பெருங்கனவு தேசம்
இருக்கும் வளங்களைச் சுரண்டிச்செல்ல பிரமாண்ட கப்பல்கள் நின்றிருந்தன. வளர்ந்த நாடுகளின் குப்பைகளை, நச்சுப் பொருட்களைக் கொட்டிச்செல்ல சில கப்பல்கள் நின்றிருந்தன.
எமது ஓட்டுநர் 'க்ராவல்’ மூலம் பணத்தை அடையலாம் என்றதும் எனக்குப் புரியவில்லை என்றாலும் ஒரு முனை தீப்பற்றி எரிந்ததின் கொதிப்பை அது அடக்கியது.
நமது மீனவக் குடிகளின் வழிகாட்டியாக நின்று, இன்று வெறும் நினைவுச் சின்னம் போலாகிவிட்ட கலங்கரை விளக்கத்தை அண்ணாந்து பார்த்தபடியே தீவுத்திடலைக் கடந்து லாரிகள் மட்டுமே நுழையக்கூடிய சுங்கவாயிலை அடைந்தோம். வண்டி எண்ணைப் பதிவுசெய்துவிட்டு உள்ளே பயணித்தபோது 'சளப் சளப்’ என்கிற பேரிரைச்சல் காதுகளை அடைத்தது. ஆவேசமாக பாய்ந்து வரவேண்டிய அலைகள் அதன் கரையற்ற கரையான துறைமுகத் தடுப்பில் அடிக்க வழியில்லாமல் சளம்பிக் கொண்டிருந்தது புரிந்தது.
எங்கும் புழுதி படிந்த லாரி கிளினர்களும், ஓட்டுநர்களும் பறந்து செல்லும் லாரிகளும் என நாங்கள் எல்லாவற்றையும் கடந்தோம். நமது தேசத்தின் மலைகளைக் குடைந்தும், வெட்டியும், வெடி வைத்துத் தகர்த்தும் பண முதலைகளின் ஆவேசப்பசி போக்கச் சதுரமாகவும், செவ்வகமாகவும் கற்கள் பளபளவென அயல் தேசம்போக மலை மலையாய் துறைமுகத்தில் குவிக்கப்பட்டிருந்தன. பொன்னிற மண்கள் மலையளவு பைகளில் அடைத்து வைக்கப்பட்டு, தான் புரண்டு கிடந்த மண்ணைவிட்டு தூரதேசம்போக முகாமிட்டிருந்தன. ஒரு பக்கம் கிரானைட் கற்கள் குவிக்கப்பட்டிருந்தன. பெயர் தெரியாத அல்லது மறக்கடிக்கப்பட்ட நமது வளங்கள் கண்டெய்னர்களில் அடைந்துகிடந்தன. தான் காலம் காலமாய் பொதிந்துகிடந்த இடத்தைவிட்டுப் போய்விட... மொத்தத்தில் எங்கு திரும்பினாலும் இப்படித்தான் ஏதேனும் ஒன்று இரைந்து கிடந்து, அந்தப் பிரதேசத்தைப் பிணக்குவியலாக மாற்றி விட்டிருந்தது. தான் பிறந்த இடத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படும் மனிதர்கள் மட்டும் பிணமல்ல. இந்த வளங்களும்தான். நாடு கடத்திப்போக பிரமாண்டமான இரும்பு உலைகளைப்போல கப்பல்கள் நீண்டுகிடந்தன. பத்தாயிரம் யானை பலம் பொருந்திய இயந்திரத் தூக்கிகள் கப்பலின் குளத்தில் மீன் பிடித்துத் துறைமுகத்தில் வீசிக்கொண்டிருந்தனர்.
'இப்ப என்ன பண்ண போறோம்’
எனது கேள்வி ஓட்டுநருக்குப் புரிந்தது. துறைமுகத்தில் இருந்து கப்பல்களில் இருக்கும் இரும்புக் கழிவுகளை நமது தொழிற்சாலைகளுக்கு எடுத்துப்போகிறோம் என்றான்.
'நமக்கெப்படி பணம் வரும்’
'இரும்பு திருடுவதுதான்’
எனக்கு முழுக்க புரிந்துவிட்டது. சரியென்ற முடிவுக்கு நானும் வந்துவிட்டேன். பொதுவாக ஓட்டுநர்கள் 50 கிலோ அல்லது 100 கிலோ வரை திருடுவார்கள் என்பதை அறிந்துகொண்டேன். ஏனெனில், நிறுவனங்களை எடைபோடும்போது 10 டன்னில் 100 கிலோ குறைவதை வழிச் சிதறலாகவோ, இல்லை சின்னச் சின்னக் காரணங்களையோ கருத்தில்கொண்டு அதைக் கவனத்தில் கொள்வதில்லை. நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
'50 கிலோதான் எடுக்கணுமா... 500 கிலோ எடுத்தா?’ என் கேள்வி ஓட்டுநரைப் புரட்டிப் போட்டுவிட்டது.
'ஐயோ... ஓனர் கொன்னேபுடுவான்’
'ஓனருக்கும் தெரியாம தொழிற்சாலைக்கும் தெரியாம ஒரு நடைக்கு 500 கிலோ எடுத்தா எனக்கு எவ்வளவு தருவீங்க’
ஓட்டுநர் பயங்கரமாக யோசித்து முடிவாக, 500 கிலோ எடுத்தா 50 கிலோ காசு எனக்குத் தருவதாக ஒப்புக்கொண்டார். மண்டை வெடித்துக் கிடந்தது. 50 கிலோவுக்கு குறைந்தது 250 ரூபாய் கிடைக்கும். ஒரு நாளைக்கு கும்மிடிப்பூண்டிக்கு இரண்டு நடை அடிக்க முடியும். ஒரு நாளில் 500 ரூபாய், எப்படியும் ஒரு மாதத்தில் கடனை அடைத்து ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுவிடலாம். எப்படிச் செய்வது? எனது நண்பர்கள் சிலர், தார்வண்டியில் தகிடுதத்தம் செய்து இரண்டு மூன்று பாரல் தார்களை வெளியில் விற்கும் சூட்சுமத்தை அவ்வப்போது பேசக் கேட்டிருக்கிறேன். அதையே பிரயோகிக்க எண்ணினேன்.
முதலில் வண்டியைத் துறைமுகத்தில் குவிந்துகிடக்கும் செவ்வகக் கற்குவியல் முன்பு நிறுத்தச்சொன்னேன். ஓட்டுநர் நிறுத்திவிட்டு தேனீர் குடிக்கப் போய்விட்டார். நான் அங்கிருக்கும் எடை அதிகமான செவ்வகக் கற்களை யாருக்கும் தெரியாமல் வண்டியின் அடிப்பகுதியில் 'சேஸ்’ எனப்படும் பகுதியில் வைத்துக்கட்டினேன். வண்டிக்குள் இருந்த தண்ணீர் கேனில் தண்ணீரை நிரப்பினேன். அதற்குள் ஓட்டுநர் வர, வண்டியை எடுத்துச்சென்று எடைமேடையில் நிறுத்தி சுமையில்லா வண்டிக்கான எடைசீட்டை பெற்றுக்கொண்டோம். பின் வண்டியை எடுத்துக் கற்களை ஓரமாகப் போட்டுவிட்டு, தண்ணீரையும் கீழே கொட்டிவிட்டு இரும்பு ஏற்றச் சென்றோம்.
கப்பலுக்குள் கொட்டி வைக்கப்பட்டிருந்த, அயல் நாடுகளில் பயன்படுத்தித் தூக்கிப் போட்ட இரும்புக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் எனக் குவிந்து கிடந்ததை இயந்திரத்தூக்கி அள்ளிவந்து வண்டியில் போட்டது. வண்டியின் கேபின் பகுதியில் இருந்த நான், இயந்திரத்தூக்கி எடுத்துவந்து கொட்டக் கொட்ட அதில் கிடைக்கும் பெரியக் கணிசமான எடையுள்ள இரும்புகளைத் தூக்கி கேபின் பகுதியோரம் போட்டுவிட்டு மற்றவற்றைச் சமமாகப் போட்டு நிரவிவிட்டேன். மீண்டும் எடை மேடையில் எடைபோட்டு அதற்கான சீட்டை வாங்கிக்கொண்டோம். எங்கள் நிறுவனத்தின் அனைத்து வண்டிகளும் எடையேற்றி வெளியில் வந்து ஓரிடத்தில் நின்றன.
எல்லா வண்டிகளும் நகரத்தைக் கடந்து ஓரிடத்தில் நின்றன. தேனீர் அருந்தினோம். அனைத்து வண்டிகளும் அந்த இரவில் கும்மிடிப்பூண்டியை நோக்கி பயணிக்கத் தொடங்கின. இடையில் வரும் வண்டிகளுக்கு ஏற்ப, பயணம் ஏற்ற இறக்கத்தோடு நடந்தது. அந்தச் சூழலில் சட்டென வண்டி போய்க்கொண்டிருக்கும்போதே கிளினர் இருக்கையில் இருந்து கேபினுக்கு வெளியே நீண்டிருக்கும் படிக்கட்டைப் பிடித்து அதன் வழியே வண்டியின் பின் தளத்துக்கு வந்தேன். கும்மிடிப்பூண்டி சாலையெங்கும் அந்த இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான பழைய இரும்புக்கடைகள் விழித்திருக்கும். பழைய இரும்புக் கடைகள் ஊரைத் தாண்டி யாருமற்ற இடங்களில் வீற்றிருப்பதன் ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அவை திருட்டுக்குத் துணைபோவது. திருட்டை ஊக்குவிப்பது. தானும் கொஞ்சம் பிழைத்துத் தொழிலாளிகளையும் கொஞ்சம் பிழைக்கவைப்பது. இரும்பு திருடிய எந்தத் தொழிலாளியும் முதலாளிகளாக ஆனதே இல்லை. இரும்பு வாங்கிய பழைய இரும்புக் கடைக்காரனும் பெரும் தனவந்தராய் மாறியதே இல்லை. முதலாளிகள் எவரும் கடைநிலை ஊழியராய் மாறியதே இல்லை. இது உண்மை. மூன்றாவதாக சென்ற வண்டி, சட்டென வேகம்பிடித்து இரண்டாவது வண்டியின் அருகே போய் சட்டென எதிர்வரும் இரும்புக் கடையோரம் மறைந்து நின்றது. கண்ணிமைக்கும் நொடிதான். ஒதுக்கி வைத்திருந்த கணிசமான எடையுள்ள இரும்புகளை வேகவேகமாகத் தூக்கி இரும்புக் கடை முன் எறிந்தேன். இரும்புக் கடைக்காரன் அதே நேரத்தில் வண்டியின் எண்ணை குறித்துக்கொண்டான். சட்டென வண்டியெடுத்து மூன்றாவது வண்டியாகவே பயணமானோம்.
பொதுவாகச் சுமை இருக்கும்போது இருக்கும் கட்டுப்பாடுகள் சுமை இறக்கப்பட்டதும் வண்டிகளுக்கு இருப்பதில்லை. பறக்கும் படைகள் போல் இருக்கும். இரவில் இரும்புத் தூக்கிப்போட்ட கடையில் காலையில் காசு வாங்கிக் கொள்வோம். அவர்களும் நாணயம் தவறுவதில்லை. எடைபோட்டு காசு எண்ணி வைத்திருப்பார். இது தொன்றுதொட்டு நடப்பது.
வண்டி கும்மிடிப்பூண்டியின், வீடுகள் கட்டும் கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் போய் நின்றது. வண்டி துறைமுகத்தில் கிளம்பும்முன் மீண்டும் செவ்வகக் கற்களை எடுத்துவைத்து இருந்தேன். வண்டி தொழிற்சாலை எடை மேடையில் நுழையும் முன்பே அந்தக் கற்களை ஓட்டுநர் இருக்கையின் பின்புறம் பொருள் வைக்கப் பயன்படும் பெட்டிகளில் அடைத்துவைத்தேன். தொழிற்சாலையின் வெளியே இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துவைத்தோம். ஒவ்வொன்றுக்கும்முன் சில மணி நேரங்கள் இருக்கும்; பல வண்டிகள் சுமை இறக்க தேவைப்படும் நேரம் அது.
தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் நெருப்பில் வெந்துகொண்டிருந்தார்கள். இரும்புக் கழிவுகள் ஒரு கொதிகலனில் கொட்டப்பட்டு அவை வெந்து, உருகி நெருப்பு நீராக, கீழே விழுந்து ஒரு வடிவ கடத்தியில் மெலிதாக ஓடி வர வர, இறுகிய நெருப்பாகவரும் கம்பியைப் பிடித்து லாவகமாக இழுத்துத் தொழிலாளிகள் தண்ணீரில் தூக்கிப்போடுவார்கள். இதுபோல பல ஆயிரம் கம்பிகள். சில நூறு தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். தண்ணீரில் விழுந்த கம்பிகளை இழுத்து மடக்கி வேறொரு இடத்தில் போடுவது சிலரின் பணி.
எங்கள் வண்டியில் இருந்த இரும்புக் கழிவுகளை இயந்திரத் தூக்கியில் இருந்த காந்தம் கவ்வி உருக்கு ஆலையில் கொட்டியது. எல்லாம் முடிந்து வெளியே வந்தோம்.
நிம்மதியாக ஒரு உணவகத்தில் வயிறு புடைக்க உண்டோம். ஓட்டுநருக்கு நிரம்ப மகிழ்ச்சி. வந்த வண்டிகளிலேயே எங்களின் வண்டி எடைதான் ஏற்றி வந்த சுமையின் எடையைவிட 10 கிலோ கூடுதலாகக் காட்டியது.
அதே சமயம் நாங்கள் திருடியது 750 கிலோ இரும்பு."
(கனவுகள் நிஜமாகும்...)
http://en.vikatan.com/article.php?aid=25925&sid=757&mid=31
This entry was posted
on Monday, 2 September 2013
at 14:32
. You can follow any responses to this entry through the
comments feed
.