ஆனந்த விகடனில் வெளியான எனது தொடர் பெருங்கனவு தேசம் பாகம் -1  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்!

ட்டு மொத்த உலகத் தமிழர்களின் நரம்புகளைக் கோடம்பாக்கம் என்கிற மூளையால் இறுக்கிக்கட்டி இருந்தது சென்னை.
ஒரு ஒடுங்கிய கிராமத்தின் உள்ளோடிய குடிசையில் இருந்து சென்னையை நோக்கித் துடித்துக்கொண்டு     இருந்தது என் இதயம். காரணம்... சினிமா! 'வண்ண வண்ணப் பூக்கள்' திரைப்படத்தின் கிளுகிளுப்பைக் கண்டு வர, நண்பர்களோடு டூரிங் டாக்கீஸுக்குள் நுழைந்தபோது பாலுமகேந்திரா என்ற பெயர் டைட்டிலில் வந்தபோது கைத்தட்டிய என் நண்பன் மூலம் திறந்து விடப்பட்டது என்னுடைய சினிமாவுக்கான தளம். ரஜினிக்கும் கமலுக்கும் கைத்தட்டிய விரல்கள், அவர்களை உருவாக்கிய இயக்குநர்களின் பெயருக்கும் கைதட்டத்  துடித்தது. ஆகவே, சென்னை என்பது பெருங்கனவு தேசமாகியது.
திரைத் துறையில் முன்னவர்கள்  பெற்ற அனுபவங்களும், போராட்டங்களும், படிப்பினைகளும் தேடித் தேடி அறிந்தபோது வலித்தது. பெரும் கூடுகளைத் தாங்கி ஆலமரமாய் பரவிக் கிடக்கும் அதன் கிளையொன்றில் கூடமைக்க வேண்டுமெனில் நான்  முதலி்ல் அதற்குத் தயாராக வேண்டும்.
பத்தாம் வகுப்புவரை என்னுடைய கிராமத்தைவிடச் சற்றே பெரிய கிராமமான பெரம்பலூருக்கே சென்று அறியாத எனது காலடித் தடங்களை சென்னையில் பதிக்க வேண்டும் எனில், ஒரு கைத் தொழில் வேண்டும். வெக்கையால் மூடிய பட்ட மரம்போல நிற்கும் என் ஊரில் எல்லோருக்கும் தெரிந்த தொழில் இரண்டுதான்.
வறண்ட பூமியில் உயிரை நிலைத்து வைத்திருக்கப் போராடிய எம் மக்களின் முதல் வாழ்வாதாரம் விவசாயம். வெடித்துக்கிடக்கும் மண்ணையும் கிளறி, அதில் இருந்து பூப்படையச் செய்யும் பயிர்களை விதைத்து, அதன் மூலம் வாழ்ந்த எம் முன்னோர்கள் காட்டிய பாதை.
இரண்டாவது ஓட்டுநர். என்றோ ஒரு நாள் வீட்டைவிட்டு ஓடிப்போன என் ஊரைச் சேர்ந்த  சிறுவன் நாமக்கல்லில் இருந்து வளர்ந்தவனாக லாரி ஓட்டி ஊருக்குள் வர, தீப்பற்றி எரிந்ததுபோல ஆனது  ஊர். பின்னாளில் ஊரின் இரண்டாவது முக்கியத் தொழிலாக ஓட்டுநர் தொழில் நிலைபெற்றது. இதையும் கடந்து மண்ணை விற்று தூர தேசங்களுக்குச் சென்று பண்ணையடிப்பது. இவை தவிர வேறு எதுவும்  இல்லை.
அந்த மண்ணில் இருந்து சினிமாவில் கிளைத்து வளர நான் முதலில் தேர்ந்தெடுத்த தொழில் ஒட்டுநராவது. அதற்கு முதலில் ஓட்டுநரின் உதவியாளராகச் சேர வேண்டும் என்பது எழுப்படாத விதி. நாமக்கல்லில் கிளீனராகப் பணிபுரிந்தபோது,  திருச்சியில் இருந்து வாழைக்குலை ஏற்றிக்கொண்டு இரவில் சென்னைக்கு வந்தபோது,எனது கனவுக் கூடாரத்தின் முதல் வாசல் திறந்தது.
எல்லோருக்கும் தெரிந்த அற்புதமான சென்னை என் நினைவில் எப்போதும் இல்லை. அழிக்கப்படாத கல்வெட்டாக மனக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் அனைத்தும் கறுப்புப் பிரதிகளே.
