பெருங் கனவு தேசம்-10 (முற்றும்)  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்

''மனதுக்குள் நெடுங்காலமாய் நேசித்த காதலி எத்துணை துயரினும் மறக்க இயலாதோ அவள் விலகி விலகி ஓடினாலும் எப்படித் துரத்திப் பிடிக்க, காத்திருக்க, நேசிப்பைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றுமோ அப்படித்தான் இருந்தது இந்தக் கணம். புகழ் சொல்லிய வார்த்தைகளை மூளை எடுத்து எடுத்து இதயத்திற்கு வீசினாலும் கேட்க மறுக்கிறது இதயம். சினிமாதான் என்கிற பிடிமானம் மற்றவற்றை உதறித் தள்ளுகிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்க மட்டுமே பயன்படும் இதயத்தை எப்படி மனம் என்று ஏற்கிறோமோ அப்படியேதான் இதுவும்.
இனி சினிமாதான். இதுதான் வாழ்க்கை. இதுவே இறுதி. மாற்றில்லை. ஆனால், நாகராஜனிடம்கூட அதன்பிறகு இதைப்பற்றி பேசவில்லை. அவன் இருண்டு கிடந்த முகத்தில் எனக்கான வருத்தம் கூடாதென முடிவெடுத்தேன்.
நானும் நண்பனும் இரவின் தனிமையை அதன் போக்கிற்கே விட்டுவிட்டோம். இருவருக்குள்ளும் பல போராட்டங்கள். பல வடிவங்கள். இருவருமே வாழ்தலின், அதன் சுவையை ரசிக்கும் பருவத்தில் நின்றிருந்தோம். அவனிடம் மீண்டும் மோட்டார் துறைக்குப் போவதாகச் சொல்லிவிட்டேன். ஆனால், அந்த கரும்பூதத்தின் நாக்கில் மாட்டிக்கொள்ள விருப்பமேயில்லை. நண்பனிடம் வண்டி மாற்றப்போவதாகச் சொல்லிவிட்டு எர்ணாவூரில் எங்களுரைச் சேர்ந்த ஒருவர் வேலை பார்த்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் உணவு பரிமாறும் வேலையில் அமர்ந்தேன். அந்தச் சில நாட்கள் வாழ்வின் அற்புதமான பக்கங்கள்.
நிறுவன ஊழியர்களுக்கு அங்கிருக்கும் உணவகத்தில்தான் சாப்பாடு. சாப்பாடு என்றால் வெறும் சாப்பாடு இல்லை. அது ஒரு நட்சத்திர விடுதிகளுக்கு இணையான உணவு வகைகளைக்கொண்டது. அங்கே இருந்த அனைத்து உணவு பண்டல்களையும் ருசி பார்ப்பதே எனது வேலை. கிளர்ச்சியூட்டும் சுவைகள். மிகைப்படுத்தப்படாத நவீன ஓவியங்களைப்போல இருக்கும் அந்த உணவகத்தின் சமையலறைக்குள் நுழைந்தாலேபோதும். அந்த அறையின் வாசனை நம்மை இழுத்துச்செல்லும் போக்கு 'ஃபெர்ப்யூம்’ படத்தில் நாயகன் பெண்ணுடலை முகரும் காட்சிக்கு ஒப்பானது. வேலையும் கடினமானதாக இல்லை. ஓய்வு நேரங்களில் பெரும்பாலும் என்னை வசீகரிப்பது நிறுவனத்தின் பின்னே படுத்திருக்கும் கடல்தான். பெரும் நிலப்பரப்பில் விசித்திரஉயிரிபோல அது ஓய்ந்து ஓய்ந்து பின் எழுந்து எழுந்து கரையை நோக்கி அலையை வீசியெறியும் பாங்கே தனி. இப்படியே போய்க்கொண்டிருந்த இரு மாதங்களில் பல நூறு கவிதைகள் பிரசவித்தன. அவை அனைத்தும் ஊனக் கவிதைகளாகவே மலர்ந்து பின் இறந்தும் தொலைக்கும். ஆனால், தொடர்ந்து ஓயாத புணர்தலும் ஓயாத பிரசவங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
எப்படி சுற்றுலாவாசிகளுக்குக் கடல்பார்ப்பதும், பனிமலை பார்ப்பதும், மிருகங்களைக் காண்பதும் கிளர்ச்சியோ அப்படித்தானிருந்தது எனது கடல் பார்த்தலும் கவிதை நெய்தலும்... எல்லாம் ஓர் கணம் அலுத்தது. வாழ்வாதாரத்துக்காகத் தங்களை அழித்துக்கொண்டு மண்ணின் மரபோடு வாழும் அந்நிலத்தின் மக்களுக்குப் பார்வையாளர்களைக் காணும்போது ஒரு எள்ளல் நிகழுமே அத்தகைய எள்ளல்தான் அன்று நடந்தது.
கடல் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தபோது தூரத்து மீனவ குடிசையிலிருந்து ஒரு பெரியவர் நடந்து வந்துகொண்டிருந்தார். அவர் என்னை நோக்கித்தான் வருகிறார் என்பது புரிந்ததும் அமைதியாகக் கடலை பார்த்துக்கொண்டிருந்தேன்.
காற்றைக் கிழித்தபடி, அலையோசையைத் தகர்த்தபடி வந்தது அவரது குரல். 'பரதேசிப் பயலுங்க... டேய் தம்பி ஏண்டா சாக்கடையில் மூக்க நீட்டிக்கிட்டிருக்க... சுத்தி இருக்கிற எல்லாம் சாக்கடைடா... இந்தா... ஒரு காதம் கருப்பா இருக்கே கடலு... அது கருப்புப் பிசாசு... மீனெல்லாம் முழுங்குற இந்தக் கருப்பு பிசாசு மனுசனால வந்தது...’
தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அந்தப் பேருண்மையைத் தாங்குகிற பக்குவமற்று அங்கிருந்து கிளம்பினேன். நான் நடக்க நடக்க அவரும் தொடர்ந்து கொண்டே வர, ஒரு கட்டத்திற்கு மேல் வார்த்தைகளின் வீரியத்தை எதிர்கொள்ள முடியாமல் ஓடினேன். அவரும் என்னை விரட்டியபடியே வந்துகொண்டிருந்தார்.
காட்டாறென மனம் சுழன்று சுழன்று ஓடியது. இம்மண்ணை பாழ்ப்படுத்தும் இந்தக் கடலைச் சாக்கடையாக்கிடும் செயலில் எனக்கு ஏதோ பங்கிருப்பதாகத் தோன்றியது. புலம் பெயர்ந்து சென்னையை உருவாக்கிய மனிதர்களால், அவர்களின் அசுத்தங்களால், அவர்களின் பேராசைகளால், கொடும் பாவச்செயல்களால் இந்த மண் நிரப்பட்டிருப்பதை அவதானித்தேன். ஆனால், வேறுவழியென்ன...
பெருகி வரும் கனவுகளுக்கு, ஆசைகளுக்குக் கடிவாளம் போடத்தெரியாத மனிதன் இயற்கையைச் சீண்டுகிறான். இதற்குத் துன்பத்தைக் கொடுத்துப் பெருந்துன்பத்தை ஏற்படுத்தியும் கொள்கிறான். அதன் பிறகான தினங்கள் அவ்வளவு இனிப்பானதாக இல்லை. கடலுக்குச் செல்லவே பயமாக இருந்தது. கழிவு கருப்புப் பிசாசு கடலை விழுங்கிக்கொண்டிருப்பதை நினைத்தாலே பதறியது. இனி இந்த இடம் வேண்டாம். கடல் வேண்டாம். மருந்துக் கம்பெனி வேண்டாம். முடிவெடுத்துவிட்டேன்.
ஒரு பின்னிரவில் துணிகளை அடுக்கிக்கொண்டு நேராக ராணி அண்ணா நகருக்கு ஏற்கனவே இருந்த இருவரோடு நானும் சேர்ந்துகொண்டேன். சினிமாதான் இனி... இனிமேல் எப்பவும் சினிமாதான். அதை புகழ் அண்ணனிடமும் உடனிருந்த ராமதாஸிடமும் எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
இராணி அண்ணா நகரில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு மேலே மொட்டைத் தளம். அதில் ஏற ஒரு சிறு ஏணி... இரவுப் படுக்கை அந்த ஒரு புறம் சாய்ந்த கூரையில்தான். இப்படித்தான் துவங்கி நீளும் எங்களைப்போலவே அங்கிருந்த அந்தக் குடியிருப்பு மனிதர்களுக்கும்.
நிலவை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் நான் படுத்திருந்தபோது என்னருகே அணைத்து வைத்திருந்த துண்டுபீடியைப் பற்ற வைத்தபடியே பேசினார்.
'நீ இவ்வளவு அழுத்தமா எந்தக் காரணமும் சொல்லாம இங்க இருந்தாலும் எனக்குத் தெரியும்... நீ எதுக்கு வந்திருக்கேனு. சினிமாவுக்குத்தானே. நான் புகழ்கிட்ட பேசிட்டேன். உனக்கு வேலை சீக்கிரம் கிடைக்கும்’
எனக்குப் பெருமிதமாக இருந்தது. நான் சொல்லாமலே புரிந்துகொண்டது இனித்தது. ரொம்ப சிரமமென விரட்டிவிடாமல் மௌனமாகக் கூர்ந்துபார்த்து புரிந்துகொண்டது பிடித்திருந்தது. நானும் வெளியே அங்கங்கே இரைதேடச் சென்ற இடங்களில் மிகப் பெருமையாகச் சொல்லிக்கொண்டேன்.
அஸிஸ்டென்ட் டைரக்டர் என...
மிகுந்த சிரமங்களுக்கு இடையில் உங்களுடன் சென்னையை, அதன் வலிகளை, வாழ்க்கையை, மனிதர்களை எனப் பேச நிறைய இருந்தாலும் நினைவுதப்பிப் போன நாள்களை உள்ளிழுக்கும் முயற்சியாகப் பெரும் மூச்சைச் சேகரித்து வாழ்க்கையைத் துப்புவதற்காக எனக்கு ஒரு சிறு இடைவெளி தேவைப்படுகிறது. அந்த இடைவெளியை நானே ஏற்படுத்திக்கொள்கிற ஒரு அர்த்தத்தோடு மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு பேசுவோம் சென்னையை!’’

(பலித்தது...)

 http://en.vikatan.com/article.php?aid=26589&sid=785&mid=31

This entry was posted on Monday, 2 September 2013 at 14:36 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment