுழையக்கண்டேன்..
  


 அப்பொழுதெல்லாம் இன்னும் சிறிய வகை ஒளிப்பதிவுக்கருவிகள் மக்களிடம் வந்திருக்க வில்லை ..ஆனால் அந்த குறும்பட விழா எனக்கு பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்தியது..நிழல் தொடங்கியது..அந்த சந்தர்ப்பங்களில் தான்..
   

 அப்படி தீரா தாகத்தோடு திரைப்படங்களுக்கு மாற்றாக தமிழ் சூழல் குறும்படங்களின் மூலமும் ஆவணப்படங்களின் மூலமும் சமூகத்தின் சொல்லா வொண்ணா வாழ்க்கையை பல குறும்பட இயக்குனர்கள் பதிவு செய்தனர்..

       திருநாவுகரசிலிருந்து,எடிட்டர் லெலின்,லீனா,அஜயன்,பாரதி வாசன்,..என ஒரு பெரும்படையே கிளம்பியது..

                 கையடக்க கருவியால் புறந்தள்ளப்பட்ட வாழ்க்கையின் துயரங்கள்,இயலாமை,கசப்பு,கோபமென,அதன் வீச்சு இனி வெட்டவே முடியாத ஆல மரம்போல தனது இருப்பை உலகுக்கு அறிவித்தார்கள் படைப்பாளிகள்..புதிய புதிய குறும்பட  இயக்கங்கள் முளைத்து திசைகளை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்..


      

                       சுரேஷ்வரன் போன்ற எமது தோழர்கள் நடிப்பு பயிற்சி,அளித்து புதிய புதிய முகம் மறுக்கப்பட்ட தமிழர்களை பார்க்க அனுப்பினார்கள்..

மக்கள் தொலைக்காட்சியும் ஊடக அளவில் பெரும் பங்காற்றியது..அபோழுதுதான் கலைஞ்சர் தொலைக்காட்சியும் குறும்படங்களை கையில் எடுத்தது..எல்லோரும் மகிழ்ந்தோம்  ..வணிக பெருநெருப்பை கொண்ட அரசின் தொடர்பை அருகில் வைத்திருக்கும் மாபெரும் ஊடகம் குறும்படங்களை கையில் எடுத்தபொழுது யாருக்குமே சந்தேகம் எழ வில்லை..அது நம்மையே சாய்க்கும் கோடரி என அறியவில்லை..அதற்க்கு வேர் விட இடம் தர நிறைய பேர் முன் வந்தார்கள்..ஆனால் அது பெரும் வணிக மந்திரங்களில் கட்டுப்பட்டு விட்ட திரைக்கு மாற்றாக முழித்த அந்த ஆல மரத்தின் அடியில் ஊற்றிய வேர் அழுக்கி மருந்தாக மாறும் என நினைக்கவே இல்லை..
                       பொண்ணுங்கள எப்படி மடக்குறது..,தம் அடிக்கிறது எப்படி,பொறுக்கியா ஏன் ஆனேன்,அப்பாவை எப்படி ஏமாத்துறது..இப்படி ஆரோக்கியம் மிகுந்த குறும்படங்களை கொடுத்து பார்ப்பன இயக்குனர்களையும்,அறிவுஜீவி புடுங்கிகள் என்ற பெயரில் விமர்சனம் வைக்கிறேன் என்ற பெயரில் நமது வீரிய விதகை அழிக்கும் விதமாக கெக்க பிக்கே என பிதற்றும் வகையிலும் கமர்சியலா இருக்கு என பேச வைத்தும் ..என்கிற பெருந்திரைப்பட மனோபாவத்தை விதைக்கும் நச்சுவாக மாற்றியிருகிறது..

               ஒரு சில நல்ல முயற்ச்சிகளும் இன்று அடிபட்டு ,,ஆனந்த் பட்வர்த்தன் போன்றவர்கள் சிறை சென்றாவது மீட்டெடுக்க முயற்சித்த ஆழுமைகள் மழுங்கடிக்கப்பட்டு இன்று தன்னை இழந்த நிலையில் குறும்படங்கள் செத்துக்கிடக்கின்றன..கொஞ்சமே கொஞ்சமான ,நிழல்,தமிழ் ஸ்டுடியோ ,இன்னபிற இயக்கங்களை தவிர அதன் செயல் தொலைந்து பிணமாகி போயின..இனி என்ன செய்வீர்கள்..தயவு செய்து இந்த மாதிரி ஊதாரித்தன ,பிற்போக்கு,ஆதிக்க சக்திகளிடமிருந்து..

       மீண்டும் வறியவரின் வாழ்வை பேச குறும்படங்கள் அதன் வீரியத்தோடு முளைக்குமா  ..என்கிற ஆதங்கம் என்னையும் இருட்டில் அமர வைக்கிறது..

கைக்கு அடக்கமா பொண்ணு...  

Posted by நாண்

சமீபத்தில் ஊருக்கு சென்று இருந்தேன்.. ஒரு நண்பரை எதிர்பாரா விதமாக எதிர்கொள்ள வேண்டி வந்தது.. வழக்கமான நல விசாரிப்புகள், தொழில் பற்றிய விசாரணைகள் எல்லாமும் இனிதே முடிய கடைசியாக அவரது கேள்வி திருமணம் எப்போது?... பெண் தேடுகிறேன்.. விரைவில் கிடைப்பின் மிக விரைவில் திருமணம் என்றேன்.. 'அப்புடி என்ன உலகத்துல இல்லாத பொண்ணு தேடுற?' என்றார்.. உலகத்துல இருக்குற பொண்ணுதாங்க தேடுறேன். கை நிறைய காதலும் கண்கள் நிறைய கனவுகளும் கொண்ட பெண்ணை தேடுறேன் என்றேன் நான்... அதற்க்கு அந்த நண்பர் கொந்தளித்தோ,கொதித்தோ, இல்லை ஏளனமாகவோ அதுவும் இல்லேன்னா வேற ஏதோ ஒரு இளவா சொன்னாரோ தெரியல.. 'என்னய்யா பேசுற.. கை நிறைய காசு இருக்குற கைக்கு அடக்கமான பிள்ளையா பாத்து கல்யாணம் பண்ணனும்யா.. அவதான் நம்ம கால சுத்தி கிடப்பா..' அப்புடின்னாரு.. தயவு செஞ்சு நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்.. எனக்கு அவர அடிக்கணும் போல இருந்ததால அடிக்கிற மாதிரியே ஒரு வார்த்தை சொன்னேன்.. அது என்னனு கடைசியா சொல்றேன்.. படிச்சுட்டு தப்பா சரியானு சொல்லுங்க.. ............................................................................
'கைக்கு அடக்கமா கர்ச்சீபுல இருந்து கத்திரிக்கா வரைக்கும் நிறைய இருக்குடா வெண்ணையாண்டி.. காசு ஏடிஎம் மிசின் வச்சுருக்கு.. நெளியிற பாம்பு கூட கால சுத்திதான் கிடக்கு.. எதையாவது கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துங்கடா வெளக்கெண்ணைகளா.. அதுக்கு ஏன் உசுரும் ஆறு அறிவும் சொரணையும் இருக்கிற பொண்ண கல்யாணம் பண்றீங்க? நீங்க மட்டும் இல்லாம உங்க சந்ததி முழுக்க உங்கள மாதிரியே ஆளுங்களையா  உருவாக்கி ஒரு  சாதி,மதம்னு குட்டி வளையத்துக்குள இழுத்து விடுற முன்மாதிரிகளா உருவாக்குறீங்க.. நீங்கல்லாம் இருந்து கெடுக்கிறதுக்கு அரை முழ கயிறு வாங்கி நாண்டுக்கிட்டு தொங்குங்க.. எங்க புள்ளைங்க நிம்மதியா படிக்கும், தப்பான ஆளை அடிக்கும்,ஈழத்து புலிகளை போல தமிழ் தேசிய விடுதலையை முன்னெடுக்கும், முக்கியமா உங்கள மாதிரி ஆளுங்க உயிரையும் எடுக்கும்.. உங்கள கெஞ்சி கேக்குறேன் செத்து போங்களேன்..' 

கல்வியை தின்னும் பச்சோந்திகள் ..  

Posted by நாண்



                      சமச்சீர் கல்விக்கு விழுந்தது ஆப்பு..
காரணம் தரமாக இல்லையாம் ..புதிய அரசு புரட்ச்சிகரமாக ஒன்றை கண்டு பிடித்து விட்டது..
                                கிட்டத்தட்ட மொழியியல் வல்லுனர்களாலும் தேர்ந்த பேராசிரிய,ஆசிரிய குழுமங்களாலும் கண்டடைந்த பாடப்புத்தக  வடிவம்..புதிய அரசுக்கு ஏற்ப்பானதாக  இல்லையாம்....புதிய அரசுக்கு இது ஏன் ஏற்ப்பானதில்லை என்றால் கருணாநிதிஅந்த புத்தகம் முழுக்க  தன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறார் ..அதுதானே..நான் கேட்கிறேன் எந்த அரசுதான் அவர்களை அவர்களே புகழ்ந்து கொள்ளாமல் இருந்தன..அதையும் அடுத்த வருடத்திற்குள்  மாற்றி விட இயலாதா..?அவ்வளவு கடினமான வேலையா இது..
                   
                             கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வெளி வந்தும் விட்டன..அதையே எத்தனையோ பெற்றோர் வாங்கியும் விட்டனர்..இப்படி இருக்கையில் அரசு சாமார்த்தியமாக மறைக்கிறது.. இதில் கருணாநிதிக்கு ஆதரவான கருத்து இருப்பதால் மட்டுமே ஜெ எதிர்க்கிறார் என்ற மாய வலையை தாண்டி உண்மை வேறு தளத்தில் இயங்குகிறது.மெட்ரிக் உரிமையாளர்களும் தனியார் கல்வி அமைப்புகளை வைத்திருக்கும் கபோதிகளும் தங்களது பணக்கொல்லைக்கு எதிராக உருவாகி வரும் சமச்ச்சீர் கல்வியை தடுத்திருக்கிறார்கள் ..


                            ஆட்சி மாற்றத்தின் மூலம் நமக்கு கிடைத்திருக்கிற முதல் பேரிடி..கிராம மாணவர்களும் நகர மாணவர்களுக்கும் தொன்று தொட்டு ஒரு மிக பெரிய கல்வி இடைவெளியை உருவாக்கிய ஆரிய வர்க்கம் ,தொடந்து தனது மனநிலையை காட்டி வருகிறது..எல்லா தரப்பு மாணவர்களுக்கும் ஒரே சீரான கல்வி கொடுப்பதால் ஏற்படும் மாற்றத்தை சகிக்க முடிய வில்லை ஆட்சியாளர்களால் ..

           எப்போதும் ஊழல் பற்றி பேசினால் தலித் எனவும் பெண் எனவும் ஊளையிடும் ,கருனாநிதிகளால் நல்லதிட்டங்கள் போகும் பொது மட்டும் குரல் கொடுப்பதே இல்லை..

                              எத்தனையோ வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய சமச்சீர் முறை காலம் கடந்து சமூகமே பெரும் மனச்சிக்கலில் தன குழந்தை மீதான வாழ்வியல் தேடலில் சிக்கி தவிக்கும் பொது வந்திருக்கிறது..அதற்கும் கேவலன்கேட்டவர்களால் ஆப்பு விழுந்திருக்கிறது..

மனித தன்மை பேசி ..மானுடம் கொல்லும் சிலருக்கு ..  

Posted by நாண்

 

                    நான் முதலில் என்னிலிருந்தே துவங்குகிறேன் ..எனக்கான சிறுவயது விளையாட்டுக்கள் அற்பமானவை ..பக்கத்து வீட்டு பையனை கில்லி விட்டு ஓடுவது,,அண்ணனின் பையிலிருந்து பணம் திருடி சினிமா பார்ப்பது இப்படி தொடர்ந்த வாழ்வில் சிறு சிறு மாற்றங்கள் ..                                         வாழ்வும் எனக்கான மனிதர்களுமாக காலம் பெரியாரையும் அம்பேத்காரையும் உள்வாங்க தொடங்கியிருந்த நேரம் ..அப்போதும் கோயிலுக்கு போவது..அய்யர்களை எப்போதும் வணங்குவது என தொடர்ந்து கொண்டிருந்தது..கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் விழைந்தது ..அதே போலவே பல சிந்தனைவாதிகளின் வாழ்வும் அவர்கள் ஆயுதம் தேடும் போது தனது தெரு சண்டைக்கு பயன்படுத்திக் கொண்டதும் நிகழ்ந்தது ..முழுமையாக உள்வாங்கல் நடப்பதற்குள் சில சம்பவங்கள் உற்ற நண்பருடன் கூட நிகழ்ந்தது ..                                                                                                                                                                        ஆனால் காலம் முழுவதும் அதை சொல்லியே அவர்களின் சீரிய போக்கை விமர்சிக்கும் காவல் துறை குணம் அவர்களிடமிருந்து வெளியேறி பின் தன்னையே தனக்கு தலைவனாக அறிவித்துக்கொண்டு சிலரால் செய்ய முடிவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது..பெரியார் நாயக்கராக பிறந்த போதும் பின்னாளில் மானுடம் விளங்க வாழ்ந்த போதும் நாம் அவரை வழிகாட்டியாக மதிக்கிறோம் நமக்கு ஆதாயம் இருக்கும் பட்சத்தில்..ஆனால் இரத்தம் சிந்தி போராடிய புலிகளை மற்றும் வசதியாக சிலரால் ஏற்று கொள்ள முடியாமல் போகிறது ..அவர்களுக்கு வசதியாக சகோதர யுத்தம் கண்ணில் பட்டு விடுகிறது ..புலிகள் இல்லாமல் திராவிட இயக்கங்கள் வளர வில்லையா அதை போல ஆளாளுக்கு இயக்கம் ஆரம்பித்து ஈழம் மீட்க வேண்டி தானே..வாய்ச்சவடால் ஏன்.

காற்றின் வாசனையை தேடி...  

Posted by நாண்

                        நினைவு தொடங்கிய நாட்களின் மௌனத்தை உடைக்கும் முகமாக துவங்குகிறது மன சாலை ...தேவைகள் சிறிதும் பெரிதுமான சாலைகள் அவை..பேச்சின் கன்னியில் சொற்கள் சிதறி கிடந்தன ..                                                                  அருபத்தின் வாசல்கள் எனக்கான கதவை அடைத்து வைத்திருந்தது..இனி செய்வதற்கு ஒன்றுமில்லை ..ஆசையாய் சேகரித்த மகனை ஏகலைவன் என பெயர் சூட்டி வில்லேந்த வைக்க நினைத்த போராளியை சாம்பலாக்க விரும்பாமல் நான் விளையாடிய எனது குடிசையில் புதைத்தேன்..அவனுக்கான ஆன்மாவும் வில்லும் தூங்கவிடாமல் செய்த இரவை கிழித்தபடி என் வீட்டு உத்திரத்தில் தொங்கியபடி என்னையே ஏக்கமாக பார்த்தது..                                                                                                                                                            அப்பொழுதுதான்..காலையில் இருந்து தேங்கி அடங்க மறுத்த எனது கண்ணீர் கேவலோடு வானத்தை கிழித்தபடி கொட்ட துவங்கியது...


மீளாத அந்த கொடிய இரவில் நானும் வரலாற்று பக்கங்களில் தன கை விரல் வெட்டி கொடுத்து ஆதிக்க மாலுமிகளுக்கு உலக பெயர் வாங்கி கொடுத்த ஏகலைவனும் பேசிக்கொண்டோம் ..இரு வேறு காலங்களும் அந்த நீண்ட இரவை நிரப்பி இருந்தன..என் அருகில் தூங்கிக்கொண்டிருந்த துணையின் முகத்தில் இருந்த உப்பு கோடுகள் அவ்வப்போது எங்களின் விவாத பொருளாகியது..கட்டை விரல் கேட்க துணிந்த துரோணருக்கு காடு பறிபோவது பற்றிய அக்கறை இன்றைய சிங் கிற்கு இல்லாதது போலவே,அவருக்கும் இல்லாதிருந்ததை ஏகலைவனுக்கு சுட்டி காட்டினேன்..அவன் வெகுண்டழுந்து காட்டை காக்க தன் குடிகளை தயார் செய்தது பற்றி சொன்னான்..                                                                                                                                   ஓயாத அந்த எழுச்சியின் நீட்சி அரச படைகளுக்கு எதிராக காலம் தோறும் தொடர்வதையும் மக்களிடம் புரட்சியின் விதைகள் மழுங்கி பின் எழுவதுமான சுழற்சி பற்றி தொடர்ந்து பேசினோம்..கதிர்கள் மெல்ல சூரியன் வரும் திசை நோக்கி தனது தலையை திருப்பின..என் மனம் உறங்க தொடங்கியது.


அடிமை ...  

Posted by நாண்

                                               எங்களுக்கென நதி இருந்தது ....யாராலும் பெயர் சூட்டப்படாத பறவைகள் எங்களின் வனம் முழுதும் குதுகளித்து கிடந்தன,.பூமியின் பாரிய பரப்புகளை அதிர்வித்து மகிழ காட்டாறுகள் எங்கள் வசமிருந்தன..அவ்வபோது எம் குழந்தைகளை மகிழ்விக்க எங்களின் மூத்தி நீலி இருந்தாள்..நாங்கள் மற்ற உயிரினங்களை போல உணவு சேகரிக்க வயல் வெளிகளை படைத்திருந்தோம் ..எங்களின் காதலை முன் மொழிய ஆவாரம் பூக்களை எம் பெண்களுக்கு சூட்டி மகிழ்ந்த நினைவுகள் இப்பொழுதும் மிச்சமிருக்கின்றன..இப்பொழுது நினைவுகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன...                                                                                                    வேட்டையாடிய ..உழைத்து சேகரித்த உணவை ஒன்றாய் சமமாய் முதலில் குழந்தைகளுக்கும் ஊனமுற்றவருக்கும் முதியவர்களுக்கும் கொடுத்து பின் நாங்கள் பசியாறிய பொழுதுகளை ஆரிய படையெடுப்பில் பலிகொடுத்தோம் சாதியாக எங்களை நாங்களே பிரித்து கொள்ள பணிக்க பட்டோம் ..முதலில் இங்கிருந்தே நாங்கள் வேறானோம் ..பின் நிலம் ..பின் வனம்.... பின் எங்களை மனிதர்களாய் பழக்கப்படுத்திய எங்களின் மொழி ..எங்களின் பாடல் ..எல்லாம் வருபவனிடம் கொடுத்து கொடுத்து கட்டுண்டோம் ..                                                                  எல்லாம் முடிந்ததது ...எமக்காக கரும் புலியாக காட்ச்சியளித்த தலைவனும் இல்லை ..ஒன்றே ஒன்றை மட்டும் மிச்சம் வைத்திருக்கிறோம்..அது அடிமை ..

புலம் பெயர்ந்த காடுகளும் நதிகளும்...  

Posted by நாண்

 
                  கொச்சையாக பேசி பழகிய எங்களின் மொழி நாகரிகத்திற்கு மாற்றமடைந்ததுமே நாங்களும் மாறிப்போனோம் ..                                                           சொல்லப்படாத அணங்குகள் சொல்லப்படாமலே எங்களால் அழித்தொழிக்க பட்டன ..வெள்ளையாக இருப்பது மட்டுமே வாழ்வதற்கான நியதி என எம் அரசர்கள் எங்களுக்கு சொல்லி இருந்தார்கள் ..அதற்க்கான சூத்திரங்கள் உலக நாடுகளிடமிருந்து நதிகளை விற்று வாங்கினோம் ..சிற்றோடைகளை கூட தாரை வார்த்து கொடுத்தோம் ..                     அதன் மூலம் மெலிதான கரு வெள்ளையை பெற்றோம் ..ஆனாலும் ..மனிதர்களாக முடிய வில்லை ..தொடர்ந்து எங்களின் மூதி நீலியை கழுத்தை அறுத்து கொன்று வெள்ளை காக்கைகளுக்கு இரையாக போட்டோம் ..அப்போது நல்ல மாற்றம் இருந்தது ..                                                                                                 சந்தோஷ மிகுதியால் எங்கள் காடுகளை அனுமானை விட்டு பெயர்த்து எடுத்து வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க அரசர்கள் சுற்றி பார்க்க கொடுத்தோம் ...அதன் பிறகு மிச்சமிருந்த பறவைகளும் வனத்தின் அழியா பழங்களும் தொலைந்து போகின..நிரம்பி சிரித்தோம் எல்லாம் கொடுத்தோம் இனி வெள்ளையாக வேண்டியதுதான் பாக்கி ..                                                                                                                                                          அப்போது பெரும் கூச்சல் எங்களை உணவு வடிவத்தில் கொல்ல முயன்றது ..நாங்கள் எங்கள் வெள்ளை இனத்தலைவரான சிதம்பரத்திடம் ஓடினோம் ..அவர் சொன்னார் நீங்கள் நினைத்தபடி வாழ வேண்டுமானால் உணவை தின்பதை கேவலாமாக கருத வேண்டும் அது தான் உலக தலைவர் அமரிக்க தளபதி விரும்புவார் ..நாங்களும் அதன்படியே வாழ முயன்றோம்..எம் சந்ததிகள் மட்டும் செத்து போனது ..கவலை வேண்டாம் நமக்கு நமது தலைவர் சிதம்பரம் நல்ல பட்டம் சுட்டி மகிழ்வார் ...சிரித்துக்கொண்டே வாங்கிக்கொள்வோம் பரதேசி என்ற அந்த மாபெரும் பட்டத்தை..

வாசமற்றுப் போன பூக்கள்  

Posted by நாண்

பூக்கள் இல்லாத நகரங்களை,மனிதர்கள் இல்லாத இல்லங்களை,பறவைகள் அற்ற வானத்தை நாம் தொடர்ச்சியாக கட்டமைத்து கொண்டிருக்கிறோம்..கடன் வாங்கிய பிறமொழி வார்த்தைகளால் நமது பார்வையை விரித்து கொண்டதாய் மகிழ்ந்து கொள்கிறோம் ..யாரோ எதுதிய கவிதைகளை காதலியிடம் கொடுத்து காம இச்சையை பூர்த்திசெய்து கொள்ளும் மரபாச்சிகளாய் வாழ்வை முடித்து கொள்கிறோம் ..                                                                                                                   சினிமாவிலிருந்து உலக புரட்சிகள் வரை நாம் பேச வெளியில் இருந்து மோக குப்பைகள் நம்மிடம் நிறைய குவிந்து கிடக்கின்றன ..நம்மையறியாமல் நமக்குள்ளே கருத்து முளைத்து சிறகு விரித்தால் கூட எங்கேயோ திருடப்பட்டதான மனநிலையை நாம் கொண்டிருக்கிறோம் ..மொத்தத்தில் நாமக்கான ஒன்றுமற்று திடீர் கடவுளின் நிலையாகிறோம் ..

ஆரியத்தில் குளிர் காயும் உயர்சாதிகளின் மனக்கிடங்கு..  

Posted by நாண்

கொஞ்ச நாளாக எமது மனதில் பெருத்த சந்தேகங்கள் கிளை விட்டபடியே இருக்கின்றன..ஆரியம் எம்மை விழுங்க பார்க்கிறது, பார்ப்பான்
 நம்மை காலம் காலமாக அடிமையாக்கி வைத்திருக்கிறான்..திராவிடம் வெல்ல வேண்டும்..இப்படி பெரியாருக்கு பின் வந்தவர்களின் கதைப்பில் உண்மையிருப்பதாக தோணவே இல்லை..

              பெரியார் நமக்கு போதித்த கருத்துக்களிலும் ,சிந்தனையிலும்,எந்த மாற்றமும் நமக்கில்லை..இன்றும் ஆட்சியை நிர்ணயிக்கிற சக்தியாக மொட்டை தலையன் சோ முன்னிருத்தப்படுகிறான்..பார்ப்பன தெருக்களில் வீட்டு வாசல் முன்பு வாடகைக்கு விடப்படும் பலகையில் சைவம் மட்டுமே என நம்மை குத்திக்கிழித்துக் கொண்டிருக்கிறான்..எல்லாம் சரி..

                     அதை சாக்காக வைத்துக்கொண்டு சாதியை அதன் வலிமையை பெருக்கியது யார் குற்றம்..இன்று சாதிக்காக போராடியதை சொல்லப்படும் இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன..இடைநிலை சாதிகளை வளர்த்து கொண்டிருக்கின்றன..எந்த சாதி பெரும்பான்மையாக உள்ளதோ அந்த சாதிக்கான எதிர் சாதிகளை அந்த பகுதியின் வேட்பாளராக அறிவிக்க எந்த முன் வருவதில்லை..அந்த சாதி ஓட்டுக்கள் வேணும் என அவர்களையே நிறுத்துகிறார்கள்..

          அதன் மூலம் ஏற்கனவே கொளுத்து திரியும் இன்றைய ஆதிக்க சாதிகள் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கப்பட்டவர்களாகவே வைத்திருக்கிறார்கள்..தலை நிமிர்ந்து நிற்க விடுவதில்லை..திருமா ,கிருஷ்ண சாமி போன்றவர்களும் இந்த சூழலுக்குள் சிக்கி கொண்டு ஏதோ இரண்டு சீட்டு மூணு சீட்டு கிடைத்தால் போதுமென அதன் மூலம் பெரிய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி விட்டதாக கனவு கண்டு அம்மாக்களையும் சேற்றில் தள்ளி மேலும் அவர்களை தனிமை படுத்துகிறார்கள்..

      இதன் மூலம் என்ன மாற்றத்தை சாதித்து விட்டார்கள்..வடமாவட்டங்களில் வன்னியரின் ஆதிக்கமும்,தென் மாவட்டங்களில் தேவர்,முன்பு தலித்தாக அடையாளப்படுத்தப்பட்டு இன்று நாடார்கள் ஆகி பெருன்சாதி வட்டத்திற்குள் வந்தவர்களும்,கொங்கு மக்களாலும் ,இன்ன பிற உயர் சாதிகளாலும் மேலும் ஒடுக்கப்பட்டவர்கள் கீழான மனிதர்களாகவே மாற்றப்படுகிறார்கள்..

         தமிழ் தேசியம் குறித்து சிந்திப்பவர்களும் சாதி குறித்து பேச மறுக்கும் அவல சூழல் யாரால் வந்தது..இன்றைய தலித் தலைவர்களாலும்,திராவிடம் பேசிய இன்றைய தலைவர்கலாலுமே வந்தது..எவன் கேட்கிறான் இதை..

                பார்ப்பனர்களை விட பல மடங்கு தலித்துகள் மீது நேரடி வன்முறை செலுத்தும் உயர்சாதிகளை யார் கண்டிப்பது..

               ஒரு சின்ன உதாரணம் ..எனது ஊர் சின்ன ஊர்..அங்கே ஒரு வீட்டில் இழவு விழுந்தால் குடி வெட்டியான்,குடி சக்கிலி ,குடி வண்ணாத்தி ,குடி பரியாரிகள் போக வேண்டும் இதுவே இன்றும் நிலவும் விதி..
   
             பிணம் புதைத்த பின்போ,தீ வைத்த பின்போ வெட்டியான் என அழைக்கப்படும் பறையர்களில் ஒருவர் ஆதிக்க சாதிகளிடம் வருவார் ..அவர்கள் உக்கார வெள்ளை வேட்டியை வண்ணார் எனப்படும் சாதியை சேர்ந்தவர் விரிப்பார்..ஆதிக்க சாதிகள் அதில் அமர்ந்த பிறகு எதிரில் தலித் சாதிகள் நிற்க வேண்டும்..அவர்கள் நிற்கும் பகுதியில் ஒரு உயர் சாதியினர் நின்றாலும் நீ என்ன வெட்டியானாடா அங்க போயி நிற்கிற என கேட்பார்கள்..

                  பின்பு குடி வெட்டியான்,வண்ணார்,சக்கிலி,பறையாடித்தவ்ர் ,பரியாரி .,என அனைவரும் மொத்தமாக நெடுஞ்சான் கிடையாக விழுவர் ..அதன் பிறகு ஒவ்வொருவருக்கும் மொத்தமாக மாற்றி வைத்திருக்கும் சில்லறையிலிருந்து 25 ரூபாய் தூக்கி போடுவார்..பத்தவில்லை என்று அவர்கள் மீண்டும் நெடுஞ்சான் கிடையாக விழுவர்..அப்போது அதிக்க சாதியிலிருந்து ஒருவன் அவன் வயசு ௨௦ கூட இருக்காது..அவன் காலில் விழுந்த பெரியவரான பறையரை பார்த்து "மயிறு உங்களுக்கெல்லாம் எவ்வளவு கொடுத்தாலும் அடங்காதுடா..?"என்பான்..
               ஆதிக்க சாதியிலிருந்து ஒரு பெரியவர் அந்த ஆதிக்க சாதி பையனிடம் சொல்வார்" டேய்..அது அவன் உரிமையடா  ..அவன் கேக்கணும் நாம கொடுக்கணும்"..என்பார்..

          இப்படியாக நீண்டு கொண்டே போடும் அவர் நாற்பது ரூபாய் வாங்குவதற்குள் எட்டு முறை நெடுஞ்சான் கிடையாக விழுந்து கிடப்பார்..
அது பழைய காலம் என எவனும் ஒத்து ஊத முடியாது..நானே சாட்சி..இன்னமும் எனது ஊரில் ஏதாவது ஒரு இழவு விழும் பொது அதை பார்க்கலாம்..

        ஆனால் இதை பற்றி இது வரை பெ.தி.க ,கம்யுனிச இயக்கங்கள் பரவலாக போராடியதை தவிர வேறு என்ன பார்ப்பனியம் குறித்து நீங்கள் திட்டுவதால் நிகழ்ந்தது..
                           தொடர்ந்து இன்னமும் மாறாத அமைப்பும் அதன் வழியே ஏமாற்று அரசியல் தலைவர்களாலும், வெறும் தமிழ் தேசியம் பற்றி மட்டும் பேசுபவர்களாலும், எந்த  சாதிய வேரருப்பும் சாத்தியமில்லை..திட்டமிடப்படாமலேயே இறுக்கி வைத்திருக்கும் இன்றைய சாதி அமைப்புக்கு நீங்களே..காரணம்..ஓட்டெடுப்பு முறையில் மாற்றம் வேண்டும்..பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திர வேள்விக்கு..முடிந்தால் அனைத்து தலைவர்களும்..இரட்டை வாக்குரிமைக்கு குரல் கொடுங்கள் பார்ப்போம்..மற்ற உயர்சாதிகளுக்கு ஈடாக பிரதிநிதித்துவத்தை கோருங்கள் பார்ப்போம்..இப்படி எதுவும் செய்யாமால்..தலித் மானத்தோடு,பொருளாதார ,சிந்தனையோடு வளர வழி விடுங்கள் பார்ப்போம்..எவனும் செய்ய மாட்டான்..



பூச்சாண்டி 3  

Posted by நாண்

சந்தித்து நாட்களாயிற்று.. அதனால் என்ன? உமக்கும் எமக்கும் சிந்தை குறையப் போவது இல்லை.. பேச வேண்டியது பேசுவோம்..
என்ன செய்யலாம்? அல்லது., என்ன செய்ய முடியும்?
அதற்கு முன் என்ன செய்திருக்கிறோம் என்பது பற்றி பேசுவோம்..
கருணாநிதி எனும் இருமுனை கத்தியை மழுங்கடித்து, ஜெயலலிதா எனும் 
குத்தீட்டியை தேர்வு செய்திருக்கிறோம்.. அவ்வளவே.. இரண்டும் நமக்கு எதிரான மாபெரும் ஆயுதங்கள் என்பது மட்டும் நினைவிருந்தால் போதுமானது..
நாமும் ஆயுதமானால் அன்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது தோழர்களே..
இது வரை நாம் கண்ட களம் சத்தங்கள் மட்டும் கொண்டது.. சில நேரங்களில் சத்தங்கள் எதிராளிக்கு சங்கீதமெனவும் தோற்றம் தரக்கூடும்.. (நம் கதறல்களும் இதில் அடங்கும்)   போதும் தோழர்களே..அழுது, அரற்றி, கூச்சலிட்டு, உரக்கப்பேசி.. என்ன முடித்திருக்கிறது?! எதுவும் இல்லை.. ஆகவே நண்பர்களே.,  
இனி பேசி ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பது தெளிவு.. ஆனாலும் கூட பேசியே ஆகவேண்டும் சிலவற்றை மட்டும்..  அவை..,எதிரிகளோடு சமர் புரிய தேவையான களங்கள் மற்றும் அவை குறித்த நம் வியூகங்கள் என்பதாக மட்டும் இருந்தால் நன்று.. இனி நாம் எல்லோரும் கலந்தே பேசப்போகிறோம்.. பேசுவோம்.. நன்றி..

 

Posted by நாண்

பச்சை என்கிற காற்று..நிரம்பி வழியும் வலிகள்…-2


இருட்டிலிருந்தேன் ,,.
வலியை விடக் கொடுமையானது இருட்டு..வழி வழியாய் பழக்கப்படுத்தப்பட்ட இருட்டு அச்சமூட்டக்கூடியது.அதிலும் எதுவென்று புரியாமல் மனதை அலைகழிக்கும் இருள் வெறுமையை பீறிட்டு எழ செய்கிறது.எனக்கு இப்போது அப்படித்தானிருந்தது..
வானத்தில் கருத்த மத யானைகள் சிவசேனைகளை போல பால் நிற மேகங்களை துரத்தி பிடித்துக்கொண்டிருந்தன. மும்பை கலவர வெளிகளில் ஓடி ஒளிய இடம் தெரியாமல் பதைத்து போன சிறுமியின் முகத்திற்கு ஒப்பாய் இருந்தது நிலவின் பதட்டம்.
நானும் நிலவை போலவே கருத்துக்கிடந்த காரைத்தரையில் படுத்திருந்தேன்.ஏன் இப்படி ஆணோமென மனது குமைந்து கொண்டிருந்தது.தூங்க முடியவில்லை.சாலைகளில் நாயின் ஊளை கூட நின்று விட்டது..காற்றும் மனிதர்களின் மீதான நேசத்தை நகரமயமாக்களால் தொலைத்து விட்டிருந்தது..
இந்த வயதில் காதல் என்கிற மாயவலை தேவைதானா?..நாட்களை எண்ணி நகர்த்துகிற எனக்கு அவசியமில்லாத தேவைதான் இது .ஆனாலும் பிடரி மயிரை பிடித்து உலுக்கும் மனதை என்ன செய்ய..ஒருவேளை எண்ண ஓட்டங்களை தடைப்படுத்தும் இயந்திரம் ஏதேனும் உருவாக்கப்பட்டிருந்தால் இந்த இரவில் வானத்தையும் அவ்வப்போது அலைபேசியையும் பார்த்துக்கொண்டிருக்கிற அவலம் இருந்திருக்காதோ..குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பியும் ஓய்ந்தாகி விட்டது.விடியும் வரை இனி எந்த பதில்களும் வரப்போவதில்லை. விடிந்தாலும் பதில் வருமா என்பதும் நிச்சயமில்லை. தொடர்ந்த பல இரவுகளில் நானே தொடங்கி நானே முடிக்கும் பேரவலம்..
மூன்று நாட்களுக்கு முன்பு பேசினாள்.அப்போது கூட ஒரு தேர்ந்த நடிகைக்கே உண்டான மனோபாவத்துடன் எனது வலிகள் வார்த்தையாக விழும்போதெல்லாம், அம்மா கூப்பிடுவதாக துண்டித்து விடுவாள் .அந்த தேவதையை சிந்தித்தே மனது குமைந்து இரவுகளை தின்றது.
ஆம் அவள் தேவதை தான் ..என் படத்தின் நாயகி தேவதை தான்..
=========================================================================================================

அலைபேசியில் “ஏலேலோ எலலேலோ “என என் படத்தின் பாடல் சிணுங்கியதும் சட்டென விழிப்பு வந்தது.திடுக்கிட்டு எழுந்தபோது பாயை விட்டு நகர்ந்த கை மொட்டை மாடியின் தரையில் சுட உதறியபடி எழுந்தேன்.
அவள் தான் அழைத்திருந்தாள்..
சிணுங்கிய தொலைபேசியில் தேவதை என்கிற அவளின் பெயரையே பார்த்தபடி இருந்தேன்.எந்த்தனை அவமானங்களுக்கு இடையில் இந்த அழைப்பு ..?எடுக்க வேண்டாம் .நிறுத்திக்கொள்வோம் .எனது கட்டுப்பாடு உடைந்து சிதறுவதற்க்குள்ளாக தொடர்பு அறுந்தது.
“என்னா சார் வெயிலு அடிச்சது தெரியாமா இருக்கீங்க..?”
பக்கத்து வீட்டு குண்டம்மா துணிகளை காய போட்டபடியே கேட்டாள்..
நான் பதில் ஏதும் பேசாமல் அவளையே ஒரு கணம் பார்த்துக்கொண்டிருந்தேன். குண்டம்மாவிற்க்கு குறைந்தது 45 வயதிருக்கும்.பெரிய…ரொம்ப பெரிய…உருவம். அவளது கணவருக்கு 60 வயதிற்கு மேல். இயலாமையின் நெருக்கத்தை அனுபவிப்பது எப்படி என அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. சைக்கிள் கடை வைத்து நடத்துகிற சுசிலாவின் கணவர், அதாங்க குண்டம்மாவின் கணவர், தினம் வீட்டு செலவுக்கு 40 ரூபாய் கொடுப்பார். அதில் மூன்று வேளையும் விதவிதமான உணவை செய்வாள். அதிலும் மிச்சம் பிடித்து வட்டிக்கு விடுவாள். அதட்டலான குரல். அன்பானவள். அன்பை கூட கோபமாகவே பேசுவது அவளின் இயல்பு. அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் 6 ,8 வயதில் இருக்கின்றன..
நான் அவளிடம் எதுவும் சொல்லாமல் பாயை சுருட்டியபடி கீழே வந்தேன் எனது வீட்டில் தொப்பி ராசா என்கிற ஏகலைவன் சுருண்டு தூங்கி கொண்டிருந்தான். எனது உதவியாளன் .அவன் எப்பொழுதும் இப்படித்தான். நிறைய இடமிருந்தாலும் ஏதாவதொரு மூலையில் உடம்பை குறுக்கி கொண்டு கால்களை கையால் கட்டிப்போட்டபடி உறங்குவான்.. சில நேரம் அது தாயின் கருவறையில் இருக்கிறானோ என எண்ணத் தோன்றும், அவன் கால்களில் இருந்து கட்டு இன்னும் அவிழ்க்கப் படவில்லை. படப்பிடிப்பில் நாங்கள் கேட்ட இடத்தை கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதிக்க வில்லை..எல்லாம் பணம் படுத்தும் பாடு. ஆனால் நாங்களோ கையில் பணமே இல்லாமல் படமெடுக்கிறோம். பின் எப்படி அனுமதி கிடைக்கும் ..அவசர அவசரமாக நாங்கள் தங்கியிருந்த பாழடைந்த கட்டடத்திற்கு வண்ணம் தீட்டி, அங்கேயே படப்பிடிப்பை நடத்த முடிவு செய்து எனது உதவி இயக்குனர்கள் எல்லோரும் சேர்ந்து காவல் நிலையம் போல உடனே உருவாக்கினார்கள். அப்பொழுது வண்ணம் அடிக்க மேலே ஏறியவன், கீழே விழுந்ததால் இந்த கட்டு. படப்பிடிப்பை முடித்து வந்து இவ்வளவு நாளான பிறகும் கூட நாங்கள் அந்த கட்டடத்திற்கு மாற்று வண்ணம் பூசவில்லை..எங்களின் வலியின் நீட்சியாக அது அந்த ஊரில் மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. இங்கே அவ்வப்போது விந்தி காண்பித்து அதை தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறான் ஏகலைவன்.
நானும் அவனருகே பையை போட்டு விட்டு தூங்க முயற்சி செய்தேன். தூங்க முடிய வில்லை கண்கள் படுத்த படியே அறையை நோட்டம் விட்டது. இவ்வளவு நாட்களும் தோன்றாத வெறுமை என்னை ஆட்கொண்டது. வெறுமை…அடர்ந்த வெறுமை.. யாருமற்ற கொலைக் களத்தில் நான் மட்டும் குற்றுயிரோடு நிற்பதை போலிருந்தது அந்த கணம்..
அப்போது மீண்டும் அலைபேசி ஒலித்தது. அவளாக இருக்குமோ..ஏன் இப்படி நெஞ்சை பிழிகிறாள் ..அவளை விட்டு விலகி நிற்கவே முடியாதோ. உடனடியாகவே மாறிப்போன அவளின் பேச்சு ,சிரிப்பு, எல்லாத்தையும் கலைத்து விட்டு சாதாரண தேவதை என்கிற அடையாளத்தோடு பேசவோ, சிநேகம்கொள்ளவோ, குறைந்த பட்சம் கடைசி மனிதனிடம் காட்ட வேண்டிய பரிவு கூடவா இல்லாமல் போய் விடடாள்.. இப்போது நான் அலைபேசியை எடுத்தாலும் என்ன சொல்லுவாள்
“ஹலோ ,எந்தாச்சி,என் கூட பேச மாட்டிங்களா..எந்த பிராப்ளம் நீங்கள் புரியல,நோட்ஸ் எழுதி,பின்னே காலேஜ் போய் ,…”
இப்படி இன்னும் இன்னும் எத்தனை எத்தனை வாதங்களை முன் வைப்பாள்..படப்பிடிப்பு முடிந்து விடைபெற்ற தருணங்களிலிருந்து அவளது நடவடிக்கை இப்படித்தான் இருக்கிறது, வேண்டாம் வேண்டவே வேண்டாம். அலைபேசியை ஒரு முறை எடுத்து பார்த்தால் கூட மனசுபகடை சறுக்கி விடும் என பல்லைக் கடித்தபடி கண்களை இருக்க மூடிக்கொண்டேன்..
” எலலேலோ ..”.ஒலித்தபடியே இருந்தது..

பச்சை என்கிற காற்று..நிரம்பி வழியும் வலிகள்…  

Posted by நாண்

பச்சை என்கிற காற்று..நிரம்பி வழியும் வலிகள்…

சினிமா அறிவியல் ஊடகம் , மக்களோடு நேரடியாக உரையாட வாய்ப்பு அமைத்து தரும் களம்,  எம்.ஜி. ஆர், கருணாநிதி, ஜெயா  என இன்றைய தமிழனின் அரசியலை தீர்மானிக்கிற ஆளுமைகள் உருவாக்கிய களம்  என தங்களுக்கு சொல்லப்பட்ட அல்லது சினிமாவுக்கு வெளியே நின்று...
சினிமா அறிவியல் ஊடகம் , மக்களோடு நேரடியாக உரையாட வாய்ப்பு அமைத்து தரும் களம்,  எம்.ஜி. ஆர், கருணாநிதி, ஜெயா  என இன்றைய தமிழனின் அரசியலை தீர்மானிக்கிற ஆளுமைகள் உருவாக்கிய களம்  என தங்களுக்கு சொல்லப்பட்ட அல்லது சினிமாவுக்கு வெளியே நின்று கருத்துரைகளாக கேட்டு பழகிய பிம்பங்களில் நின்று பழகிய தமிழ் அன்பர்களிடம் இதுவரை ஊடகங்கள் நேர்மையாக பதியாத வழிகளை கூடுதல் நேர்மையோடு தங்களிடம் பேச வருகிறார் தோழர் இயக்குனர் கீரா. ” பச்சை என்கிற காத்து“  என்ற திரை குழந்தையை இவர் பிரசவித்த வழிகளை, வலிகளை தங்களிடம்  பகிர்ந்து கொள்ள இசைவு தெரிவித்திருக்கிறார். மனைவியின் பிரசவ வழியை கூட அக்கறையற்று கடந்து போகும் சமூகத்திடம்தான் பேசப் போகிறார் என்று தெரிந்தேதான் பேச துணிந்திருக்கிறார். உங்களோடு சேர்ந்து நாங்களும் எமது செவிகளை கூர்மை படுத்தி கொள்கிறோம்.
==============================================================================
காற்று.1
நீங்கள் ஒரு சினிமா பைத்தியமா..?
நீங்கள் வாழ்வை சந்தோசமாகக விரும்புவரா..?
நீங்கள் வலிகளை உணர்ந்தவரா..?
நீங்கள் சாதிக்க விரும்பியவரா..?
நீங்கள் தோல்வியை அனுபவித்தவரா..?
இப்படி எல்லாவட்டிரிலும் ஏதேனும் ஒன்று உங்கள் வாழ்வில் நுழைந்திருக்குமானால்..நானும் உங்களில் ஒருவனாக அறியப்படுவேன்..என் பெயர் மூர்த்தி.. பிணத்தை கொத்தித்தின்னும் கழுகு போல சினிமா என்னை கொத்தி தின்றதை சொல்லியே ஆக வேண்டும் என்கிற உந்துதலில் எழுதுகிறேன்..
ரதி ..இங்கிருந்துதான் நான் துவங்குகிறேன்..யாரும் அறியாத பொழுதொன்றில் என் மீது நம்பிக்கை கொண்டு விழுந்த விதை அது..தாயின் கருவறையை போல பல வருடங்கள் என்னுள் உருத்திரண்டு கொண்டிருந்தது..அதற்க்கு கைகளையும் கால்களையும் நான் பார்த்த மனிதர்களில் இருந்து புதுப்பித்து கொண்டே வந்தேன்..நான் வாழ்ந்த சூழலுக்கு பழக்கப்படுத்தியிருந்தேன்..ரத்தினமும் திலகாவும் என்னை நிரப்பியிருந்தார்கள்..ஆனாலும் வயிறு பசிக்கத்தான் செய்ததது..குடும்பத்தை விட்டு நான் புழுதியேறிய தெருவை விட்டு, என் அன்பையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களை விட்டு புறாக்கூன்டுகளை போல எச்சமும்.குப்பையும் மனக்கிடன்கெங்கும் வழிந்த சென்னை நகரத்திற்குள் வந்ததிலிருந்து..இந்த பசியும் என்னோடு ஒட்டிக்கொண்டது..உதவி இயக்குனராய் சேர்வது என்பது அத்தனை எளிதல்ல என்கிற சூத்திரத்தை நான் சிறு வயதிலிருந்தே கற்று வந்தவன் தான் ஆனாலும்..ஒரு வேலை உணவுக்கே தாளமிடுவோம் என நினைத்து பார்க்கவில்லை..

நெருங்கி வரும் பிண வாடைகள்  

Posted by நாண்

நேற்று  வரை கலங்கி நின்ற எம் மன நெருப்பை அணைத்து விட முயன்றது தேர்தல் மாய பிசாசு..நாங்களும்  எவ்வளவோ முயன்றும் மேதமை மிகுந்த  அந்த பிசாசுகளை விரட்டவே முடிய வில்லை..ஒட்டு மொத்த மக்களும் மன எழுச்சியாலோ..புறக்கனித்தலாலோ ..ஏதோ ஒரு கருமத்தாலோ..துரோகிக்கு முடிவு கட்டி எதிரியை வென்றெடுக்க வைத்தாகி விட்டது..
 
               இனி..என்ன செய்ய முனை மழுங்கிய கொண்டாட்டங்களை நமக்கு கொடுத்த எதிரிகள் உங்களை திருப்தியுற செய்து, அதிலேயே களைப்படைய செய்து..வாழ்ந்து கொண்டிருப்பதை சத்தியமாய் நீங்கள் மறந்து விடுங்கள்..ஓலங்கள் உங்களுக்கு பழகி விட்டது..கருணைகள் உங்களிடமிருந்து தூர சென்று விட்டது..மது குப்பிகளின் வீரியத்தில் இனி உங்களின் நாக்குகளும் கொலு பொம்மைகளை போல ஒத்திகை பார்த்த பேசிய வசனங்களும் மறந்து போகும்..மீண்டும் ராசபக்செவுடன் கலந்து ஆலாவும் மத்தியத்தை கண்டு கொள்ள மாட்டீர்கள்..உமக்காக உம மக்களின் வலிக்காக தன்னுயிரை ஈந்த தாணுவும் சிவராசனும் உங்கள் கனவை விட்டே விரட்டி அடிப்பீர்கள்..

                பல்லாயிரம்  உயிர்களை உங்களுக்காக விட்டு சென்ற எம் மான மிகு மனிதர்களை கண்டு கொள்ள வழியில்லாமல் போக கடவீர்கள்..உங்களுக்கென புதிய வெளிச்சம் பொருந்திய சீமான்கள் கிடைத்து விட்டார்கள்..

          பல்லாயிரம் கொலைகள் நடந்த பொது எம் புனித பூமியில் பூசைகள் செய்து கொண்டிருந்த எம் வெட்டி தலைவர்கள் மீது உங்களுக்கு, அகிம்சை அரசியலை கை கொண்டதாய் உங்களை ஏமாற்றி பிழைக்க வழி செய்தவர்களுக்கு கோடி தூக்குவதை விட உங்களின் வீரம் எங்கேயும் சிதறாது ..
    புலம் பெயந்து திறம் வியந்து பக்சேவை எதிர்த்த எம் மக்களின் நிமிர்ந்த தோள்கள் கூட இப்போது கூன துவங்கி விட்டது..எங்கெங்கிலும் நாம் தமிழராய் ..நம் தமிழரை நிறுத்த துணிந்த உங்களின் பாங்கை நாங்கள் வியக்கிறோம்..வியக்கிறோம்..வியந்து கொண்டே இருக்கிறோம்..

               ஏனெனில் நாம் விரும்புவதை விட சாதியாலும் மதத்தாலும் பிணைக்கப்பட்ட அரசியல் மூலமாக உங்களுக்கு திணிக்க நிறைய இருக்கிறது ..சொந்த முகமூடியை புதிதாய் அணிந்த எதிரிகளிடம்..காலம் வரும்..கண்டது கேட்டது..எல்லாம் உங்களின் பின் வரும்..அது வரை...நீங்கள்..என்ன செய்ய போகிறீர்கள்..