தாம்பரத்தில் வாழைக்குலை இறக்கும் பணி. பின்னிரவில் தொடங்கி கோயம்பேடு வளாகத்தில் நுழையும்போது அதிகாலையாகும்  வேளையில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். கோயம்பேடு வளாகம் புத்தம் புதிதாக அமைக்கப்பட்ட மன்னனின் கோபுரமற்ற அரண்மனையைப் போல பிரமாண்டமாக நின்றிருந்தது. பல மாநில சந்தைகளுக்குக் குறுகிய காலங்களில் சென்று வந்திருந்த நான் கோயம்பேடு வணிக வளாகத்தை மிரட்சியுடனும் வியப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் வடிவமைப்பு அசத்தியது.  அரண்மனைக்குள் சாதாரண மக்கள் காய்கறி விற்றுக்கொண்டும்,  அழுக்கான மனிதர்கள் பாரம் ஏற்றிக்கொண்டும்,  பெண்கள்  பெரும் கூடைகளில் கீரை சுமந்துகொண்டும் இருந்தார்கள். எங்கும் ஏலக் குரல்களும், இரைச்சலும், பசுங்காய் கனிகளின் அழுகலில் வீசிய வாசனையும் ஒரு மாய உலகத்தில் நுழைந்ததுபோல்  இருந்தது.  குலை இறக்கி முடித்து வெளியேறும்வரை ஏகாந்தத்தில் திளைத்திருந்தேன்.
நாங்கள் அங்கிருந்து லோடு ஏற்றப்போன இடம் ஆட்டுத் தொட்டி. மத்திய சென்னையில் வீற்றிருக்கும் இடிந்த கட்டடங்களும் இடிந்த சுற்றுச் சுவர்களும் கொண்ட உயிர்க்கொலை மைதானம் அது.
அந்த இடத்துக்குள் யாராலும் முழுதாக ஐந்து நிமிடம்  நின்றுவிட முடியாது. பார்வை எங்கும் சூழ்ந்து நிற்கும் லட்சக்கணக்கான   ஈக்கள். ஆட்டுத் தொட்டியைச் சுற்றி 1,000 அடி தூரத்துக்கு யாராலும் வாந்தி, குமட்டல் எடுக்காமல் போக முடியாது. அவ்வளவு நாற்றம். ஆனால், ஆட்டுத் தொட்டியை சுற்றிலும் வீடுகள், மனிதர்கள், குழந்தைகள். எப்படி வாழ முடியும் என்றே யோசிக்க முடியாத அந்த இடத்தில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயமும், அவசியமும், நெருக்கடியும் எப்படி இந்த மக்களுக்கு ஏற்பட்டது என்றே கற்பனை செய்ய முடியவில்லை.
ஆட்டுத் தொட்டியில் திரும்பிய பக்கம் எல்லாம் ரத்தமும், குடல்களும், மாட்டு எலும்புகளும், ஆட்டு எலும்புகளும் குவிந்து கிடந்தன. ஓரிடத்தில் தோல் உரிக்கப்பட்ட சில 100 மாடுகள் தலை இல்லாமல் தொங்கிக்கொண்டு  இருந்தன. சில 100 மாடுகள் தாங்கள் வெட்டப்படும் நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தன. உடல் முழுவதும் இரத்தத்தைப் பூ்சி இருந்த  கொலையாளிகள் சர்வ சாதாரணமாக  நடந்து போனார்கள். அங்கே வேலைக்காக நிரம்பி இருந்த பல நூறு பெண்களும் சிறுவர்களும் அந்தக் கொடூர மயானத்தின் பல லட்சம் ஈக்களுக்கு மத்தியில் உணவு உண்டனர். மூன்று சக்கர பார வண்டிகளில் மாடுகளின் சட்டைகள், தோலுரித்த ஆடுகளின் உடல்கள் கிடந்தப்பட்டிருந்தன.
 வண்டியை எலும்புகள் குவிந்துகிடந்த இடத்தில் நிறுத்தினோம். என் வண்டி ஓட்டுநர் முழுக்கக் குடித்திருந்தார். எனக்குப் பழக்கம் இல்லாததால் குமட்டலும் வாந்தியும் வர, எலும்புகளுக்கு இடையில் ஓடி ஓர் இடத்தில் அமர்ந்தேன். அப்போதுதான் கவனித்தேன். எனது கால்களெங்கும் புழுக்கள்.  எலும்பின் நிண நீர் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க,  எலும்பில் இருந்து புழுக்கள் நெளிந்துகொண்டிருப்பதைக் கண்டேன்.
அங்கே எனது கனவுக்கான முதல் விதை விழுந்தது!
- கனவுகள் நிஜமாகும்-

 http://en.vikatan.com/article.php?aid=23769&sid=664&mid=31

This entry was posted on Monday 2 September 2013 at 14:13 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment