Posted by நாண்

பச்சை என்கிற காற்று..நிரம்பி வழியும் வலிகள்…-2


இருட்டிலிருந்தேன் ,,.
வலியை விடக் கொடுமையானது இருட்டு..வழி வழியாய் பழக்கப்படுத்தப்பட்ட இருட்டு அச்சமூட்டக்கூடியது.அதிலும் எதுவென்று புரியாமல் மனதை அலைகழிக்கும் இருள் வெறுமையை பீறிட்டு எழ செய்கிறது.எனக்கு இப்போது அப்படித்தானிருந்தது..
வானத்தில் கருத்த மத யானைகள் சிவசேனைகளை போல பால் நிற மேகங்களை துரத்தி பிடித்துக்கொண்டிருந்தன. மும்பை கலவர வெளிகளில் ஓடி ஒளிய இடம் தெரியாமல் பதைத்து போன சிறுமியின் முகத்திற்கு ஒப்பாய் இருந்தது நிலவின் பதட்டம்.
நானும் நிலவை போலவே கருத்துக்கிடந்த காரைத்தரையில் படுத்திருந்தேன்.ஏன் இப்படி ஆணோமென மனது குமைந்து கொண்டிருந்தது.தூங்க முடியவில்லை.சாலைகளில் நாயின் ஊளை கூட நின்று விட்டது..காற்றும் மனிதர்களின் மீதான நேசத்தை நகரமயமாக்களால் தொலைத்து விட்டிருந்தது..
இந்த வயதில் காதல் என்கிற மாயவலை தேவைதானா?..நாட்களை எண்ணி நகர்த்துகிற எனக்கு அவசியமில்லாத தேவைதான் இது .ஆனாலும் பிடரி மயிரை பிடித்து உலுக்கும் மனதை என்ன செய்ய..ஒருவேளை எண்ண ஓட்டங்களை தடைப்படுத்தும் இயந்திரம் ஏதேனும் உருவாக்கப்பட்டிருந்தால் இந்த இரவில் வானத்தையும் அவ்வப்போது அலைபேசியையும் பார்த்துக்கொண்டிருக்கிற அவலம் இருந்திருக்காதோ..குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பியும் ஓய்ந்தாகி விட்டது.விடியும் வரை இனி எந்த பதில்களும் வரப்போவதில்லை. விடிந்தாலும் பதில் வருமா என்பதும் நிச்சயமில்லை. தொடர்ந்த பல இரவுகளில் நானே தொடங்கி நானே முடிக்கும் பேரவலம்..
மூன்று நாட்களுக்கு முன்பு பேசினாள்.அப்போது கூட ஒரு தேர்ந்த நடிகைக்கே உண்டான மனோபாவத்துடன் எனது வலிகள் வார்த்தையாக விழும்போதெல்லாம், அம்மா கூப்பிடுவதாக துண்டித்து விடுவாள் .அந்த தேவதையை சிந்தித்தே மனது குமைந்து இரவுகளை தின்றது.
ஆம் அவள் தேவதை தான் ..என் படத்தின் நாயகி தேவதை தான்..
=========================================================================================================

அலைபேசியில் “ஏலேலோ எலலேலோ “என என் படத்தின் பாடல் சிணுங்கியதும் சட்டென விழிப்பு வந்தது.திடுக்கிட்டு எழுந்தபோது பாயை விட்டு நகர்ந்த கை மொட்டை மாடியின் தரையில் சுட உதறியபடி எழுந்தேன்.
அவள் தான் அழைத்திருந்தாள்..
சிணுங்கிய தொலைபேசியில் தேவதை என்கிற அவளின் பெயரையே பார்த்தபடி இருந்தேன்.எந்த்தனை அவமானங்களுக்கு இடையில் இந்த அழைப்பு ..?எடுக்க வேண்டாம் .நிறுத்திக்கொள்வோம் .எனது கட்டுப்பாடு உடைந்து சிதறுவதற்க்குள்ளாக தொடர்பு அறுந்தது.
“என்னா சார் வெயிலு அடிச்சது தெரியாமா இருக்கீங்க..?”
பக்கத்து வீட்டு குண்டம்மா துணிகளை காய போட்டபடியே கேட்டாள்..
நான் பதில் ஏதும் பேசாமல் அவளையே ஒரு கணம் பார்த்துக்கொண்டிருந்தேன். குண்டம்மாவிற்க்கு குறைந்தது 45 வயதிருக்கும்.பெரிய…ரொம்ப பெரிய…உருவம். அவளது கணவருக்கு 60 வயதிற்கு மேல். இயலாமையின் நெருக்கத்தை அனுபவிப்பது எப்படி என அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. சைக்கிள் கடை வைத்து நடத்துகிற சுசிலாவின் கணவர், அதாங்க குண்டம்மாவின் கணவர், தினம் வீட்டு செலவுக்கு 40 ரூபாய் கொடுப்பார். அதில் மூன்று வேளையும் விதவிதமான உணவை செய்வாள். அதிலும் மிச்சம் பிடித்து வட்டிக்கு விடுவாள். அதட்டலான குரல். அன்பானவள். அன்பை கூட கோபமாகவே பேசுவது அவளின் இயல்பு. அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் 6 ,8 வயதில் இருக்கின்றன..
நான் அவளிடம் எதுவும் சொல்லாமல் பாயை சுருட்டியபடி கீழே வந்தேன் எனது வீட்டில் தொப்பி ராசா என்கிற ஏகலைவன் சுருண்டு தூங்கி கொண்டிருந்தான். எனது உதவியாளன் .அவன் எப்பொழுதும் இப்படித்தான். நிறைய இடமிருந்தாலும் ஏதாவதொரு மூலையில் உடம்பை குறுக்கி கொண்டு கால்களை கையால் கட்டிப்போட்டபடி உறங்குவான்.. சில நேரம் அது தாயின் கருவறையில் இருக்கிறானோ என எண்ணத் தோன்றும், அவன் கால்களில் இருந்து கட்டு இன்னும் அவிழ்க்கப் படவில்லை. படப்பிடிப்பில் நாங்கள் கேட்ட இடத்தை கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதிக்க வில்லை..எல்லாம் பணம் படுத்தும் பாடு. ஆனால் நாங்களோ கையில் பணமே இல்லாமல் படமெடுக்கிறோம். பின் எப்படி அனுமதி கிடைக்கும் ..அவசர அவசரமாக நாங்கள் தங்கியிருந்த பாழடைந்த கட்டடத்திற்கு வண்ணம் தீட்டி, அங்கேயே படப்பிடிப்பை நடத்த முடிவு செய்து எனது உதவி இயக்குனர்கள் எல்லோரும் சேர்ந்து காவல் நிலையம் போல உடனே உருவாக்கினார்கள். அப்பொழுது வண்ணம் அடிக்க மேலே ஏறியவன், கீழே விழுந்ததால் இந்த கட்டு. படப்பிடிப்பை முடித்து வந்து இவ்வளவு நாளான பிறகும் கூட நாங்கள் அந்த கட்டடத்திற்கு மாற்று வண்ணம் பூசவில்லை..எங்களின் வலியின் நீட்சியாக அது அந்த ஊரில் மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. இங்கே அவ்வப்போது விந்தி காண்பித்து அதை தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறான் ஏகலைவன்.
நானும் அவனருகே பையை போட்டு விட்டு தூங்க முயற்சி செய்தேன். தூங்க முடிய வில்லை கண்கள் படுத்த படியே அறையை நோட்டம் விட்டது. இவ்வளவு நாட்களும் தோன்றாத வெறுமை என்னை ஆட்கொண்டது. வெறுமை…அடர்ந்த வெறுமை.. யாருமற்ற கொலைக் களத்தில் நான் மட்டும் குற்றுயிரோடு நிற்பதை போலிருந்தது அந்த கணம்..
அப்போது மீண்டும் அலைபேசி ஒலித்தது. அவளாக இருக்குமோ..ஏன் இப்படி நெஞ்சை பிழிகிறாள் ..அவளை விட்டு விலகி நிற்கவே முடியாதோ. உடனடியாகவே மாறிப்போன அவளின் பேச்சு ,சிரிப்பு, எல்லாத்தையும் கலைத்து விட்டு சாதாரண தேவதை என்கிற அடையாளத்தோடு பேசவோ, சிநேகம்கொள்ளவோ, குறைந்த பட்சம் கடைசி மனிதனிடம் காட்ட வேண்டிய பரிவு கூடவா இல்லாமல் போய் விடடாள்.. இப்போது நான் அலைபேசியை எடுத்தாலும் என்ன சொல்லுவாள்
“ஹலோ ,எந்தாச்சி,என் கூட பேச மாட்டிங்களா..எந்த பிராப்ளம் நீங்கள் புரியல,நோட்ஸ் எழுதி,பின்னே காலேஜ் போய் ,…”
இப்படி இன்னும் இன்னும் எத்தனை எத்தனை வாதங்களை முன் வைப்பாள்..படப்பிடிப்பு முடிந்து விடைபெற்ற தருணங்களிலிருந்து அவளது நடவடிக்கை இப்படித்தான் இருக்கிறது, வேண்டாம் வேண்டவே வேண்டாம். அலைபேசியை ஒரு முறை எடுத்து பார்த்தால் கூட மனசுபகடை சறுக்கி விடும் என பல்லைக் கடித்தபடி கண்களை இருக்க மூடிக்கொண்டேன்..
” எலலேலோ ..”.ஒலித்தபடியே இருந்தது..

This entry was posted on Saturday, 21 May 2011 at 11:23 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment