அவள் அப்படித்தான் சொல்வாள்...  

Posted by நாண் in , , , , ,

கனிவு செழித்துக் கிடந்த கார் காலம்...
அவள் அப்படித்தான் சொல்வாள்...
மினுக்கட்டான்கள் மின்னும் நேரங்களில் ஓயாமல் சொல்வாள்
கார் காலம் தொடங்கி விட்டதாக..
தட்டான்கள் சூழ்ந்த இருள் ஒன்றின் பொழுதும்...
ஓடையிலிருந்து பெருகி வரும் செம்மைநீரின் சுவடுகளை வைத்தும் ...
குளிர்ந்த வெப்பம் பெருகியோடும் கணங்களில் கூட
அப்படித்தான் சொல்வாள்..
அந்த நாட்களிலெல்லாம் அவள் வேப்பம் பூ சொறியும்
தூளியில் அமர்ந்தபடி கோடிக்கணக்கான கதைகளை சொல்லிக் கொண்டே இருப்பாள்..
அவளுக்கு மகரந்த நாட்கள் அவை மட்டுமே..
அவளது கதைகள் கேட்கவென நிலவின் வெம்மையிலிருந்து மையெடுத்து இதயத்தில் பூசிக் கொள்வானவன்
அவ்வளவு தூய்மையான கதைகள் அவை..
தானும் அப்பொழுதுகளில் தூய்மையடைவதாக நம்பினானவன்...
அவள் கதைகளை தாழம்பூ நறுமணத்தோடு படர விட்டிருந்த
அந்த அந்தியில் அவனுடனே சிலர்
அமர்ந்திருப்பதையும்
அவள் சொல்லிய கதைகளின் பறவைகளாகவும் அவனுக்கு தோன்றியதுண்டு...
அவள் எனக்கு முதன் முதலாக சொல்லியக் கதை
மரங்கொத்திகளுடையது...
யூக்கலிப்டஸ் இல்லாத அடர்ந்த வனமது...
வயிற்றிலிருக்கும் முட்டைகளுள் ஆறு குட்டிகளையும் ஈன
தாய் மரங்கொத்தி கிளை தேடிக் கொண்டிருந்தது..
படுக்கையை அழகில் கொத்தியபடி
தந்தை பறவை முன்னால் சென்று கொண்டிருந்தது..
இலைகளே கிளையாக பூத்திருக்கும் கருணை மரம் அவைகளுக்கு வாழிடம் கொடுத்தன...
வாழிடத்தின் கிளையெங்கும் ஏராள பறவைகள்
இளைப்பாறின..
அந்த ஆலமரத்தின்
வேரொன்றில் பாறையும்
பாறையொன்றில் பெருங்குகையும்
குகையின் வழியே நீண்ட தடத்தின் வெளியில் நாமிருப்பதாகவும் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்.
இப்பொழுதெல்லாம் அவை தூர்ந்து விட்டன...
குகை மனிதர்கள்
விண்ணதிரும் கட்டிடங்களில் ஆலமரத்தை கண்ணாடிக் குடுவைக்குள் பூட்டி வைத்திருந்த கதையை அவள் சொன்னாள்..
மரங்கொத்தியின் குட்டிகள் எங்கே என்றானவன்..
அந்த குட்டிகள் வானத்திலிருந்து நகர சாலையில் தலைக் குப்புற விழுந்து மாய்த்துக் கொண்டன..
கடைசி குட்டி தான் தானென்றாள்..
ஆதி நிலத்தின்
தேவதை அழிக்கப்பட்ட கதை சொல்ல தன்னை பணித்தாளென்றாள்..
பல ஆயிரம் ஆண்டுகளாக கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றாள்..
அவளின் கண்களில் நீலம் உறையத் தொடங்கியது..
நகரம் சிரித்து கொண்டிருந்தது..

திசைக்காட்டி இதழுக்கு எனது நேர்கானல்...  

Posted by நாண்

தனித் தமிழீழம் சாத்தியமா? இல்லையா? என்ற கேள்வியே அவசியமற்றது. – இயக்குநர் கீரா..

kera 1
இயக்குநர் கீரா என்கிற மூர்த்தி. இவரின் ஊர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம். தங்கர்பச்சானிடம் உதவி இயக்குநனராக பணியாற்றியவர். ‘தமிழு’, ‘வதை’ ஆகிய குறும்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பச்சை என்கிற காத்து’ திரைப்படத்தின் மூலம் யதார்த்த சினிமாவின் புதிய பரிமாணம் கொடுத்தவர். ஊடகங்களையும், திரைத்துறையைச் சார்ந்தவர்களையும் பிரம்மிக்க வைத்த படம் ‘பச்சை’. முதல் படத்திலேயே படத்தின் பங்களிப்பாளர்கள் பெயர்கள் மிக நேர்த்தியாய் தனித் தமிழில் இடம்பெற்றது போற்றுதலுக்குறியது. புதுமுகங்கள் நடித்த இந்த படைத்தை மீடியாக்களும், விமர்சகர்களும் பெரிதாக சிலாகித்து எழுதிய படம். மண் சார்ந்த உணர்வுகளுடன், யதார்த்தமான நல்ல கதைகளுடன் நையாண்டி, காதல், வன்மம், அரசியல் என அழகிய பதிவுகளுடன் கூடிய கிராமத்து வாழ்க்கையை நிதர்சனமாய் படம் பிடித்தவர். இயக்குநர் முதல் படத்திலே தன் பக்கம் சினிமா ரசிகர்களை மட்டுமல்ல, தன்மானம் உள்ள தமிழர்களையும் ஈர்த்துள்ளார் என்பது மிகையல்ல. அடுத்த படப்பிடிப்பு வேலைகளுக்கிடையில் திசைகாட்டிக்காக நேரம் ஒதுக்கி நேர்காணல் கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்து கேள்விகள் தொடுத்தோம்.
keera 1உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்?
எனது ஊர் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் என்னும் கிராமம். முழுக்க உழைக்கும் மக்களை மட்டுமே கொண்ட விவசாய பூமி… வானம் வெப்பலை பொழிந்து கரட்டு தூவல் மிதந்து கிடக்கும் மண் எங்களுடையது… வறண்ட நிலத்தில் செழிக்கும் இருங்கு சோளம் மற்றும் கடலை, மொச்சை விளையும் அந்த மண்ணில் முக்கிய வாழ்வாதாரமாக வெங்காயம் விளைகிறது. ஆம் அதுவே எங்கள் மக்களின் குடி பயிர். எனது குடும்பம் முற்றிலும் விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. அப்பா வடிவேல் – அம்மா அலற்மேல் எனக்கு மேல மூன்று அண்ணன், ஒரு அக்கா நான்தான் கடைசி. இதில் அப்பாவும் இரண்டு அண்ணனும் இறந்து விட்டனர். நான் என் இணையர் தனலட்சுமி, மகன் வைகறையாழன் மற்றும் மகள் மதிவதனியுடன் 15 ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன்.
உங்கள் அரசியல் பற்றி?
எமது அரசியல் பெரியாரியத்தில் தொடங்கி, மார்க்சியத்தில் தெளிவடைந்து எம் மண்ணுக்கான தமிழ் தேசிய அரசியலில் வந்து நிற்கிறது. தமிழ் நாட்டில் எமக்கு தலைவன் பேராசான் தோழர் பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் வழியிலும், தமிழீழத்தில் மேதகு பிரபாகரன் அவர்களின் வழியிலும் எனது அரசியல் தடம் பயணிக்கிறது.
திரைத்துறையை ஏன் தெரிவு செய்தீர்கள்?
திரைத்துறை தமிழர்கள் வசமாகவேண்டிய அவசியமும் தேவையும் தமிழர்களுக்கு இருக்கிறது. கலை மீது கொண்டிருந்த தாகமும், தமிழர்களுக்கான அரசியலை ஊடகத்தின் மூலமும் கொண்டு செல்ல முடியும் என்கிற திடமான நம்பிக்கையும் கொண்டிருந்ததால் திரைத்துறைக்கு வந்தேன். ஆனால் பல கசப்புகளை அது கொடுத்திருக்கிறது. கசப்பை தின்று செரித்துக் கொண்டிருக்கிறேன். அதுவே எம் மக்களுக்கான சினிமாவை நோக்கி நகர்த்தும் என்கிற நம்பிக்கையோடு…
புதுமுகங்களைப் பயன்படுத்தியதின் நோக்கம் என்ன?
புதுமுகங்களை பயன்படுத்துவதில் ஒரு நோக்கம் இருந்தது. தமிழர்க்கான அரசியல் சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மக்களும், ஒரு விடுதலை இயக்கமும் முற்றாக நசுக்கப்பட்ட பொழுது, எம் மக்களின் உழைப்பில் திளைத்த பெருங்கூட்டம், அந்த அவலத்தை பேசாத வேற்று மொழி நடிகர்களின் பாராமுகமுமே இத்தகைய மனநிலைக்கு தூண்டியது. அதோடு நான் தேடிய அந்த கதைக்கான முகங்களுடன் கூடிய மனிதர்கள் கிராமத்தில் மட்டுமே இருந்தனர். பொதுவாக இது போன்ற அசாதாரண வாழ்வைக்கொண்ட கதைகளைப் புதிய முகங்களை வைத்து நேர்த்தியாக எடுப்பது சிரமம். ஏனெனில் நடிகர்கள் எப்பொழுதும் நடிக்க தயாராக தங்களை வைத்திருப்பர். புதிய முகங்களுக்கு விளக்க வேண்டும். ஒவ்வொரு அசைவையும், பார்வையையும் அவர்கள் உள்வாங்க வெகுநாட்கள் பிடிக்கும். மிக கடுமையான, சவாலான பணி.
நண்பர் பச்சையை பற்றி சொல்லுங்கள்?
பச்சை எனது நண்பனல்ல. எனது நண்பனின் நண்பன். பச்சை இறந்து போன பிறகுதான் அவனை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நான் எப்படி அவனை தெரிந்து கொண்டேனோ அதை அப்படியே காட்சி படுத்திருக்கிறேன். அதுவே அந்த கதைக்கு செய்யும் நேர்மையாக உணர்ந்தேன். அதுவே புதிய வகை கதை சொல்லல் உத்தியாக பேசப்பட்டது. பச்சை என்பது தனி மனிதன் அல்ல, இந்த சமூகத்தின் மனசாட்சி. திமுக, அதிமுக மற்றும் இன்ன பிற ஓட்டரசியல் கட்சிகளிலும், நடிகர்களுக்காக திரையரங்க வாசலில் முதல் தோரணம் கட்டி கொண்டிருப்பவனில் ஒருவனாக அவன் இருக்க வாய்ப்புகள் அதிகம். துரோகங்களை மறந்து கூட சிலர் தங்களது கட்சிக்காக வாதாடும் எவனோ ஒருவன் கூட எனக்கு பச்சையை நினைவுக்கு கொண்டு வருகிறான்.
உங்கள் படத்தில் இடம்பெறும் பாடல்களில் இனம் காக்க போரிட்ட என் தம்பி கொடியவனா‘, ‘சிங்கம் புடிச்ச காட்டையெல்லாம் புலியா புகுந்து மீட்க போறான்‘, இனம் காக்க போரிடுதல் கொலை என்று ஆகிடுமா?’, எலும்பா இருந்த மனுசனக் கூட புலின்னு சொல்லிக் கொன்னுப்புட்டான்‘, தரை தட்டி நிக்குது வணங்காமண் கப்பல்‘, விழ விழ எழுவோம்என வரிகளை பயன்படுத்தி தமிழர்களின் வலியை பிரதிபலித்திருக்கிறீர்களே அதைப்பற்றி சொல்லுங்கள்?
அதை பற்றி சொல்ல இனி என்ன இருக்கிறது… அது எங்களின் அழுகை, கண்ணீர், வலி, ஆசை, மனஉறுதி, வீரம்….ம்ம்ம் அது எதுவுமே எங்களிடம் தற்பொழுது இல்லை. நாடகத்தின் உச்சகட்டத்தில் பார்வையாளன் ததும்பி அழுது, பின் ஆசுவாசப்படுவது போல எல்லாம் முடிந்து விட்டது. 2006இல் ‘வதை’ குறும்படதிற்கு ஈழம் சார்ந்த கதையை எடுத்த பொழுது கேள்விப்பட்டதை தொகுத்து எடுத்தோம். 2009இல் அதை ஒளி(லி)யாக காணக் கிடைத்தபொழுது அதிர்ந்து விட்டேன். நான் எடுத்தது போல பல மடங்கு வன்முறைகள், பாலியல்கள், எம் இனத்தின் கதறல்கள், இதை சொல்லும் பொழுது கூட ஒரு கணம் நெஞ்சு நடுங்குகிறது.
keera 2தற்போது தமிழகத்தில் தலித்துகள் மீதும், அவர்கள் இருப்பிடம் மீதும் வன்முறைகள் நிகழ்த்தப்படுவதை எப்படி பார்கடகிறிர்கள்?
முட்டாள்கள் இனம் கொத்துகொத்தாக சாகும் பொழுது சாதிக்காரனை திரட்டி நிற்க முடியாத கோழைகள், தங்களது அரசியல் சுய லாபத்திற்காக மக்களை சாதியாளர்களாக மாற்றும் கேவலம் நமது தேசத்தில் தான் நடக்கும். சாதியை பகுத்து கொடுத்தவனின் காலில் விழுந்து கொண்டு, தனக்காக கடும் உழைப்பை கொடுத்தவன் மீது வன்முறையை ஏவுவது கேவலம். இராயிரம் ஆண்டுகளாக அடிமை படுத்தியவன் மேலே ஒரு படி எழுவதை கூட பொறுக்க முடியாமல், இரண்டு தலைமுறைகளாக சேகரித்ததை அந்த மூன்று கிராமங்களை எரித்ததுதான் உச்சபட்ச வன்மம். நாகராசன், இளவரசன் படுகொலைகளின் நீதியை இந்த சமூகம் ஒரு போதும் தரப்போவதில்லை. பா.ம.க.வை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்றுவது மக்களின் கடமை. அதோடு உருவாகும் ஒடுக்கப்பட்டோர் அல்லாதவர் கூட்டணியையும் வெளியேற்ற வேண்டும். ஒடுக்கப்பட்டவன் சங்கம் தொடங்குவது சமூக நீதி என்பது புரியும் பொழுது தான் சாதி சங்கங்கள் நீர்க்கும்.
மூன்று தமிழ் மரண தண்டனைக் கைதிகளைப் பற்றி…?
மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். மூவரும் அந்த கொலையில் சம்மந்தபட்டிருந்தால் கூட கொலை செய்யும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை. இதுவரை அரசு நடத்திய போலி என்கவுன்டர்களுக்கு அதை செய்தவர்களை, அரசின் அடியாள்களை தூக்கிலிட்டு விட்டு பின்பு பேசட்டும். நீதி குறித்து உண்மையான அரசு உண்மையாளர்களை விடுதலை செய்து, அவர்களின் வாழ்க்கைக்கு நீதி தர வேண்டும். உண்மையான குற்றவாளிகள் வெளியில் இருக்கும் பொழுது எம் அண்ணன்களை தண்டிப்பது எந்த வகையான நியாயமும் இல்லை.
ஈழத்தில் இனப்படுகொலை பற்றி…?
இனப்படுகொலை செய்தது இலங்கை அல்ல இந்தியா என தெரிந்தும் அந்த நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது சொந்தங்களை நமது தேசம் என நம்பிக் கொண்டிருக்கும் ஒரு நாடு படுகொலை செய்தது. அந்த நாட்டில் நாம் எதுவும் பேச இயலாமல் இந்தியன் என பெருமை பேசும் ஒரு வாய்ப்பு உலகத்தில் எந்த இனத்திற்கும் வாய்க்காது. கொத்து கொத்தாய் கொல்லப்பட்டது உலகிற்கே தெரிந்தும் நிலவும் கள்ள மௌனம் கேவலமான ஒன்று. தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் முகங்களில் தொங்கும் சதைகளின் உள்ளே எம் இன கனவு புதைக்கப்பட்டிருக்கிறது.
உலக நாடுகள் எல்லாம் இலங்கைக்கு ஆதரவாக உள்ள இக்காலகட்டத்தில் தனி ஈழம் சாத்தியமா?keera 4
தனி ஈழம் சாத்தியமா? இல்லையா? என்ற கேள்வியே அவசியமற்றது. தலைவர் உருவாக்கிய தனி ஈழத்தில் கொஞ்ச காலம் வாழத்தானே செஞ்சோம். இப்ப எதிரி கைக்கு போயிருக்கு அதற்கு காரணம் துரோகம். இனி அப்படி நடக்காம பார்க்கணும். மலையக மக்களையும், முஸ்லிம் மக்களோடையும் இணைந்து தமிழ்நாட்டு தமிழர்களும் சேர்ந்து மாற்று திட்டம் உருவாகனும். உலக நாடுகள் நமக்கெதிரா நிற்கிறது வலியவன் வென்றான் என்கிற அடிப்படையில் அது எப்ப வேணுமானாலும் மாறும் அது வரைக்கும் நமது தவறுகளை களைவோம். மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து தலைவரின் கனவை, ஈழத்தை பெறுவோம். தற்போதைய முதல் தேவை சிறப்பு முகாம்களில் இருக்கும் நமது மக்களின் வாழ்வாதாரத்தை சரி வேண்டும். மீண்டும் பொருளாதார கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும். உலகம் பரந்து நிற்கும் சொந்தங்கள் அதற்கான பணியில் ஈடுபட வேண்டும். மக்களை மீட்பது தான் முதல் பணியாக இருக்க முடியும்.
கம்யூனிஸ்டு கட்சிகள் அடித்தட்டு மக்களின் அத்தியாவசிய தேவைக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தேவை என்கிறார்கள். பெரியாரியத்தில் தொடங்கி, மார்க்சியத்தில் தெளிவடைந்ததாக சொல்லும் நீங்கள் எப்படி பார்க்கிறிர்கள்?
யார் கம்யுனிஸ்டுகள்? என்னும் கேள்வியிலிருந்து தொடங்குகிறது உங்களின் கேள்விக்கான பதில். இவர்கள் கம்யுனிஸ்டாக தங்களை நம்பி கொண்டிருக்கிறார்கள். ஏன் நானும் கூட அப்படித்தான். உண்மையான பொதுவுடமை வாதி மார்க்சியத்திற்கு துரோகம் இழைப்பதில்லை. ஓட்டரசியலுக்காக எல்லா சமரசங்களையும் செய்து கொண்டு பிழைப்பு நடத்துவதை தவிர வேறொன்றும் செய்யவில்லை. விஞ்ஞானத்தை மார்க்சியம் வர வேற்கிறது, ஆனால் அது மக்களின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும். மக்களை அழிவுபாதைக்கு இட்டு செல்ல கூடாது. ரசியாவின் செர்னொபில் அனணு உலையால் பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்களின் வாழ்வை அறிந்து கொண்டே இவர்கள் முகமூடிகளை ஒருங்கிணைந்த இந்தியாவின் மீது திணிக்கிறார்கள். ஒரு வேளை கூடங்குளம் அணு உலை அமெரிக்காவால் வந்திருந்தால் எதிர்த்திருப்பார்கள். ஏனெனில் ரசியா, மற்றும் சீனாவில் இருந்து எது வந்தாலும் அது நல்லதென்றும், பிற நாடுகளில் இருந்து எது இறக்குமதி செய்யப்பட்டாலும் அது தீங்கிழைப்பவை என்றும் இவர்களுக்கான மந்திரவாதிகள் சொல்லி தந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் சொல்வதை புறக்கணிப்போம். அணு உலைக்கு மாற்றாக மின்சார உற்பத்திக்கு எவ்வளவோ தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. காற்றாலை மூலம் பெருமளவு நமது தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதை ஊக்கப்படுத்த வேண்டிய அரசுகள் திட்டமிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க, சொந்த மக்களை பலியிட துடிக்கிறார்கள். ஒப்பந்த பத்திரத்தில் விபத்து நடந்தால் ஒருங்கிணைந்த இந்திய அரசுதான் அதன் இழப்பீட்டிற்கு முழுபொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதற்கு கையொப்பம் இட்டவர்கள் எப்படி மக்களுக்காக செயல்படுவார்கள். “போபாலில்“ விசவாயு தாக்கி கொல்லப்பட்ட மக்களின் பிணத்தின் மீது நின்று குற்றவாளியை பாதுகாத்து அனுப்பி வைத்தவர்கள் தான் அணு உலை பாதுகாப்பானது என குதிக்கிறார்கள். பெரும் பணம் செலவு செய்து விட்டதாகவும், அதனால் திறந்துதான் தீர வேண்டும் எனவும் பேசும் அரசுக்கு இந்த போலிகள் மாவறைக்கிறார்கள். ஏன், சேது கால்வாய் திட்டமும் தொடங்கி பெரும் பணம் செலவிடத்தானே செய்தார்கள். அது ஏன் அணில்கள் கட்டியதாக கதை விடும் மணல் திட்டிற்காக திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நமக்கு சேது திட்டமும் பவள பாறைகளை அழிக்கும், மீன் இயல்பான உற்பத்திக்கு எதிரானதாக இருப்பதால் மறுக்கிறோம்.
நாடு முழுவதும் ஒரே கல்வித்திட்டத்தை (சமச்சீர் கல்வி) வரவேற்ற நாம், அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலம் என்பது அரசு பள்ளியில் படிக்கும் அடித்தட்டு மாணவர்களின் தரத்தை மேலும் உயர்த்தும் தானே? அதை ஏன் எதிர்க்க வேண்டும்?
உண்மையில் அரசு சொல்லும் ஆங்கிலவழி கல்வி திட்டம் என்பது ஒரு இயலாமையின் வெளிப்பாடு. திராவிட அரசுகள் நம்மை காலம் காலமாக தொடர்ந்து ஏமாற்றி வருவதன் தொடர்ச்சி. திராவிட அரசுகள் உருவான பின்புதான் “மெட்ரிக்“ எனப்படும் பதின்நிலை கல்வி கூடங்கள் தமிழ் நாட்டில் பெருகின. அவர்கள் தான் திட்டமிட்டு வளர்த்தெடுத்தார்கள். இந்திக்கு மாற்றாக இரு மொழிக் கொள்கை என்பது சரிதான். ஆனால், அந்த இரு மொழிக் கொள்கை திராவிட அரசுகளால் ஆங்கில மோகத்தை கட்டமைக்கவே பயன்பட்டது. தாய் மொழியில் அறிவியலை கொண்டு வராமல் தாமதப்படுத்துவது. மக்களின் புழக்கத்திற்க்கு வந்த பிறகு அறிவியலால் ஏற்பட்ட தொழில் நுட்பங்கள் பழகிய பிறகு அதை தமிழ் படுத்த முனைவது என ஏமாற்றினார்கள். உண்மையில் ஒரு தொழில் நுட்பத்தை தருவிக்கும் பொழுதே அதனை வல்லுனர்கள் கொண்டு தாய் மொழியில் உள்வாங்கப் பட்டு மக்களுக்கு பகிர்ந்திருக்க வேண்டும். ஆனால் திட்டமிட்டு காலம் கடத்தி மக்கள் ஆங்கில சொற்களுக்கு அடிமையான பிறகு அதை தமிழ் படுத்தியதாக தம்பட்டம் அடிக்கும் பொழுது, தாய் மொழி பின்னுக்கு செல்கிறது.
கற்றல் மொழி முன்னுக்கு வருகிறது. இது ஒருவகையில் பார்த்தால் வளர்ச்சியாக தோன்றும். ஆனால் தமிழ் வழியில் கற்ற கிராம புற மாணவர்களையும், பெற்றோர்களையும் நகர் புற வாசிகளிடமிருந்து தாழ்த்தி வைக்கும் முறையாகும். இது ஒரு வகையான நவீன தீண்டாமை. இப்பொழுது எல்லோருக்கும் ஆங்கில கல்வி என்பது அரசின் தோல்வி என்றாகிவிட்டது. மெட்ரிக் பள்ளிகளை முழுக்க தமிழ் வழியாக அரசு ஆணை இடுவதை விட்டு விட்டு மூட்டை பூச்சிக்காக வீட்டை கொளுத்துகிறது மக்கள் விரோத அரசு. முற்றாக தாய் மொழியை, தமிழை அழிக்கும் முயற்சியாகும். தரம் என்பது இங்கே வேலை வாய்ப்பை மட்டுமே குறிக்கிறது. ஆங்கில மொழியால் தரம் உயர்கிறது என்பது மிக அருவருப்பான தோற்றம். இதை அரசு செய்வது சொந்த மக்களுக்கு செய்யும் துரோகம். ஒண்றும் வேண்டாம், அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்குதான் 80 சதவீதம் அரசு வேலையில் முன்னுரிமை என ஒரு சட்டம் கொண்டு வந்தால் கூட அனைத்து தனியார் கல்வி கூடங்களும் தமிழுக்கு வந்து விடும். ஆங்கிலம் ஒரு மொழியல்ல அறிவு என்கிற போதாமையை திட்டமிட்டு தனியார் பள்ளி கூடங்கள் ஏற்படுத்தி வருகின்றன. அந்த முட்டாள்தனத்தை அங்கீகரிக்கும் அரசின் முட்டாள்தனத்தை என்னவென சொல்வது.
சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், இயற்கை வளங்களின் சூரையாடல்கள் எக்பதற்கு எதிராக பல மாநிலங்களில் எதிர்ப்புகள் பெரிய அளவில் தோன்றி றுக்கிறது. இக்காலகட்டத்தில் தமிழகத்தில் அப்படி ஒன்றும் இல்லையே? காரணம் தமிழகத்தில் பெரிய அளவு கணிமவள சுரண்டல்கள் நடைபெறவில்லை என்று கருதலாமா?
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இருக்கும் கொஞ்சநஞ்ச வளத்தையும் பெரு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பது, மக்களின் உழைப்பை கண்கட்டி வித்தை காட்டி நடுவண் அரசு விற்கிறது. தமிழ் நாட்டில் இயற்கை வளங்கள், மனித வளங்கள் சூறையாடப்படுவது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இல்லை. ஒரு பாமர விவசாயி “மீதேன்“ எடுப்பது ஆபத்து என புரிந்து வைத்திருக்கிறான். ஒரு கடலோடி அணு உலை தனக்கு ஆபத்தானது என உணர்ந்திருக்கிறான். நியுட்ரினோவால் ஏதாவது ஆபத்து விளையுமா என கேள்வி எழுப்புகிறான். அந்த உணர்வை அடுத்த கட்டதிற்கு எடுத்து செல்ல வேண்டும். அய்யா உதயகுமார் மாதிரி ஒவ்வொரு மட்டத்திலும் மக்கள் தலைவர்கள் வர வேண்டும். அப்பொழுது இன்னும் வீரியம் மிகுந்த போராட்டங்களை நாம் கைக்கொள்ள முடியும். புதிய தலைமுறை மாணவர் திரட்சி அனைத்து போராட்டங்களையும் கையில் எடுக்க வேண்டும். மாணவ தலைமைகள் சரியான மக்களுக்கான அரசியலை கைக்கொண்டு போராட முன்வர வேண்டும். மேலும் தமிழ் நாடு தொடர்ச்சியான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஒருங்கிணையும் மக்களை திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மடை மாற்றி விடுகிறது. ஈழம், இந்துத்துவ பாசிசம், பரமகுடி, தர்மபுரி, கூடங்குளம், ஆற்று மணல், விவசாய நில மீட்சி, பஞ்சமி நில மீட்சி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், நதி பங்கீடு, தாய் வழி கல்வி, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டு எதிர்ப்பு, தேசிய இனங்களின் விடுதலை என நம் முன்னே விரிந்து கிடக்கும் வல்லாதிக்கத்தின் கூட்டனியை முறியடிக்க எல்லா தமிழர்களும், சாதி கடந்து, மதம் கடந்து ஓரணியில் திரள்வேண்டும். தமிழ் தேச விடுதலையை முன்னெடுக்கவேண்டும். இதுவே நமக்கு இருக்கும் ஒரே வழி.. 


 http://thisaikaddi.com/?p=20466

அடுத்த அதிரடி என்ன என விகடன் இந்த ஆண்டின் பத்து இயக்குனர்களுக்குள் ஒருவராக அடையாளம் கண்டது...  

Posted by நாண்





http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=19289

எனது படத்தின் நாயகன் வாசகர் குறித்து விகடன்...  

Posted by நாண்




http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=18806

ஆனந்த விகடன் “பச்சை என்கிற காத்து” க்கு கொடுத்த விமரசனமும் மதிப்பெண்ணும்...  

Posted by நாண்



http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=18552

எனது ஊர் பற்றி விகடனில்...  

Posted by நாண்

என் ஊர் : இயக்குநர் கீரா
விலை நிலங்களாகும் வெங்காய பூமி!
'பச்சை என்கிற காத்து’ திரைப்படத்தின் மூலம் யதார்த்த சினிமாவின் புதிய பரிமாணம் தொட்டவர் இயக்குநர் கீரா என்கிற மூர்த்தி. தன் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் இங்கே...
 ''சுத்துப்பட்டி இருபது கிராமங்களுக்கும் எங்கள் ஊர்தான் தலைமை. ஆயிரம் ஆண்டு பழைமையான சிவன் கோயில் எங்க ஊர்ல இருக்கு. அதேபோல, மலை மேல ஒரு முருகன் கோயில் இருக்கு. சிவன் கோயிலில் இருந்து மலைக் கோயிலுக் குப் போக ஒரு சுரங்கப் பாதை உண்டு. ஒரே புதரா கெடக்கும். அதுக்குள்ள எப்படியாவது போயிடணும்னு சின்ன வயசுல முயற்சி பண்ணியிருக்கேன். ஆனா, பெரியவங்க யாராச்சும் பார்த்துட்டு விரட்டி விட்டுடுவாங்க. இப்பவும் அந்தச் சுரங்கம் வழியா மலைக் கோயிலுக்குப் போகணும்கிற ஆசை மட்டும் இருக்கு.
செட்டிகுளத்தைப் பத்தி திருச்சி, பெரம்பலூர் வட்டாரத்துல கேட்டீங்கன்னா வெங்காய பூமினுதான் சொல்வாங்க. அந்த அளவுக்கு இருபது வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊர் முச்சூடும் வெங்காய விவசாயம்தான். இப்ப அது முழுசா குறைஞ்சுப்போச்சு. பல விவசாயக் குடும்பங்கள் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்தில் குடியேறிட்டாங்க. படிச்சவங்க விவசாயம் செய்றதைக் கேவலமா நினைச்சு விளை நிலத்தை வித்துடுறாங்க.செட்டிகுளத்தோட விவசாயம் அழிஞ்சுக்கிட்டே வருது.
நான் படிச்ச பள்ளிக்கூடம், என்.எஸ்.கிருஷ்ணன் நிகழ்ச்சி நடத்தி அதில் கிடைச்ச காசுல கட்டினது. அதனால எங்க ஊருக்குள்ள அந்தப் பள்ளியை 'என்.எஸ்.கே. பள்ளிக் கூடம்’னுதான் சொல்வாங்க. படிக்கிற வயசுல நான் செய்யாத சுட்டித்தனமே இல்லை. புத்தகப் பையைப் பாலத்துக்கு அடியில வெச்சிட்டு காடுகள்ல நாவப் பழம், இளந்தப் பழம் பறிக்கப் போயிருவோம். சரியா பள்ளிக்கூடம் முடியிற நேரத்துல வந்து பறிச்சதை '10 பழம் 5 பைசா’னு வித்து செலவுக்கு வெச்சுக்குவோம். காடுகள்ல சுத்தறதும், கோழிக்குண்டு விளையாடறதும், புறா புடிக்கறதும்தான் படிக்கறப்ப எங்களுக்கு இருந்த வேலை.
சிவன்கோயில்ல புறா நெறைய இருக்கும். அதனால, பகல்ல கோயில் தளத்து மேல ஏறி புறா எங்கெல்லாம் இருக்குனு வேவு பாத்திரு வோம். ராத்திரில எல்லாரும்  தூங்குன பின் னாடி நானும் என் நண்பர்கள் மூணு பேரும் புறா பிடிக்கப் போவோம். சிவன்கோயில்தளத்து மேல ஏறுறது ரொம்ப சிரமம். இருந்தாலும் கால் வைக்கச் சின்னச் சின்ன இடம் இருக்கும். அதுல ஏறிடுவோம். தவறி விழுந்தா கீழ் தளத் துல இருக்குற இளந்த முள் மேலதான் விழணும். அப்படி ஒரு நாள் புறா புடிக்கப் போறப்ப என்கூட வந்து இருந்தவன் 'கணக்கு பிள்ள வர்றாருடோய்’னு என்னைப் பயமுறுத்துறதுக்காக சும்மானாச்சுக்கும் சத்தம் போட்டுட்டான். அந்த அவசரத்துல இறங்கி இளந்த முள் இருக் கிற தளத்துல விழுந்திட்டேன். பின் பக்கம் மண்டை உடைஞ்சு, ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போய் காப்பாத்தினாங்க. இது மாதிரி கீழே விழுந்து என் உடம்புல காயம் படாத இடமே கிடையாது.
சிவன்கோயில் தளத்துல நெறைய  ஓலைச் சுவடிகள் கொட்டிக் கிடக்கும். அதைக் கிழிச்சு கிழிச்சு விளையாடுவோம். அதோட அருமை எல்லாம் இப்பதான் புரியுது. இப்பகூட சிவன் கோயில் தளத்துல தேடினா ஓலைச்சுவடிகள் கிடைக்கும்.
நான் சின்னப் பையனா இருக்கும்போது எங்க ஊருல இருக்கிற பெரிய ஏரி, சின்ன ஏரியில தண்ணி நிரம்புனதும், நீச்சல் போட்டி வெப்பாங்க. ஆனா, கடந்தப் பத்து வருஷங்களா இந்த ரெண்டு ஏரியும் நிரம்பவே இல்லை.
என் ஊர் என்னை அரவணைத்து, காத்து அன்பு கொண்ட மனிதனாக வளர்த்தெடுத்து உள்ளது. எல்லா ஊர்களையும் போல எங்க ஊரிலும் சேரி தனியாதான் இருக்கு. சாதிகள் அழிந்து, பசுமைக்கொண்ட ஊராக மீண்டும் என் ஊர் மாறும் என்றுதான் இன்றும் கனவு காண்கிறேன்!''
- மகா.தமிழ்ப்பிரபாகரன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

 http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=21340

பெருங் கனவு தேசம்-10 (முற்றும்)  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்

''மனதுக்குள் நெடுங்காலமாய் நேசித்த காதலி எத்துணை துயரினும் மறக்க இயலாதோ அவள் விலகி விலகி ஓடினாலும் எப்படித் துரத்திப் பிடிக்க, காத்திருக்க, நேசிப்பைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றுமோ அப்படித்தான் இருந்தது இந்தக் கணம். புகழ் சொல்லிய வார்த்தைகளை மூளை எடுத்து எடுத்து இதயத்திற்கு வீசினாலும் கேட்க மறுக்கிறது இதயம். சினிமாதான் என்கிற பிடிமானம் மற்றவற்றை உதறித் தள்ளுகிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்க மட்டுமே பயன்படும் இதயத்தை எப்படி மனம் என்று ஏற்கிறோமோ அப்படியேதான் இதுவும்.
இனி சினிமாதான். இதுதான் வாழ்க்கை. இதுவே இறுதி. மாற்றில்லை. ஆனால், நாகராஜனிடம்கூட அதன்பிறகு இதைப்பற்றி பேசவில்லை. அவன் இருண்டு கிடந்த முகத்தில் எனக்கான வருத்தம் கூடாதென முடிவெடுத்தேன்.
நானும் நண்பனும் இரவின் தனிமையை அதன் போக்கிற்கே விட்டுவிட்டோம். இருவருக்குள்ளும் பல போராட்டங்கள். பல வடிவங்கள். இருவருமே வாழ்தலின், அதன் சுவையை ரசிக்கும் பருவத்தில் நின்றிருந்தோம். அவனிடம் மீண்டும் மோட்டார் துறைக்குப் போவதாகச் சொல்லிவிட்டேன். ஆனால், அந்த கரும்பூதத்தின் நாக்கில் மாட்டிக்கொள்ள விருப்பமேயில்லை. நண்பனிடம் வண்டி மாற்றப்போவதாகச் சொல்லிவிட்டு எர்ணாவூரில் எங்களுரைச் சேர்ந்த ஒருவர் வேலை பார்த்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் உணவு பரிமாறும் வேலையில் அமர்ந்தேன். அந்தச் சில நாட்கள் வாழ்வின் அற்புதமான பக்கங்கள்.
நிறுவன ஊழியர்களுக்கு அங்கிருக்கும் உணவகத்தில்தான் சாப்பாடு. சாப்பாடு என்றால் வெறும் சாப்பாடு இல்லை. அது ஒரு நட்சத்திர விடுதிகளுக்கு இணையான உணவு வகைகளைக்கொண்டது. அங்கே இருந்த அனைத்து உணவு பண்டல்களையும் ருசி பார்ப்பதே எனது வேலை. கிளர்ச்சியூட்டும் சுவைகள். மிகைப்படுத்தப்படாத நவீன ஓவியங்களைப்போல இருக்கும் அந்த உணவகத்தின் சமையலறைக்குள் நுழைந்தாலேபோதும். அந்த அறையின் வாசனை நம்மை இழுத்துச்செல்லும் போக்கு 'ஃபெர்ப்யூம்’ படத்தில் நாயகன் பெண்ணுடலை முகரும் காட்சிக்கு ஒப்பானது. வேலையும் கடினமானதாக இல்லை. ஓய்வு நேரங்களில் பெரும்பாலும் என்னை வசீகரிப்பது நிறுவனத்தின் பின்னே படுத்திருக்கும் கடல்தான். பெரும் நிலப்பரப்பில் விசித்திரஉயிரிபோல அது ஓய்ந்து ஓய்ந்து பின் எழுந்து எழுந்து கரையை நோக்கி அலையை வீசியெறியும் பாங்கே தனி. இப்படியே போய்க்கொண்டிருந்த இரு மாதங்களில் பல நூறு கவிதைகள் பிரசவித்தன. அவை அனைத்தும் ஊனக் கவிதைகளாகவே மலர்ந்து பின் இறந்தும் தொலைக்கும். ஆனால், தொடர்ந்து ஓயாத புணர்தலும் ஓயாத பிரசவங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
எப்படி சுற்றுலாவாசிகளுக்குக் கடல்பார்ப்பதும், பனிமலை பார்ப்பதும், மிருகங்களைக் காண்பதும் கிளர்ச்சியோ அப்படித்தானிருந்தது எனது கடல் பார்த்தலும் கவிதை நெய்தலும்... எல்லாம் ஓர் கணம் அலுத்தது. வாழ்வாதாரத்துக்காகத் தங்களை அழித்துக்கொண்டு மண்ணின் மரபோடு வாழும் அந்நிலத்தின் மக்களுக்குப் பார்வையாளர்களைக் காணும்போது ஒரு எள்ளல் நிகழுமே அத்தகைய எள்ளல்தான் அன்று நடந்தது.
கடல் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தபோது தூரத்து மீனவ குடிசையிலிருந்து ஒரு பெரியவர் நடந்து வந்துகொண்டிருந்தார். அவர் என்னை நோக்கித்தான் வருகிறார் என்பது புரிந்ததும் அமைதியாகக் கடலை பார்த்துக்கொண்டிருந்தேன்.
காற்றைக் கிழித்தபடி, அலையோசையைத் தகர்த்தபடி வந்தது அவரது குரல். 'பரதேசிப் பயலுங்க... டேய் தம்பி ஏண்டா சாக்கடையில் மூக்க நீட்டிக்கிட்டிருக்க... சுத்தி இருக்கிற எல்லாம் சாக்கடைடா... இந்தா... ஒரு காதம் கருப்பா இருக்கே கடலு... அது கருப்புப் பிசாசு... மீனெல்லாம் முழுங்குற இந்தக் கருப்பு பிசாசு மனுசனால வந்தது...’
தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அந்தப் பேருண்மையைத் தாங்குகிற பக்குவமற்று அங்கிருந்து கிளம்பினேன். நான் நடக்க நடக்க அவரும் தொடர்ந்து கொண்டே வர, ஒரு கட்டத்திற்கு மேல் வார்த்தைகளின் வீரியத்தை எதிர்கொள்ள முடியாமல் ஓடினேன். அவரும் என்னை விரட்டியபடியே வந்துகொண்டிருந்தார்.
காட்டாறென மனம் சுழன்று சுழன்று ஓடியது. இம்மண்ணை பாழ்ப்படுத்தும் இந்தக் கடலைச் சாக்கடையாக்கிடும் செயலில் எனக்கு ஏதோ பங்கிருப்பதாகத் தோன்றியது. புலம் பெயர்ந்து சென்னையை உருவாக்கிய மனிதர்களால், அவர்களின் அசுத்தங்களால், அவர்களின் பேராசைகளால், கொடும் பாவச்செயல்களால் இந்த மண் நிரப்பட்டிருப்பதை அவதானித்தேன். ஆனால், வேறுவழியென்ன...
பெருகி வரும் கனவுகளுக்கு, ஆசைகளுக்குக் கடிவாளம் போடத்தெரியாத மனிதன் இயற்கையைச் சீண்டுகிறான். இதற்குத் துன்பத்தைக் கொடுத்துப் பெருந்துன்பத்தை ஏற்படுத்தியும் கொள்கிறான். அதன் பிறகான தினங்கள் அவ்வளவு இனிப்பானதாக இல்லை. கடலுக்குச் செல்லவே பயமாக இருந்தது. கழிவு கருப்புப் பிசாசு கடலை விழுங்கிக்கொண்டிருப்பதை நினைத்தாலே பதறியது. இனி இந்த இடம் வேண்டாம். கடல் வேண்டாம். மருந்துக் கம்பெனி வேண்டாம். முடிவெடுத்துவிட்டேன்.
ஒரு பின்னிரவில் துணிகளை அடுக்கிக்கொண்டு நேராக ராணி அண்ணா நகருக்கு ஏற்கனவே இருந்த இருவரோடு நானும் சேர்ந்துகொண்டேன். சினிமாதான் இனி... இனிமேல் எப்பவும் சினிமாதான். அதை புகழ் அண்ணனிடமும் உடனிருந்த ராமதாஸிடமும் எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
இராணி அண்ணா நகரில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு மேலே மொட்டைத் தளம். அதில் ஏற ஒரு சிறு ஏணி... இரவுப் படுக்கை அந்த ஒரு புறம் சாய்ந்த கூரையில்தான். இப்படித்தான் துவங்கி நீளும் எங்களைப்போலவே அங்கிருந்த அந்தக் குடியிருப்பு மனிதர்களுக்கும்.
நிலவை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் நான் படுத்திருந்தபோது என்னருகே அணைத்து வைத்திருந்த துண்டுபீடியைப் பற்ற வைத்தபடியே பேசினார்.
'நீ இவ்வளவு அழுத்தமா எந்தக் காரணமும் சொல்லாம இங்க இருந்தாலும் எனக்குத் தெரியும்... நீ எதுக்கு வந்திருக்கேனு. சினிமாவுக்குத்தானே. நான் புகழ்கிட்ட பேசிட்டேன். உனக்கு வேலை சீக்கிரம் கிடைக்கும்’
எனக்குப் பெருமிதமாக இருந்தது. நான் சொல்லாமலே புரிந்துகொண்டது இனித்தது. ரொம்ப சிரமமென விரட்டிவிடாமல் மௌனமாகக் கூர்ந்துபார்த்து புரிந்துகொண்டது பிடித்திருந்தது. நானும் வெளியே அங்கங்கே இரைதேடச் சென்ற இடங்களில் மிகப் பெருமையாகச் சொல்லிக்கொண்டேன்.
அஸிஸ்டென்ட் டைரக்டர் என...
மிகுந்த சிரமங்களுக்கு இடையில் உங்களுடன் சென்னையை, அதன் வலிகளை, வாழ்க்கையை, மனிதர்களை எனப் பேச நிறைய இருந்தாலும் நினைவுதப்பிப் போன நாள்களை உள்ளிழுக்கும் முயற்சியாகப் பெரும் மூச்சைச் சேகரித்து வாழ்க்கையைத் துப்புவதற்காக எனக்கு ஒரு சிறு இடைவெளி தேவைப்படுகிறது. அந்த இடைவெளியை நானே ஏற்படுத்திக்கொள்கிற ஒரு அர்த்தத்தோடு மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு பேசுவோம் சென்னையை!’’

(பலித்தது...)

 http://en.vikatan.com/article.php?aid=26589&sid=785&mid=31

பெருங் கனவு தேசம்-9  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்

'' 'என் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மணியையும் ஏன் ஒவ்வொரு நிமிஷத்தையும் நானே செதுக்கினதுடா’ - இது 'பில்லா-2’  வசனம். மிகக் கூர்மையாகத் தோன்றினாலும் எந்தவொன்றையும் எவ்வளவு திட்டமிட்டாலும்  நிச்சயமாகச் செதுக்கவோ, வகுக்கவோ, பெருக்கவோ முடியாது என்பதற்கு நான் துவங்கிய பயணங்கள் கட்டியம் கூறுகின்றன. எதற்கு வந்தோம், எதைநோக்கி நகர்கிறோம் என்றே தீர்மானிக்க முடியாத, அல்லது அதன் வல்லமைகளை அடையாத ஒரு பாமரனின் சவால் நிறைந்த வாழ்க்கையாகவே பெருங்கனவு தேசம் வழிநடத்தியது. சவால்களை எதிர்கொள்ள மறுப்பவனை நோக்கி வீசப்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது?
துறைமுகத்தில் எங்களைப்போலவே எண்ணற்ற திருட்டுகள் நிறைந்து இருந்தன. சிறு தேவைகளைப் பூர்த்தி செய்வதுபோல பெரும் திருட்டுகள் எளிதாக நடக்கும் தளமாக இருக்கிறது துறைமுகம்.
12,000 ரூபாய் திருடிய மகிழ்ச்சியில் ராயபுரம் கணேசன் அண்ணனைச் சந்திக்கச் சென்றேன். என்னைப்போன்ற ஒருவன் வெளியேறினாலும் நூற்றுக்கணக்கான காக்கைகள் சோற்றுப்பருக்கைக்காக அந்த அலுவலக வாசலில் எப்போதும் காத்திருப்பதை உணரமுடிந்தது. வறியவர்களும், வேலை இல்லாதவர்களையும் பற்றிய பட்டியலைத் தயாரிக்க அரசு இதுபோன்ற வாசல்களின் முன்பு கடை போட்டாலே புரிந்துவிடும். ஏனெனில், இந்த நாட்டில் வறியவனின் குடும்ப அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் உண்மையான மாத, வருட வருவாயைவிட பணக்காரர்கள் கொடுக்கும் வருவாய் பட்டியல்தான் வியக்கவைக்கும். வறியவனுக்குக் கிடைக்காத, சென்றுசேராத, பல இலவசங்களைச் சொந்தவீடு வைத்து, வாடகைவிட்டு, கொழுத்துத் திரியும் பணக்காரர்களுக்கு வியர்வை இல்லாமல் சென்றுசேர்கிறது.
தயங்கித் தயங்கிக் கொடுத்த 12,000 ரூபாயினை இரண்டுமுறை எண்ணினார். மூன்று முறை நிமிர்ந்து பார்த்தார். பின் 2,000-ஐ என் கையில் திரும்பக்கொடுத்து உடன் எனது ஓட்டுனர் உரிமத்தையும் திருப்பிக்கொடுத்தார். தொடர்ந்து இரும்பு திருடி, அதற்குப் பழக்கப்பட்ட அடிமையாகிவிடுவோமோ என்று பயந்துகொண்டிருந்த எனக்கு கணேசனின் செயல் வியப்பூட்டியது.
''திரும்ப வேலையில சேந்துக்கிறியா'' இதுவும் என்னை உச்சக்கட்ட வியப்பில் ஆழ்த்தியது. மிகுந்த நன்றிகளைச் செலுத்திவிட்டு வெற்றி வீரனாய் அண்ணா நகர் கூட்டை நோக்கி வந்தடைந்தேன்.
நாகராஜனும் நானும் வலிக்க வலிக்க சமைத்து உண்டோம். திகட்ட திகட்டப் பேசினோம். சலிக்க சலிக்கத் தூங்கினோம். எல்லாம் முடிந்து நாகராஜனிடம் அணையை உடைத்தேன். இனி வேலைக்குச் செல்வதில்லை. சினிமாவைத்தவிர, இனி மாற்றி யோசிக்கப்போவதில்லை என்ற என் முடிவை...  நாகராஜன் 'புகழேந்தியிடம் விட்டுவிடலாம்’ என்றான். எங்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு சினிமாக்காரர் புகழேந்திதான்.
புகழேந்தி...  சினிமாமீது தீராதபசி தொடங்கியது, வளர்ந்தது என இவரால் எனக்குள் நிகழ்ந்தது ஏராளம். என் அண்ணனின் பள்ளித்தோழரான இவர், ஊருக்கு வரும்போதெல்லாம்  அவர்  வேலை செய்யும் படங்களின் தலைப்புகளைக் கேட்பதிலும், அதைப் பிற நண்பர்களுக்கு எடுத்துச் சொல்வதிலும்,  தினத்தந்தியில் அந்தப் படம் பற்றிய செய்தி வருகிறதா என அனைத்து சினிமா துணுக்குகள்வரை படிப்பதிலும் கழிந்து அதுவே என்னை இந்தப் பெருநகரத்துக்குப் பின்நாட்களில் இழுக்கும் நியூட்டன் விதியாகிப்போனது.
ஒரு அடர்ந்த வெயில் நாளில் அவரைத் தேடியலைந்து  முகவரியற்ற ஒரு முகவரியைக் கண்டடைந்தோம். கலைஞர் நகரின் வால்நுனிபோல வடபழனியை நோக்கி நீட்டிப் படுத்திருந்தது இராணி அண்ணா நகர். முன்பெல்லாம் நகர், அபார்ட்மென்ட்ஸ் என்கிற வார்த்தைகள் ஏதோ தேவலோகத்தில் புகைக்கு நடுவே மிதந்துசென்று தேவகன்னிகளைச் சந்திப்பதுபோல என எண்ணிக்கொண்டிருந்த எனக்கு இராணி அண்ணா நகர் பேரிடியை இறக்கியது.
சில ஏக்கர் பரப்பளவில் கொத்துக் கொத்தாய் வானத்துக்குக் கீழே தொங்கிக் கொண்டிருந்தன அடுக்கக குடியிருப்புகளாய். இத்தணூண்டு பரப்பளவில் கிட்டத்தட்ட பல ஆயிரம் மக்கள்.  படிகளெங்கும் நெகிழிக் குடங்களில் மஞ்சள் நீர் நிறைந்திருந்தது. ஒரு மணி நேரம்கூட நிற்கமுடியாத குப்பைகள் சூழ்ந்த, குழந்தைகள் தவழ்ந்த, மட்டைப் பந்தாடிய பல்வேறு தரப்பு இளைஞர்கள், அதை புறாக்கூட்டிலிருந்து எட்டிப்பார்க்கும் அழகுப் பெண்கள் என எல்லாவற்றையும் கடந்து புகழேந்தியின் அறைக்குள் பிரவேசித்தோம். நாங்கள் வந்ததை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. ஊரில் சினிமாக்காரன் என்ற பட்டத்தோடு கிறுக்குத்தனமான தொளதொள உடையில் நெடிது வளர்ந்த தாடியோடு அன்னியத் தன்மையோடு மிரட்சிசேர்த்து வைத்திருந்தவர் புகழேந்தி. இந்த ஒடுங்கிய அறையொன்றில் நிரம்பிய புத்தகக் குவியல்களும் ஒளி, ஒலி நாடாக்கள்கொண்ட பெட்டிகளும் மேலும் சத்யஜித்ரேவின் கேமரா கோணம் பார்க்கும் புகைப்படமொன்றும் 'மிர்ச்சி மசாலா’ படத்தின் மிளகாய் வத்தல்களைப் பார்த்தபடி நிற்கும் சபானா ஆஸ்மியின் புகைப்படமொன்றும் நிறைந்திருந்த அறையில் ஜீன்ஸ் பேண்டை முக்காலாக வெட்டி அதை மூன்றுக்கு நாலாய் உடுத்தி இருந்த புகழேந்தி... செத்துவிட சமயம் பார்த்துக்கொண்டிருந்த  தொலைக்காட்சியில் ஓடிய பாலுமகேந்திரனின் 'யாத்ரா’வை இடைநிறுத்தி எங்களை வரவேற்றார்.
ஊரின் வளங்கள் பற்றியும் உறவுகளின் நலம் விசாரிப்புகளையும் முறைப்படி கேட்டறிந்தவரின் முகத்தில் இன்னமும் இயலாமை நிறைந்த புன்னகை பூத்தபடியே இருந்தது. நான் பிரமிப்பின் உச்சியில் நின்றேன். பேச்சின் இடை இடையே அலமாரிகளில் அடுக்கப்பட்டிருந்த ஆல்பர்ட் காம்யூ, டால்ஸ்டாய், தாய், கோபல்ல கிராமம், குறத்தி முடுக்கு எனப் புத்தகப் பெயர்கள், எழுத்தாளர்களின் பெயர்கள் என மனம் ஓடி ஓடி விசாரிப்புகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தது. அவர் அதிகம் பேசவேமாட்டார். பின்னாளில் நன்கு வாயாடும் நான், அவரின் அறைத் தம்பியாக நீடித்து நீடித்து வாசித்து வாசித்துப் பேசுவதைச் சுருக்கிக் கொண்டிருக்கிறேன். சிரிப்பை மறந்திருக்கிறேன். நாகராஜன் மெல்ல பேச்சைத் துவங்கினான்.
''அண்ணே... நானும் சினிமாவுல அசிஸ்டென்ட் டைரக்டரா''
நாகராஜன் பேச்சை முடிக்கும்முன்பே அவரின் கூரிய பார்வை கொடுத்த குரோதம் அவனைத் திக்குமுக்காடவைத்தது. நாகராஜனும் நானும் முன்பே பேசி வைத்திருந்தோம். எனக்குப் பதிலாக அவன் உதவி இயக்குநராக முயற்சி செய்ய வந்திருப்பதாகச் சொல்வதின் மூலம் புகழேந்தி அண்ணனின் பதிலை அறிந்து அதன்பின் முடிவெடுப்பது.
புகழ் அண்ணன் தனது தொளதொள சட்டையை எடுத்து மாட்டினார். பக்கத்து வீட்டிலிருந்து 'தண்ணீர் விடுறாங்க’ எனக்கேட்ட குரலுக்கு வாகாய் சமையற்கட்டிலிருந்து இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டார். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவருடன்  நடந்தோம். ஓரிடத்தில் குழுமமாய் நின்ற பெண்களுடன் நாங்களும் குடங்களுடன் நின்றோம். ஆண் என்றதும் பெண்கள் உடனே நீர் பிடித்துக்கொடுத்தார்கள். ஒரு குடத்துக்கு 50 பைசாவீதம் ஒரு ரூபாய் கொடுத்து தண்ணீரை அவர் ஒரு குடம் சுமக்க, நான் ஒரு குடம் சுமக்க மாடியேறிவந்து அறைக்குள் தண்ணீர் குடம் வைப்பதற்குள் பெருமூச்சு வாங்கியது. இப்படித்தான் ஒரு கனவுலகவாசியின் நாட்குறிப்புகள் இருக்கின்றன எனப் புரிந்துகொண்டோம். மீண்டும் நாகராஜன் கேட்க முயன்றான்.
''அண்ணே.... அஸிஸ்டென்ட்...''
''டீ சாப்பிடலாம் வாங்க...''
புகழ், சட்டென அறையைப் பூட்டி சாவியை வீட்டின் வெளிப்புறம் இருந்த ஆணியில் தொங்கவிட்டுவிட்டு வேகமாக நடந்தார். அவரின் நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடினோம். நடிகர் பார்த்திபனின் கோயில் நோக்குக் குடியிருப்புக்கு எதிரே இருந்த காமராஜர் சாலை தேனீர்க்கடையில் தேனீர் சொன்னார். வந்தது. அமைதியாகப் பருகினோம். புகழ் அண்ணன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து ஆழமாக உள்ளிருந்து புகையை வெளியே கக்கினார். இல்லை... என் கனவை நசுக்கினார்.
'தம்பி... ஊர்ல இருந்து கிளம்பும்போது நான் வெச்சிருந்த கனவு... இந்தத் தெருவுல, நகரத்துல, இங்க இருக்கிற சாக்கடையில குழம்பித்தவிக்குது. என்னோட 10 வருட சினிமா வாழ்க்கையில இதுவரைக்கும் ஒரு படம்கூட முழுசா வேலை பார்க்கல. ஒருவேளை நாம மதுரைக்காரனா பொறந்திருந்தா நமக்கு சினிமாவுல கொஞ்சம் வாய்ப்பு கிடைக்கும். நம்ம பகுதி ஆட்களுக்கு இது சாத்தியமில்ல. நான் ஊருக்கு வர்றதுன்னாகூட ஏதாவது ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு அடிச்ச காச வெச்சித்தான்வருவேன். இனிமே ஊருக்கு என்னால போய்ப் பொழப்ப பார்க்கமுடியாது. இது வேற உலகம். வேற மனிதர்கள். தினம் தினம் பசிக்குப் போராடவே சரியாயிடுது. அதனால உனக்கெல்லாம் இப்போ சினிமா வேணாம். ஒருவேளை நான் ஜெயிச்சா உன்ன கூப்பிட்டுக்குறேன். அதுவரைக்கும் சினிமா ஆசை வேணாம். நிறைய வலிக்கும். தாங்க முடியாது.’
புகழ் அண்ணன் விலாவரியாகச் சொல்லிக் கூட்டிவந்த இடம் ஒரு பேருந்து நிறுத்தம். 'இந்த பஸ்ஸில் ஏறிப்போனா வடபழனி முருகன் கோயில் ஸ்டாப்வரும். அங்கே இருந்து அண்ணா நகருக்கு பஸ் இருக்கு. போய் இருக்கிற வேலையை ஒழுங்காபாத்து நாலு காசு சம்பாரிங்க. இனிமே உங்களை கோடம்பாக்கம் பக்கம் நான் பார்க்கக்கூடாது.’
வந்த பல்லவனில் ஏற்றிவிட்டார். திகைப்பும் ஆற்றாமையும் ஒருங்கேசேர பேருந்தில் ஏறினோம். அவர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் அதே வேக நடையில் இராணி அண்ணா நகரை நோக்கிப்போனார். பேருந்தின் பின் கண்ணாடி வழியே அவர் நடப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். மனம் வலித்தது."
(கனவுகள் நிஜமாகும்...)

 http://en.vikatan.com/article.php?aid=26256&sid=772&mid=31

பெருங் கனவு தேசம்- 8  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்

''துறைமுகம்... சொந்த உணவுத் தேவைக்காக மீன் பிடிக்கவும், வலை காய வைக்கவும், கருவாடு தயாரிக்கவும் உண்டான தளம், நிலவுடமைச் சமூகங்களுக்குப் பிறகு நாடுபிடிக்க, கொள்ளையடிக்க, வியாபாரம் பெருக்கவென தன்னுடைய சொந்த முகத்தை இழந்தது. அப்படியான எல்லாவகையான பின்புலங்களும் சென்னைத் துறைமுகத்துக்கும் உண்டு.
இருக்கும் வளங்களைச் சுரண்டிச்செல்ல பிரமாண்ட கப்பல்கள் நின்றிருந்தன. வளர்ந்த நாடுகளின் குப்பைகளை, நச்சுப் பொருட்களைக் கொட்டிச்செல்ல சில கப்பல்கள் நின்றிருந்தன.
எமது ஓட்டுநர் 'க்ராவல்’ மூலம் பணத்தை அடையலாம் என்றதும் எனக்குப் புரியவில்லை என்றாலும் ஒரு முனை தீப்பற்றி எரிந்ததின் கொதிப்பை அது அடக்கியது.
நமது மீனவக் குடிகளின் வழிகாட்டியாக நின்று, இன்று வெறும் நினைவுச் சின்னம் போலாகிவிட்ட கலங்கரை விளக்கத்தை அண்ணாந்து பார்த்தபடியே தீவுத்திடலைக் கடந்து லாரிகள் மட்டுமே நுழையக்கூடிய சுங்கவாயிலை அடைந்தோம். வண்டி எண்ணைப் பதிவுசெய்துவிட்டு உள்ளே பயணித்தபோது 'சளப் சளப்’ என்கிற பேரிரைச்சல் காதுகளை அடைத்தது. ஆவேசமாக பாய்ந்து வரவேண்டிய அலைகள் அதன் கரையற்ற கரையான துறைமுகத் தடுப்பில் அடிக்க வழியில்லாமல் சளம்பிக் கொண்டிருந்தது புரிந்தது.
எங்கும் புழுதி படிந்த லாரி கிளினர்களும், ஓட்டுநர்களும் பறந்து செல்லும் லாரிகளும் என நாங்கள் எல்லாவற்றையும் கடந்தோம். நமது தேசத்தின் மலைகளைக் குடைந்தும், வெட்டியும், வெடி வைத்துத் தகர்த்தும் பண முதலைகளின் ஆவேசப்பசி போக்கச் சதுரமாகவும், செவ்வகமாகவும் கற்கள் பளபளவென அயல் தேசம்போக மலை மலையாய் துறைமுகத்தில் குவிக்கப்பட்டிருந்தன. பொன்னிற மண்கள் மலையளவு பைகளில் அடைத்து வைக்கப்பட்டு, தான் புரண்டு கிடந்த மண்ணைவிட்டு தூரதேசம்போக முகாமிட்டிருந்தன. ஒரு பக்கம் கிரானைட் கற்கள் குவிக்கப்பட்டிருந்தன. பெயர் தெரியாத அல்லது மறக்கடிக்கப்பட்ட நமது வளங்கள் கண்டெய்னர்களில் அடைந்துகிடந்தன. தான் காலம் காலமாய் பொதிந்துகிடந்த இடத்தைவிட்டுப் போய்விட... மொத்தத்தில் எங்கு திரும்பினாலும் இப்படித்தான் ஏதேனும் ஒன்று இரைந்து கிடந்து, அந்தப் பிரதேசத்தைப் பிணக்குவியலாக மாற்றி விட்டிருந்தது. தான் பிறந்த இடத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படும் மனிதர்கள் மட்டும் பிணமல்ல. இந்த வளங்களும்தான். நாடு கடத்திப்போக பிரமாண்டமான இரும்பு உலைகளைப்போல கப்பல்கள் நீண்டுகிடந்தன. பத்தாயிரம் யானை பலம் பொருந்திய இயந்திரத் தூக்கிகள் கப்பலின் குளத்தில் மீன் பிடித்துத் துறைமுகத்தில் வீசிக்கொண்டிருந்தனர்.
'இப்ப என்ன பண்ண போறோம்’
எனது கேள்வி ஓட்டுநருக்குப் புரிந்தது. துறைமுகத்தில் இருந்து கப்பல்களில் இருக்கும் இரும்புக் கழிவுகளை நமது தொழிற்சாலைகளுக்கு எடுத்துப்போகிறோம் என்றான்.
'நமக்கெப்படி பணம் வரும்’
'இரும்பு திருடுவதுதான்’
எனக்கு முழுக்க புரிந்துவிட்டது. சரியென்ற முடிவுக்கு நானும் வந்துவிட்டேன். பொதுவாக ஓட்டுநர்கள் 50 கிலோ அல்லது 100 கிலோ வரை திருடுவார்கள் என்பதை அறிந்துகொண்டேன். ஏனெனில், நிறுவனங்களை எடைபோடும்போது 10 டன்னில் 100 கிலோ குறைவதை வழிச் சிதறலாகவோ, இல்லை சின்னச் சின்னக் காரணங்களையோ கருத்தில்கொண்டு அதைக் கவனத்தில் கொள்வதில்லை. நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
'50 கிலோதான் எடுக்கணுமா... 500 கிலோ எடுத்தா?’ என் கேள்வி ஓட்டுநரைப் புரட்டிப் போட்டுவிட்டது.
'ஐயோ... ஓனர் கொன்னேபுடுவான்’
'ஓனருக்கும் தெரியாம தொழிற்சாலைக்கும் தெரியாம ஒரு நடைக்கு 500 கிலோ எடுத்தா எனக்கு எவ்வளவு தருவீங்க’
ஓட்டுநர் பயங்கரமாக யோசித்து முடிவாக, 500 கிலோ எடுத்தா 50 கிலோ காசு எனக்குத் தருவதாக ஒப்புக்கொண்டார். மண்டை வெடித்துக் கிடந்தது. 50 கிலோவுக்கு குறைந்தது 250 ரூபாய் கிடைக்கும். ஒரு நாளைக்கு கும்மிடிப்பூண்டிக்கு இரண்டு நடை அடிக்க முடியும். ஒரு நாளில் 500 ரூபாய், எப்படியும் ஒரு மாதத்தில் கடனை அடைத்து ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுவிடலாம். எப்படிச் செய்வது? எனது நண்பர்கள் சிலர், தார்வண்டியில் தகிடுதத்தம் செய்து இரண்டு மூன்று பாரல் தார்களை வெளியில் விற்கும் சூட்சுமத்தை அவ்வப்போது பேசக் கேட்டிருக்கிறேன். அதையே பிரயோகிக்க எண்ணினேன்.
முதலில் வண்டியைத் துறைமுகத்தில் குவிந்துகிடக்கும் செவ்வகக் கற்குவியல் முன்பு நிறுத்தச்சொன்னேன். ஓட்டுநர் நிறுத்திவிட்டு தேனீர் குடிக்கப் போய்விட்டார். நான் அங்கிருக்கும் எடை அதிகமான செவ்வகக் கற்களை யாருக்கும் தெரியாமல் வண்டியின் அடிப்பகுதியில் 'சேஸ்’ எனப்படும் பகுதியில் வைத்துக்கட்டினேன். வண்டிக்குள் இருந்த தண்ணீர் கேனில் தண்ணீரை நிரப்பினேன். அதற்குள் ஓட்டுநர் வர, வண்டியை எடுத்துச்சென்று எடைமேடையில் நிறுத்தி சுமையில்லா வண்டிக்கான எடைசீட்டை பெற்றுக்கொண்டோம். பின் வண்டியை எடுத்துக் கற்களை ஓரமாகப் போட்டுவிட்டு, தண்ணீரையும் கீழே கொட்டிவிட்டு இரும்பு ஏற்றச் சென்றோம்.
கப்பலுக்குள் கொட்டி வைக்கப்பட்டிருந்த, அயல் நாடுகளில் பயன்படுத்தித் தூக்கிப் போட்ட இரும்புக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் எனக் குவிந்து கிடந்ததை இயந்திரத்தூக்கி அள்ளிவந்து வண்டியில் போட்டது. வண்டியின் கேபின் பகுதியில் இருந்த நான், இயந்திரத்தூக்கி எடுத்துவந்து கொட்டக் கொட்ட அதில் கிடைக்கும் பெரியக் கணிசமான எடையுள்ள இரும்புகளைத் தூக்கி கேபின் பகுதியோரம் போட்டுவிட்டு மற்றவற்றைச் சமமாகப் போட்டு நிரவிவிட்டேன். மீண்டும் எடை மேடையில் எடைபோட்டு அதற்கான சீட்டை வாங்கிக்கொண்டோம். எங்கள் நிறுவனத்தின்  அனைத்து வண்டிகளும் எடையேற்றி வெளியில் வந்து ஓரிடத்தில் நின்றன.
ஒவ்வொரு பத்து வண்டிக்கும் முன் வண்டியிலும், கடைசிவண்டியிலும் பறக்கும் படை எனப்படும் முதலாளியின் ஆள் இருப்பான். ஒரு வண்டி நின்றால் எல்லா வண்டியும் நிற்க வேண்டும். இடையில் ஒரு முறை தேனீருக்கு நிறுத்த அனுமதி உண்டு. இரும்புத் திருட்டை தடுக்க இப்படியரு ஏற்பாடு காலங்காலமாகவே இருந்துகொண்டிருக்கிறது. அப்படியானால், காலங்காலமாகவே முதலாளிகள் சம்பளம் கொடுப்பதில் ஏமாற்றுகிறார்கள். தொழிலாளிகள் தங்கள் வயிற்றை நிரப்பத் திருடுகிறார்கள். புரிந்துவிட்டது.
எல்லா வண்டிகளும் நகரத்தைக் கடந்து ஓரிடத்தில் நின்றன. தேனீர் அருந்தினோம். அனைத்து வண்டிகளும் அந்த இரவில் கும்மிடிப்பூண்டியை நோக்கி பயணிக்கத் தொடங்கின. இடையில் வரும் வண்டிகளுக்கு ஏற்ப, பயணம் ஏற்ற இறக்கத்தோடு நடந்தது. அந்தச் சூழலில் சட்டென வண்டி போய்க்கொண்டிருக்கும்போதே கிளினர் இருக்கையில் இருந்து கேபினுக்கு வெளியே நீண்டிருக்கும் படிக்கட்டைப் பிடித்து அதன் வழியே வண்டியின் பின் தளத்துக்கு வந்தேன். கும்மிடிப்பூண்டி சாலையெங்கும் அந்த இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான பழைய இரும்புக்கடைகள் விழித்திருக்கும். பழைய இரும்புக் கடைகள் ஊரைத் தாண்டி யாருமற்ற இடங்களில் வீற்றிருப்பதன் ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அவை திருட்டுக்குத் துணைபோவது. திருட்டை ஊக்குவிப்பது. தானும் கொஞ்சம் பிழைத்துத் தொழிலாளிகளையும் கொஞ்சம் பிழைக்கவைப்பது. இரும்பு திருடிய எந்தத் தொழிலாளியும் முதலாளிகளாக ஆனதே இல்லை. இரும்பு வாங்கிய பழைய இரும்புக் கடைக்காரனும் பெரும் தனவந்தராய் மாறியதே இல்லை. முதலாளிகள் எவரும் கடைநிலை ஊழியராய் மாறியதே இல்லை. இது உண்மை. மூன்றாவதாக சென்ற வண்டி, சட்டென வேகம்பிடித்து இரண்டாவது வண்டியின் அருகே போய் சட்டென எதிர்வரும் இரும்புக் கடையோரம் மறைந்து நின்றது. கண்ணிமைக்கும் நொடிதான். ஒதுக்கி வைத்திருந்த கணிசமான எடையுள்ள இரும்புகளை வேகவேகமாகத் தூக்கி இரும்புக் கடை முன் எறிந்தேன். இரும்புக் கடைக்காரன் அதே நேரத்தில் வண்டியின் எண்ணை குறித்துக்கொண்டான். சட்டென வண்டியெடுத்து மூன்றாவது வண்டியாகவே பயணமானோம்.
பொதுவாகச் சுமை இருக்கும்போது இருக்கும் கட்டுப்பாடுகள் சுமை இறக்கப்பட்டதும் வண்டிகளுக்கு இருப்பதில்லை. பறக்கும் படைகள் போல் இருக்கும். இரவில் இரும்புத் தூக்கிப்போட்ட கடையில் காலையில் காசு வாங்கிக் கொள்வோம். அவர்களும் நாணயம் தவறுவதில்லை. எடைபோட்டு காசு எண்ணி வைத்திருப்பார். இது தொன்றுதொட்டு நடப்பது.
வண்டி கும்மிடிப்பூண்டியின், வீடுகள் கட்டும் கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் போய் நின்றது. வண்டி துறைமுகத்தில் கிளம்பும்முன் மீண்டும் செவ்வகக் கற்களை எடுத்துவைத்து இருந்தேன். வண்டி தொழிற்சாலை எடை மேடையில் நுழையும் முன்பே அந்தக் கற்களை ஓட்டுநர் இருக்கையின் பின்புறம் பொருள் வைக்கப் பயன்படும் பெட்டிகளில் அடைத்துவைத்தேன். தொழிற்சாலையின் வெளியே இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துவைத்தோம். ஒவ்வொன்றுக்கும்முன் சில மணி நேரங்கள் இருக்கும்; பல வண்டிகள் சுமை இறக்க தேவைப்படும் நேரம் அது.
தொழிற்சாலையின் எடைமேடையில் எடைபோட்டு சீட்டு வாங்கிக்கொண்டோம். பின் செவ்வகக் கல்லை கீழே இறக்கிப்போகும் பணி. தொழிற்சாலைக்குள் அதை இறக்கிவைப்பது, மலைக்கள்ளனின் சாகசத்துக்கு ஒப்பானது. யாருக்கும் தெரியாமல் இறக்கிவைத்து தண்ணீரைக் கீழே ஊற்றி, சுமை இறக்கும் இடத்தில் நிறுத்தினோம்.
தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் நெருப்பில் வெந்துகொண்டிருந்தார்கள். இரும்புக் கழிவுகள் ஒரு கொதிகலனில் கொட்டப்பட்டு அவை வெந்து, உருகி நெருப்பு நீராக, கீழே விழுந்து ஒரு வடிவ கடத்தியில் மெலிதாக ஓடி வர வர, இறுகிய நெருப்பாகவரும் கம்பியைப் பிடித்து லாவகமாக இழுத்துத் தொழிலாளிகள் தண்ணீரில் தூக்கிப்போடுவார்கள். இதுபோல பல ஆயிரம் கம்பிகள். சில நூறு தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். தண்ணீரில் விழுந்த கம்பிகளை இழுத்து மடக்கி வேறொரு இடத்தில் போடுவது சிலரின் பணி.
எங்கள் வண்டியில் இருந்த இரும்புக் கழிவுகளை இயந்திரத் தூக்கியில் இருந்த காந்தம் கவ்வி உருக்கு ஆலையில் கொட்டியது. எல்லாம் முடிந்து வெளியே வந்தோம்.
நிம்மதியாக ஒரு உணவகத்தில் வயிறு புடைக்க உண்டோம். ஓட்டுநருக்கு நிரம்ப மகிழ்ச்சி. வந்த வண்டிகளிலேயே எங்களின் வண்டி எடைதான் ஏற்றி வந்த சுமையின் எடையைவிட 10 கிலோ கூடுதலாகக் காட்டியது.
அதே சமயம் நாங்கள் திருடியது 750 கிலோ இரும்பு."
(கனவுகள் நிஜமாகும்...)


 http://en.vikatan.com/article.php?aid=25925&sid=757&mid=31

பெருங் கனவு தேசம்-7  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்

சென்னை... கற்பனாவாத தேசியக் கட்டமைப்பான இந்தியா என்கிற சொல்லின் ஒரு குறியீடு. சமூகம் என்பது மனிதர்களின் கூட்டமைப்பு. இடம், உணவு, நாகரிகம் எந்த நிலப்பரப்பில் பொருந்தி வருகிறதோ அல்லது மனிதன் பொருந்திப் போகிறானோ அந்த நிலம் அவனது தாய் நிலமாகிறது. அதன் கூறுகளில் நிகழும் மொழி, கலை, பண்பாட்டு இன்னபிற அம்சங்களால் நிகழும் தனித்துவத்தால் அந்த மனிதர்கள் வரலாற்றின் உயர்ந்த குடிகளாக, தொல் சமூகங்களாகப் பரிமாணம் அடைகிறார்கள்.
அந்த வகையில் மிகப்பெரும் நெடிய வரலாற்று நிலப்பரப்பான சென்னை பூர்வ குடிகளின், மீனவ குடிகளின் ஒரு சிறிய கிராமமாக இருந்தது. படையெடுப்புகளை வணிகம் என்று நம்பி வாழ்வளித்த அந்த அப்பாவி பூர்வ குடிகளின் கிராமம் அவர்களையே அழித்து, அவர்களின் ரத்தத் துளிகளால், எலும்புக் கால்களால், ஒடுங்கிய கண்களின் ஒளிகளால் இன்று பெருநகரமாக, பயமுறுத்தும் கான்கிரிட் காடாக எழுந்து நிற்கிறது. எந்த ஒரு சமூகமும் தனது இனம், மொழி, கலை, பண்பாட்டுக் கூறுகளை செம்மைப்படுத்தி பொது உடைமைச் சமூகமாக திகழ மறுக்கிறதோ அல்லது அதன் கூறுகள் அழித்தொழிக்கப்படும்போது கிளர்ந்து எழ மறுக்கிறதோ அப்போது அது அடிமைச் சமூகமாகிறது. அப்படித்தான் நானும் நான் பார்க்கிற சென்னையும்.
ஒரு 15,000 ரூபாயைத் திரட்டுவதற்காக பாரிமுனையில் இருந்த தம்புச் செட்டித் தெருவில் பல பேருடன் நானும் ஒருவனாக நின்றிருந்தேன். அந்தக் குறுகலான தெருவெங்கும் விளிம்பு நிலை மனிதர்கள். அகன்ற பெருவிழிகளால் உருட்டி மிரட்டியபடி அந்தத் தெருவில் சிறுமிகள் அம்மணமாக நின்றிருந்தார்கள். தாங்கள் நெய்த மண்ணில் கிழிந்த உடைகளுடன், சாக்கடை ஓரத்தில் சொந்த நிலத்தின் அகதிகளாக, வாழ இடமற்ற பரதேசிகளாக பெரும் இரும்புக் கேட்டுகளுக்குக் கீழே அந்தக் காலையில் படுத்துக்கிடந்தார்கள். புணர்தலிலும் நாகரிகம் பயின்ற இனத்தின் எச்சங்கள் தெருவோரங்களில் உடைந்து கிடந்தார்கள். இந்த சென்னை போன்ற பெருநகரப்பரப்புக்குத் தேவையற்றவர்களாக, வாழத் தகுதியற்றவர்களாக, கொசுக்களின் கூட்டில் இடம்கேட்டு ஒண்டிக்கொண்டிருந்தார்கள்.
கிட்டத்தட்ட எனக்கும் அந்தக் கணம் அந்த நிலைதான். உதிர்க்க வார்த்தைகள் இன்றி நின்றுகொண்டிருந்தேன். பணம் திரட்ட, வென்ற இடத்திலிருந்து தோற்ற இடத்துக்கு ஓடும் சிறு பயணம் இது. மீண்டும் கிளினர். பல மாடிக் கட்டடங்களின் ஒரு மாடியில் வெல்வெட் செதுக்கிய அறையன்றில் முதலாளி குளிரூட்டியின் துணையோடு 'ஜில்’லென இருந்தார். அவரின் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் மட்டும் காம இலக்கணம். தமிழைச் சூறையாடிக்கொண்டு இருந்தார். எதிரில் நின்ற ஓட்டுநர்கள் நடுங்கிக்கொண்டிருந்தனர். காரணம் புரியவில்லை. எனக்கு அப்போது அது அவசியப்படவும் இல்லை.
நான் கிளினராகப் பயணிக்க எங்களைச் சுமந்த டிப்பர் வண்டி, பம்மல் என்ற ஊரைக் கடந்து ஓடியது. இதுவரை நான் அனுபவித்தது கறுப்பு மண் வாசனையை என்றால் இந்த வாசனை செம்மண். இங்கே மனிதர்கள் செந்நிறத்தில் இருந்தார்கள். வளத்தை அள்ளிக்கொட்டிய இந்தத் தேசத்தின் வண்ண மண்களின் நிறத்தில் சுயத்தை இழந்திருந்தேன். மண் இவ்வளவு சிகப்பாகவா இருக்கும். பிணக் குவியலின் வழியே நெடித்து ஓடும் இரத்தம்போல திட்டுத்திட்டாக நின்ற மண் எங்கள் வண்டியில் ஏறியது.
சென்னை விமான நிலையத்தில் பால் வெள்ளை பறவைகளாக அங்கங்கே விமானங்கள் நின்றிருந்தன. எங்கோ கருவிழிக்கு வெளியே மேகத்தைக் கிழித்தபடிச் செல்லும் சிட்டுக் குருவிகளாக விமானத்தைக் கண்டு, கை கொட்டிச் சிரித்து விளையாண்ட எனக்கு இந்த விமானங்களை அருகே பார்க்கப் பிடிக்கவே இல்லை. எத்தனை வளவளப்பாக விமானங்கள் இருந்தபோதும், கண் சிமிட்டி அவை என்னை அழைத்த போதும், தனது முரட்டு இறக்கைகளை வீசி மிரட்டிக் கூப்பிட்ட பிறகும்கூட அது எனக்குப் பிடிக்கவே இல்லை. மிக மிகப் பாதுகாப்பான பகுதி என எல்லோரும் சொல்லிக்கொண்ட விமான நிலையத்தின் ஓடுபாதைகளுக்குள் வரைபடங்களில்கூட பெயரில்லாத ஓர் ஊரைச் சேர்ந்தவன் மிக எளிமையாக நுழைய முடிந்ததும் ஆச்சர்யம்தான். அங்கே எனக்கு ஒரு கேள்வி தோன்றியது. பயங்கரவாதிகள் விமானங்களைக் கடத்த என்ன எழவுக்காகப் பலநாள் திட்டம் தீட்டுவதாகப் பேசிக்கொள்கிறார்களோ தெரியவில்லை. இவ்வளவு எளிதாக நானே உள்ளே நுழையும்போது விமானம் அருகில் நின்று அதை உதாசீனப்படுத்திவிட்டு மண்ணை கொட்டிக்கொண்டு இருக்கும்போது அவர்களால் முடியாதா? எல்லாம் அரசியல்.
மண்ணைக் கொட்டி முடித்து வண்டியில் ஏறி வெளியேறிக்கொண்டிருந்தபோது ஒரு விமானம் அந்தரத்தில் விமான நிலையத்தின் சைகைக்காக நின்றிருந்தது. கைத்தட்ட வேண்டும் போலிருந்தது. சட்டென அது வட்டமடித்து ஒரு பருந்து தரையில் கிடக்கும் இரையை கவ்வுவதுபோல வேகமாகவந்து எங்களோடு கொஞ்சம் தொலைவில் ஒரு பாதையில் சீறி ஓடியது கண்கொள்ளா இன்பம்.

இப்படி மண்ணை வாரவும் மண்ணைக் கொட்டவும் என இரு வாரங்கள் நகர்ந்தன. இப்படியே போனால் 15,000 புரட்ட பல மாதமாகிவிடும். முகத்தில் ஏமாற்றமும், மனதில் வறட்சியும், வார்த்தைகளில் ஏழ்மையும் மட்டுமே தங்கியிருந்த அந்த நாட்களைக் கடந்து மீண்டும் தம்புச் செட்டித் தெருக்களில் ஒரு நாள் விழுந்தேன்.
முதலாளி இப்போதும் சொற்பொழிவாற்றினார். கிழட்டு ஓநாயின் உறுமல் அவரிடம் இருந்தாலும் காரணம் புரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் அவரின் பின் மாலைப்பொழுதொன்றில் நின்றபோது தெரிந்தது. வேலைக்கான கூலிக்காக நின்றவனின் ஆன்மாவை முடக்கிப்போடவே இந்தச் சொற்பொழிவுத் தந்திரம். கெட்ட வார்த்தைகளைக் கானங்களாகப் பாடினார்.
முதல் கோணல் முற்றிலும் கோணல். கிடைத்த வேலையிலும் சம்பளம் கிடைக்காத வெறுமை. தப்பு செய்யும் தெருவைவிட்டு வெளியேவந்தேன். மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா? இப்படித்தான் மனிதர்கள் எனத் தெருவோரக் கடைகளில் ஆடிக் கொண்டிருந்த பொம்மைகள் என்னைப் பார்த்துச் சிரித்தன. கடைக்காரர்களைப் போல இப்படி நாமும் இருந்து விடலாமா என யோசித்தபடி நடந்தேன். ஒரு காவலர் தெருவோர கடைக்காரனைக் கடையைத் தூக்கச்சொல்லி தொந்தரவு செய்துகொண்டிருந்தார். பொம்மைகள் கடைக்காரனின் கவலை உணர்ந்து அவனுடைய சாக்குப் பைகளுக்குள் ஓடிக்கொண்டிருந்தன. தூரத்தில் ஒரு கட்சிக்காரர் முன்பு ஒரு காவலர் பணிவாக நின்றிருந்தார். ஒரே இடத்தில் இருவேறு தோற்றங்களில் காவலர்கள். இரு வேறு மனநிலையில் காவலர்கள். இரு வேறு அதிகாரங்கள். இரு வேறு பிழைப்புகள்.
அந்த நேரத்தில் என்னைத்தேடி என்னுடைய ஓட்டுநர் வந்தார். மூன்றுவார உழைப்புக்கான கூலியில் மூன்றில் ஒரு பங்கை இலக்கணம் பேசியவர்களிடம் இருந்து வாங்கிவந்திருந்தார்.
என்னால் பொறுக்கமுடியவில்லை. வெந்து தணிந்தது காடு. 'இங்க எல்லாரும் இப்படித்தான்... இவங்க போக்குல போய்தான் புடிக்கணும். அடுத்தது க்ராவல் ஏத்தப் போறோம்... அதுல உன்னோட காச எடுத்துடலாம் வா’
ஓட்டுநர் கொடுத்த நம்பிக்கை. தரையில் நழுவிக் கிடந்த நம்பிக்கை, மீண்டும் நெஞ்சில் ஏறியது.
அடுத்த பயணம் எவனைக் கண்டும் அஞ்சாதே. எமனைக் கண்டும் அஞ்சாதே என அவ்வப்போது தனது தவழும் அலைகளால் நம்பிக்கையூட்டும் கடலின் ஒரு முனை. ஆம், நாங்கள் துறைமுகத்தில் இருந்தோம்.''
(கனவு நிஜமாகும்...)
 http://en.vikatan.com/article.php?aid=25700&sid=743&mid=31

பெருங் கனவு தேசம்-6  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்

உடம்பின் அனைத்து இயக்கங்களும் மெய்மறந்து ஓடிக்கொண்டிருந்தன. அப்படியரு அதிர்வை இரண்டாவது முறையாகச் சந்திக்கிறேன். கிளீனராக வேலை பார்த்த ஒரு அதிகாலையில் கண்முன்னே ஒரு லாரியும் டாடா சுமோ வாகனமும் நேருக்கு நேர் மோதி டாடா சுமோவில் இருந்த 16 உயிர்களும் தூக்கி வீசப்பட்டுத் துடிதுடித்து உயிர் தொலைத்த அதிர்வுக்குப் பிறகு, ஸ்டீபனுடைய மரணம்.  நெஞ்சை பிழித்தெடுத்த அதிர்வு. பழகியது எட்டே நாள். உடன் பிறந்து ஒன்றாய் உயிர் நீத்ததுபோல் வலித்தது.
அண்ணா நகர் அறையில் பிழிந்த சோகம் போதாதென மீண்டும் வேலைக்குச் சென்ற இடத்தில் துணி மாற்றும்போது உடன்வந்த அவனுடைய அழுக்குத் துணியில் நீண்டது. ஒவ்வொரு நடையிலும் ஒவ்வொரு முறை மண் கவிழ்ப்பாலும் மண் ஏற்றியதிலும் அடங்காத அவன் நினைவுகள் செரிக்காமல் கிடந்து நெஞ்சைக் குதறி எடுத்தன. எவ்வளவு முயன்றும் டிப்பரின் முகப்புக் கண்ணாடி முன்பு, அவனே நின்றான்.
புதுக் கிளீனரிடம் அந்த ஒரு வார காலத்தில் நான் பேசிய, சைகையில் வினவிய, சில வார்த்தைகளைத் தவிர வேறொன்றும் பேச முடியவில்லை. அந்த ஏழு நாட்களில் டிப்பர் மூன்று பஞ்சர்களைச் சந்தித்தது. 11 முறை அணைந்து நின்றது. இருபக்க பார்வைக் கண்ணாடி (Side mirror)களும் எதிர்வரும், முந்திச் செல்லும் வண்டிகளால் உடைந்துபோயின. கிளீனருக்குப் பயம். எனக்கும்தான்.
நாமக்கல் வண்டியில் கிளீனராகப் பயணித்து வண்டியோட்டத் துவங்கியதே ஒரு வித்தியாசமான தருணம். விருதுநகர் அருகே போய்க்கொண்டு இருக்கும்போது, சற்றுமுன்பு அடிபட்டு சாலையில் ஒருவன் கிழிந்து கிடந்தான். மரணம் அவனைக் கவ்விக்கொண்டிருந்த ஒரு கணத்தில் விக்கித்து அமர்ந்திருந்த என்னிடம் ''வண்டியை இப்ப ஓட்டு'' என்று ஓட்டுநர் எனக்கு முதன் முதலாக வாய்ப்புக் கொடுத்தார். உடல் அதிர, நெஞ்சு விம்ம அந்தக் கணத்தில் வண்டியெடுத்துப் பழகிய எனக்கு... இன்று ஸ்டீபனால் பெரும் கலக்கம்.
ஏழாம் நாள் இரவு அது. கருமண்ணால் ஆன அந்த மண்குன்றில் டிப்பர் நின்றுவிட்டது. மண்குன்றின் உச்சியில் இருந்து டிப்பர், செல்ஃப் மோட்டாரை எவ்வளவோ தட்டிப்பார்த்தும் பயனில்லை. கிளீனரைக் கூப்பிட்டு, மெக்கானிக்கை அழைத்துவரச் சொன்னேன். அவன் போன சிறிது நேரத்தில் என் பெருமுயற்சிக்குப் பின் வண்டிக்கு உயிர் வந்துவிட்டது. நான் என்னுடைய வண்டியைப் பின்னோக்கி ஓட்டிச்சென்று மண்ணைக் கொட்டவேண்டும். பின்புறம் பார்த்துச் சொல்ல வேண்டிய கிளீனரை வேறு அனுப்பிவிட்டது கவலையாக இருந்தது. வேறு வழியில்லை. மண்ணைக் கொட்ட, சேறும் சகதியுமான அந்த மண் சகதியில் வண்டியை வேகமாக பின்னோக்கி எடுத்தேன். அப்பொழுதுதான் எதிலும் மாட்டாமல் இருக்கும். எனது இருக்கையில் இருந்து பின்னால், வெளியே தலை நீட்டிப் பார்த்தபடி வண்டியை மிக வேகமாகப் பின்னோக்கி ஓட்டிக்கொண்டிருந்த கணத்தில் ''டமார்'' என்ற பெரும் சத்தம் அந்த இருள் கவ்விய இரவினைக் கிழித்தபடி கேட்டது.
பெரும் பதட்டத்தில் வண்டியும் அணைந்துவிட்டது. கீழே இறங்கி ஓடினேன். அந்த மலை உச்சிக்குக் கீழிருந்து மேலே ஏற, மிக வேகமாக வந்த வேறொரு டிப்பர் நான் பின்னோக்கி வருவதை எதிர்கொள்ள முடியாமல் எனது வண்டியின் பின்புறத்தில் மோதி அதன் கேவின் எனப்படும் முன்பகுதி பிய்ந்து தனியாக தொங்கிக்கொண்டு நின்றது. அந்த வண்டியின் ஓட்டுநரும் கிளீனரும் தூக்கி வீசப்பட்டிருந்தார்கள்.
உடல் நடுங்க, என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த டிப்பரின் தலைப்பகுதி முழுதும் சிதைந்துவிட்டது. ஓட்டுநரும் கிளீனரும் கதறியபடி கிடந்தார்கள். அதற்குள் அடுத்தடுத்த வண்டிகள் வந்துவிட்டன. நான் ஓடத் தொடங்கினேன்.
அவர்கள் பிழைத்தார்களா எனத் தெரியாது. சிறைதானா இனி எனக் குழப்பம். எதிர்காலம் என்கிற ஒன்றிருப்பது  தொலைந்துபோக பதைத்து ஓடினேன். ராயபுரம் கணேசன் அடித்தே கொல்லப் போகிறான். ஓட்டுநர் உரிமம் போய்விட்டது. முடிந்தது வாழ்க்கை. விடியப் போவதில்லை இரவு.
ஏழுநாள் படியும் வாங்கவில்லை. கிடைத்த ஒரு வாகனத்தில் தப்பியோடினேன். ஸ்டீபனோடு துவங்கி, ஸ்டீபனோடு முடிந்துவிட்டது. கையிருப்பை வைத்துக்கொண்டு அண்ணா நகர் வந்துவிட்டேன். பசிக்கவில்லை. இரண்டு உயிர்களைக் கொன்றுவிட்ட தகிப்பு உடலில் வெந்துகொண்டிருந்தது.
பொதுத் தொலைபேசி நிலையத்தில் இருந்து ராயபுரம் அலுவலகத்துக்கு நடுக்கத்தோடு போன் பண்ணி, எனது புதிய கிளீனரின் பெயர் சொல்லி இருக்கானா என மதியம் 3 மணிக்குக் கேட்டேன். போனை எடுத்த கணேசன் என் குரலினைக் கண்டுகொண்டார். அவரிடம் நான் இதுவரை பேசிய வார்த்தைகள் இருபதுதான். மூன்று வாரங்களுக்கு மேலாகிப்போன அந்த இருபது வார்த்தைகளின் சொந்தக்காரனை அவர் அடையாளம் கண்டது புரிந்ததும் பெரும் அழுகை வெடிக்க, ''நான் ஒண்ணும் பண்ணலேண்ணே... மேல ஏறின வண்டிதான் நான் ரிவர்ஸ் வர்றதைக் கவனிக்கலை'' என்றழுதேன்.
''எல்லாம் கேள்விப்பட்டேன்... தப்பு உன் மேல இல்ல... நீ நேர்ல வா பேசிக்கலாம்'' சரியென அவரிடம் கூறிவிட்டாலும் நேரில் செல்ல பயம். தொடர்ந்து இரண்டு நாட்கள் யோசித்து மூன்றாம் நாள் தயங்கித் தயங்கிப் போனேன். பல மணி நேரக் காத்திருப்புத் தொடர, கணேசன் வந்தார்.
''தப்பு உன்மேல இல்லேன்னாலும் வண்டிக்குப் பெரிய சேதம். நான் மொதலாளிக்குப் பதில் சொல்லணும். நீ ஏழுநாள் ஓட்டின காசு 7,000  ரூபாய் இருக்கு. மீதி 15,000 கொடுத்துட்டு லைசன்ஸ் வாங்கிக்க''
அவர் அப்படிச் சொன்னதும்தான் கொஞ்சம் தெம்புவந்தது. வண்டிக்கு நடக்கும் பாதிப்புகளை நிர்வாகமே பொதுவாக ஏற்றுக்கொள்ளும் என்றாலும் இதுபோன்ற விபத்தின் மூலம் கணேசனின் தனி வருமானமாக அது மாறும். வண்டியில் அடிபட்ட ஓட்டுநர், கிளீனருக்குப் பாதிப்பில்லை. விழுந்தது மண்ணில் என்பதால் பிழைத்தார்கள்.
நானும் பிழைத்துக்கொண்டேன். ஆனாலும் ஓட்டுநர் உரிமம் கையில் வாங்க, 15,000 வேண்டும். என்ன செய்வது?
(கனவுகள் நிஜமாகும்..)
 http://en.vikatan.com/article.php?aid=25486&sid=735&mid=31

பெருங் கனவு தேசம் -5  

Posted by நாண்


பெருங்கனவு தேசம்!

''வனிதா, ஸ்டீபனைக் கண்டதும் அவளின் முகம் ஒரு கோடி நட்சத்திரங்களாக மின்னின. கண்களில் பொதிந்து இருந்த காந்தங்கள் ஈர்த்தன. ஸ்டீபனின் சிந்தனையை மட்டுப்படுத்தி கால்கள் ஊர்ந்தன. காந்தத்தை நோக்கி, நான்தான் எங்கே நிலைப்பதென தெரியாமல் முழித்தேன்.
உலகத்தின் எல்லாக் கொள்ளளவும் மனித சிந்தனையில் அடங்குகிறது. எல்லாச் சிந்தனைகளும் காதலில் வெடிக்கிறது. ஸ்டீபனின் சிந்தனை இந்த மண்ணின் அவலங்களில் முளைத்து காதலில் திளைத்துக் கிடந்தது. இருவரும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார்கள். தொட்டுக்கொள்ளாமலே பகிர்ந்துகொண்டார்கள் பேரன்பை. வனிதா சடாரென அங்கிருந்து விலகினாள். இல்லை... ஓடினாள். அவள் ஓடும்வரை ஓடும் தூரம் வரை காதல் அலைவரிசையை நீட்டினான் ஸ்டீபன். பெரும் வாகன ஓட்டத்தை அவளுடைய ஓட்டம் கட்டுக்குள் அடக்கியதோ இல்லை காதல் அலைவரிசை கட்டுப்படுத்தியதோ தெரியவில்லை. அவள் ஓடினாள். வாகனங்கள் நின்றன.
வனிதா எதிர் நடைபாதையில் நின்ற பொது கழிப்பிடத்தின் பெண்கள் பகுதிக்குள் நுழைந்தாள். ஸ்டீபன் என்னை அவனுடைய வீட்டில் அமரச்செய்தான். அவனும் பொது கழிப்பிடத்துக்கு நடந்தான். அவன் ஆண்கள் பகுதிக்குள் புகுந்தான். ஒரு வேட்கையின் இருவேறு முனைகள் எப்படி ஒன்றினையும் என சிந்தித்தபடி அறையைத் துலாவினேன்.
கிழிந்த பாயொன்றும் அழுக்கு தலையணையொன்றும் அறையை நிரப்பி இருந்தன. அந்த ஏகாந்த மணத்தை நுகர்ந்தபடி சில நூறு கொசுக்கள், ஈ போல கொழுத்துத் திரிந்தன. சில கொசுக்கள் அங்கே இறைந்து கிடந்த மாவோவின் மீதும் லெனினின் மீதும் அமர்ந்திருந்தன. சில எப்படியாவது அந்தப் புத்தகக் கட்டைகளை புரட்டி வாசித்துவிட வேண்டும் என்கிற வெறியோடு முயற்சி செய்துகொண்டு இருந்தன. பாப்லோவில் இருந்து வண்ணதாசன்வரை அந்தக் கூடாரத்தை நிறைத்து இருந்தார்கள். என் நெஞ்சம் செருக்கேறி நின்றது. அடங்காதப் பசி எடுத்தவனின் அகத்துக்குள் நான் அடைந்து கிடந்ததே அந்தச் செருக்குக்கான பின்னணி.
ஒரு புராதன ரேடியோ என்னை அழைத்தது. தயங்கித் தடவி உயிரூட்ட, எந்தப் பிசிறும் இல்லாமல் கணீர் குரலில் ' செந்தமிழ் தேன்மொழியாள்... நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்' என மகாலிங்கம் சிலிர்த்துக் கொண்டு இருந்தார். பொதுக் கழிப்பிடத்தில் காதலர்களின் மொழி பேசிக்கொண்டு இருக்க, மகாலிங்கம் தமிழை மீட்டிக்கொண்டு இருக்க, ஓர் அற்புதத்தின் எல்லையில் முகிழ்த்துக் கிடந்தேன்.  முற்றும் நினைவிழந்த வானம்பாடியைப் போல...
வர்ணனையாளர்களின், விளம்பரக் கடைவிரிப்பு ஒலிகளைக் கடந்து கடந்து, ' வசந்த முல்லைப் போல'வும் 'பாட்டு பாடவா... பார்த்து பேசவா'வும் ரீங்கரித்து முடக்கும் கணத்தில் முகமெங்கும் நட்சத்திரங்களின் வெளிச்சம் கீறிய வெளுப்போடு ஸ்டீபன் வந்தான். அவன் முகக்கோடுகளில் புரிந்தது தழுவிய முத்தங்களின் எச்சில்கள்.
இருவேறு அறைகளில் புகுந்தவர்கள் ஓரிடத்தில் சங்கமிக்கும் சூட்சுமம் புரியாமல் அவனை நோக்கினேன். அவனுக்குப் புரிந்தது. இரு வருட காதலில் சில மாதங்களாகக் கழிப்பறையின் சுவர்கள் தகர்ந்ததை, சுவரேறி ஒரு கூட்டில் அடையும் தங்களின் சிலிர்ப்பை விளக்கினான். பெண்கள் கழிப்பறைக்குப் பகல் நேரத்தில் பெரும்பாலும் யாரும் வராத சூழலை அவள் விவரிக்க, காதல்கள் பெரும்பாலும் நட்சத்திர ஓட்டல்களிலும் வளங்களிலும், சோலைகளிலும், கடல் கரையெங்கும் காலவெளியிலும் என்று நீளும் கற்பனைகள் முடங்கி உண்மை சுட்டது. எளிமையான வாழ்வை, பேராசைகொண்ட நகர மனிதர்களுக்கு இடையில் கழிப்பறையிலும் காதலை மேற்கொள்ள முடியுமென ஸ்டீபனின், வனிதாவின் பேரன்பு வெளிப்படுத்தியது. நிச்சயம் இது உடல் கொதித்த காமம் அல்ல. உணர்வு கிளர்ந்த காதல் என்பதை எவனுக்கு விளக்கிச் சொன்னாலும் புரியாது. முட்டாள்களின் உலகத்தில் அவர்களைப்போல கோவணம் இட்டிருந்த நான் இவர்களால் அம்மணமானேன். காதலின் வரிகளை, காதலின் மொழியை, காதலின் வாழிடத்தை, காதலின் பொருளாதாரத்தை, காதலின் வலியை, காதலின் கிளர்ச்சியை, காதலின் பிரிதலை, காதலின் உறைதலை... இதுதான்... இதுதான்... வெறும் திட்டமிட்டு வரையறை செய்ய முடியாது. அதுதான் காதல். எனக்குக் காதலிக்க வேண்டும்போல இருந்தது. அப்படித் தோன்றித் தோன்றி, கிளர்ந்து கிளர்ந்து, மலர்ந்து மலர்ந்து, கருகிக் கருகி, தேடித் தேடி... எனக்கு இப்பொழுது தோன்றிய காதலின் கதவு எண்-5.
'காதல்னா ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என யாராவது சொன்னால் ஒன்று அவர்கள் ஏமாறுகிறார்கள் அல்லது பிறரை ஏமாற்றுகிறார்கள். அதுவும் இல்லையென்றால் வறட்சியானவர்கள்,  தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறவர்கள்.  ஒரு நொடியில் கடந்துபோகும் பெண்ணின் மீது ஆண்களுக்குள் நுழையும் ரசாயன மாற்றத்தை பொட்டாசியம் சல்பைடா, இல்லை வெறொன்றா என யாரும் தரம் பிரித்து அறிய முடியாது. சில நேரம் பொட்டாசியமாகவும் சில நேரம் கார்பன் மோனாக்சைடாகவும்கூட அது வெடிக்கும். அது வெடிப்பதற்கு தேவை இரண்டுதான். காத்திருப்பு. மற்றொன்று தொடர்வது. இது பெண்களுக்குப் பொருந்துமா, பெண்களின் மனவோட்டம் என்ன என்பதை அவர்களில் வரியில் இருந்தே வெளிப்பட வேண்டும். நான் வெளிப்படுத்துவது ஒரு உயரிய மடமையின் வெளிப்பாடு. பெண்களுக்கு, ஆணாதிக்கம் மிக்க இந்தச் சமூகம் கொடுத்து இருக்கும் முரண்பாடு வடிவம். அவர்களாலேயே தீர்மானிக்கப்படும்.
ஸ்டீபன் தன்னுடைய காதல் கதையை ஒரு போராளியின் தன்மையுள்ள, எந்தவித ஒப்பனையும் இன்றிச் சொன்னான். என் மனக்கண்கள் அவனுடைய காதலுக்கான ஊற்றுக்கண் தோண்டி ஒப்பனை செய்து அழகு பார்த்தது. அப்போது வனிதா உள்ளே நுழைய பேச்சறுபட்டது. காதலி காதலுனுக்காகச் சமைக்கும்போது ஏற்படும் சுவையும் மணமும் அதிகம் என்பதைத் தெரிந்துகொண்ட தருணம் அது. உள்ளக்கிடக்கையோடு அவர் அளித்த மாட்டுக்கறி விருந்து என் தாயின் கைப் பக்குவத்தில்கூட சாப்பிட்டது இல்லை. உலகின் மிகச் சுவையான கறியில் ஒன்று மாட்டுக்கறி. அதை ஏன் ஒரு சாராருக்கு என ஒதுக்கி வைத்தார்கள்?
'எனக்குத் தெரிஞ்சி முத ஆளு நீங்கதான்'
எனக்கு எதுவும் புரியவில்லை வனிதாவிடமே  கேட்டேன்.
'புரியலை'
'ஸ்டீபன்... யார் கூடவும் நின்னு பேசி பார்த்ததில்லை. இப்படிக் கூட்டிவந்து பார்த்தும் பார்த்தது இல்ல'
நான் ஸ்டீபனைப் பார்த்தேன்.
'அய்ய... இன்னா அப்படிப் பாக்கிற... என்னமோ உன்ன புடிச்சிச்சி... இன்னாவோ... உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சி... ஏன்... நீ என்ன தோஸ்த்தா நென்ச்சிக்கோ...'
நான் ஸ்டீபனின் கரம் பற்றிக்கொண்டேன். மனமெங்கும் பொங்கி வழிந்தது புன்னகை. ஒரு நீண்ட கனவைப் போலவே அந்த நிகழ்காலம் நொறுங்கி விழுந்தது. அவனுக்கும் எனக்குமான உறவின் மையம் இன்றளவும் நீடிக்கிறது. எப்போதோ கிடைக்கும் வண்ணாரப்பேட்டை பிரயாணங்களில் அந்தப் பகுதி இன்னும் கண்முன் வீற்றிருக்கிறது. ஸ்டீபனும் - வனிதாவும் நெஞ்சில் நிறைந்து கிடந்தார்கள். இப்பொழுது அந்தப் பொதுக் கழிப்பிடம் முன்பை விட நாறிக் கிடக்கிறது. வனிதாவை நான் முதலாவதாகவும் கடைசியாகவும் சந்தித்த தருணம் அதுதான். ஏன் ஸ்டீபனையும்கூட அதற்கடுத்த நாட்களில் என்னால் சந்திக்கவே முடியவில்லை.
ஓர் இரவு முழுவதும் அந்தக் கூடாரத்தில் படுத்துக்கிடந்த எனக்கு அவன் பேசிய பேச்சுகள், கோபங்கள், சமூக விழுமியங்கள் என இன்னும் நான் பெரும் மனச்சுமைகளை நீக்க அவனே காரணம்.
ஒரு நாள் அவனோடு இருந்துவிட்டு, அண்ணா நகர் வந்து நண்பர் நாகராஜிடம் சகலமும் சொன்னேன். இங்கும் அதேபோல் பல நினைவலைகள்... நிகழ்வுகள்.
நீண்டு பெருத்த அந்த ஒரு வாரத் துயரைத் துடைத்துவிட்டு ஸ்டீபனைக் காணும் ஆவலோடு வேலைக்குச் சென்றேன். ஸ்டீபன் வரவில்லை. வரவே இல்லை.
புதிய கிளீனரோடு மனம் ஒட்டவில்லை. ஒரு வார இரவும் பகலும் அவனே ஆக்ரமித்து இருந்தான். போன முறையைவிட இந்த முறை குறைவான நடையே ஓட்டி இருந்தேன். உடல் சோர்வைவிட மனச் சோர்வு வாட்டியது.
ஒரு வாரப் பணி முடிந்ததும் வழக்கமான சம்பிரதாய முனைப்புகளுக்குப் பிறகு, வண்ணாரப் பேட்டையை அடைந்தேன். தொலைவில் இருந்து பார்க்கும்போது கூடாரமும் தென்படவில்லை. லேசான அச்சத்துடன் அவ்விடம் நெருங்க நெருங்க இனம் புரியாத பயம் கவ்வத் தொடங்க. அந்த இடம் வெறுமையாய் நின்றிருந்தது. மனிதர்கள் சாவதானமாய் நடந்துகொண்டிருந்தார்கள்.
கொஞ்சம் தொலைவில் இருந்த பெட்டிக் கடைக்காரரிடம் கேட்டேன்:
'அத ஏம்பா கேட்கிற...போனவாரம் ஒரு நா ... ஒரு கார்க்காரன்  ஃபுல் மப்புல ரோடு எது ப்ளாட்பாஃர்ம் எதுனு தெரியாம ப்ளாட்பாஃரத்துல ஏத்திட்டான்.  ஃபுல் ரேசு... ஒண்ணும் பண்ண முடியில. செவத்தியா இருப்பாம்ப்பா அந்தப் பய. சட்னி மாதிரி குடலு பிதுங்கிப் போய்ருச்சுப்பா... மூஞ்சே இல்லை..'
என் காதில் கரகரவென இரும்புகள் உராயும் ஒலி கேட்டது. சுற்றிலும் பார்த்தேன். தூரத்து தொலைவில் என்னை அடையாளம் கண்டுகொண்டு  வனிதா ஓடி வந்தாள்.
நான் பேச ஏதுமற்று நின்றுகொண்டு இருந்தேன். உடைகள் களைந்து அழுக்கடைந்த முகத்தோடு முடிகள் காற்றில் பறக்க வனிதா என்னை நோக்கி வந்தாள்.
அவளால் பேச முடியவில்லை. என் முன்னே அமர்ந்து ''ஓ’ வென அழத் தொடங்கினாள். வெறித்து வெறித்துப் பார்த்தேன். அவள் சட்டையை மீறித்  தெரிந்த ஸ்டீபனின் பச்சை குத்திய பெயர் முள்ளாக நெஞ்சில் தைத்தது.
வனிதாவின் அழுகைக் காணாமல்போய் வெறுமையாக எங்கோ பார்த்துக்கொண்டு இருந்த ஒரு கணத்தில் அவளின் பெற்றோர்வந்து அவளை அழைத்துப்போயினர்.
'வண்டி ஏறினத பார்த்துல இருந்து இவளுக்கு ஏதோ ஆயிருச்சுப்பா... கோச்சுக்காத'
வனிதாவை அவர்கள் கூட்டிப்போக, நான் சிலையாக அந்தப் பெரும் நகரத்தில் நின்றுகொண்டு இருந்தேன். வேகவேகமாய் நடந்த சுவடுகளை அறியாத வாகனங்கள் அந்தச் சாலையில் போனபடியும் வந்தபடியும் இருந்தன.
நான் எல்லாவற்றையும் மறக்க நினைத்து எல்லாவற்றையும் சேமித்தபடி நடக்கையில் சில துளிகள் இரத்தக்கரை படிந்த நிலையில் என் கால்களில் இடறியது ஒரு புத்தகம்.
அந்தப் புத்தகத்தின் அட்டையில் மாவோ சிவப்பாய் மின்னிக்கொண்டு இருந்தார். தூரத்தில் வனிதாவைப் பெற்றோர் அழைத்துப்போய்க்கொண்டு இருந்தனர். நான் மாவோவைக் கையில் எடுத்துப்பார்த்தேன். அவரின் முகத்தில் முகமற்ற, தலை நசுங்கிக் கூழான ஸ்டீபன் சிரித்துக்கொண்டு இருந்தான். நான் அங்கிருந்து வெறிநாய்ப்போல ஓடிக்கொண்டு இருந்தேன்.''

(கனவுகள் நிஜமாகும்...)

http://en.vikatan.com/article.php?aid=24638&sid=702&mid=31

பெருங் கனவு தேசம்-4  

Posted by நாண்

''பேசுவதற்கான வார்த்தைகளைத் தேடுவதற்குள்ளாகவே மௌனம் அதை வென்றுவிடுகிறது. அப்படித்தான் வாழ்க்கையும். துவங்கத் தடம் பார்க்கும்முன்பே அதன் முனைகளை முறித்துப் போட்டுவிடுகிறது காலம். சென்னை போன்ற பெருநகரங்களில் இருப்பைத் தக்கவைக்க முன் யோசனையோடு வந்திருந்தாலும் அது வினை எச்சமாகவே நம்மை புரட்டிப் போட்டுவிடுகிறது.
மெரினாவிலிருந்து வந்த பின்பு அண்ணாநகர் அறையிலும், அங்கிருந்து குறுக்காகப்போனால் பாடி சிவசக்தி தியேட்டரில் இரண்டு பொழுதுகளும், சில பழைய இளம் பருவ நினைவுகளைப் பேசித் திரிந்ததிலும் போய்விட்டன. இன்று முழுநேர ஓட்டுநராக வேலையில் சேர வேண்டும். முழுக்க நடுத்தர மற்றும் ஏழை மக்களைப்  பெரும்பான்மையாகக்கொண்ட திருவொற்றியூரில் இறங்கி அங்கிருந்து எர்ணாவூர் கேட்டுக்கு வந்தாகிவிட்டது. நான் போன இடத்தில், அழுக்கு லுங்கியும் முகம் முழுக்கக் கரி அப்பி, பல நாள் குளிக்காமல் கிடந்தவர்கள் நின்றிருந்தார்கள். என்னைப் போலக்  குளித்துவிட்டு வந்தவர்களின் நடுவில் ராயபுரத்தில் ஓட்டுநர் உரிமத்தை வாங்கி வைத்திருந்தவரும் நின்றுகொண்டு இருந்தார். அவர் பெயர் ராயபுரம் கணேஷ். தொலைவில் நிறைய டிப்பர் லாரிகள் மஞ்சள் நிறம் மறந்து, வயசான கிழட்டு கருத்த யானைகளைப் போல அணிவகுத்து நின்றிருந்தன. ஓரிடத்தில் லாரி பட்டறை ஒன்றும் டயர் கழட்டி மாற்ற ஒரு பஞ்சர் கடை ஒன்றும் இருந்தன.
ராயபுரம் கணேஷ் சொல்லச் சொல்ல, ஒருவர் கையெழுத்து வாங்கியபடி பணம் கொடுத்துக்கொண்டு இருந்தார். எல்லோரின் முகங்களிலும் வருத்தம் அப்பிக் கிடந்தாலும் யாரும் காட்டிக்கொள்ள முடியாமல் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு இருந்தனர். குளித்துப் புதிதாக நின்றிருந்த அனைவரையும் கூப்பிட்டு ஆளுக்கு 100 ரூபாய் பணம் கொடுத்து வண்டிஎண்  சொல்லி அதில் பணியை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். வண்டி எத்தனை நடை அடிக்குதோ அதற்கேற்ப சம்பளம்.
மிகுந்த மகிழ்ச்சியோடு வண்டியில் ஏறி அமர்ந்து, இயக்க முயன்றும் ஒவ்வொரு முறையும் தகறாறு செய்தது டிப்பர். என்னுடைய கிளீனர் பெயர் ஸ்டீபன். வண்டியில் பேட்டரி சரியில்லை. 'தள்ளித்தான் ஸ்டார்ட் பண்ணணும்’ என்றான். முதல் கோணல் முற்றிலும் கோணல். வந்த வாய்ப்பை விடமனசில்லை. நாமக்கல் வண்டியில் பழகிய பலருக்கு ஓரளவு சின்னச் சின்ன லாரி மெக்கானிசம் தெரியும். இந்த வகையில் லாரியின் பேட்டரியைக் கொஞ்சம் கவனித்தேன். பின் கிளீனரை வண்டி அடியில் முதல் டயருக்கு முன்னால் ரேடியேட்டர் அருகில் இருக்கும் செல்ப் மோட்டாரைக் காட்டி, தட்டிக்கொண்டே இருக்கச் சொன்னேன். அவர் தட்ட, நான் பொத்தானை அமுக்கிவிட்டு அமுக்கிவிட்டு உசுப்ப, வண்டிக்கு உயிர் வந்துவிட்டது.
தூரத்தில் நின்றிருந்த ராயபுரம் கணேஷ் இதைக் கவனித்தார். வண்டியை நன்கு  ரெய்ஸ் பண்ணிவிட்டு, முதல் கியர் போட்டு இரண்டடி நகர்த்திவிட்டு, மீண்டும் நியூட்ரல் செய்துவிட்டு இறங்கி கணேஷ் அண்ணனிடம் ஓடினேன்.
'அண்ணே... இப்படியே எல்லா நேரமும் இருக்காது. பேட்டரியை மட்டும் மாத்திக் கொடுங்கண்ணே'
'ஒரு நடை ஓட்டு... அப்புறம் மாத்தி தரச் சொல்றேன்'
- அவ்வளவுதான். அதற்கு மேல் பேச முடியாது. கிளீனர் வழிகாட்ட, நான் வண்டியோட்ட, நாங்கள் சென்று சேர்ந்தது...  ஒரு அனல்மின் நிலையத்தின் பின்பகுதி.
நாங்கள் நுழைந்த பகுதியை விவரிக்க ஒரே ஒரு வார்த்தை போதும். பகலிலும் ஹெட்லைட் போட்டுத்தான் வண்டி ஓட்ட முடியும். நீண்ட டயர்கள் உருளையில் எங்கேயோ உருண்டு போய்க்கொண்டு இருக்கும். அதில் நிலக்கரியோ அல்லது கழிவுகளோ எதோ ஒன்றைச் சுமந்தபடி அந்த டயர்கள் சில கிலோமீட்டர் தொலைவுகள் பயணித்து இரும்பு உலை ஒன்றில் நிலக்கரியைக் கொட்டும். அதே போல், கழிவுகளைச் சுமந்துவரும் உருளை டயரும் கழிவுகளை ஓரிடத்தில் கொட்டும். அங்கங்கே எரியும் சில பிளான்ட் விளக்குகளும் எடை மேடையின் அருகில் நிற்கும் விளக்குகளும் அடர்ந்த இருளைக் கிளப்பி நிற்கும் புழுதிக்குள் மின்மினிப் பூச்சிகளைப்போலத் தெரியும். ஒவ்வொரு வாகனத்தையும் கழுகுப் பார்வையில் இருந்து பார்க்கும்போது இருண்ட மேகக் கூட்டத்துக்குள் நிலா பாய்ந்து செல்வதைப்போல மிக பிரமாண்டமாக இருக்கும்.
வண்டியேறி, சிறிது தொலைவிலேயே நிறுத்தி, உடைகளை மாற்றி, லுங்கி, பனியனுக்கு வந்துவிட்டோம். முகத்தில் கண்ணைத்தவிர வேறு எதுவும் தெரியாமல் இருக்கும்படி கர்ச்சீப்பால் கட்டிக்கொண்டோம். பல ஓட்டுநர்கள் இதைக்கூடச் செய்வதில்லை. பழகிவிட்டது போல.
 டயரில் இருந்து கொட்டும் கழிவுக் கருமண்களை பொக்லைன் இயந்திரம், வரும் டிப்பர்களில் தூக்கிக் கொட்டும். அங்கிருந்து வண்டியை எடை மெஷினில் நிறுத்தி எடைபோட்டுவிட்டு அங்கிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி மலைபோல குவிந்து கிடக்கும் கழிவுகளோடு இவற்றைக் கொண்டுபோய் கொட்ட வேண்டும். இதுதான் வேலை. அந்த அடர்ந்த இருளில் எதிரே வரும் டிப்பர் இப்படித்தான் வருகிறது என யூகித்து முடிக்கும்முன்பே காற்றைப்போல, மின்னல் வேகத்தில் கடந்து மறைந்துவிடும். எந்த டிரைவருக்கும் ஒரு வாரம்தான் வேலை. மறுவாரம் விடுமுறை. மீண்டும் அதற்கு அடுத்த வாரம் இணைந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 15 நாட்களுக்கான உழைப்பை 7 நாட்களில் முடிக்க வேண்டும். இரவு பகல் எந்த நேரமும் அந்தப் புகைக்குள்ளேயே பயணப்பட வேண்டும். அனுபவமிக்க டிரைவர்கள் ஒரு நாளைக்கு அதிகப்படியாய் 13 நடைவரை அடிப்பதுண்டு.
காலைக்கும், மாலைக்கும், இரவு 7 மணிக்கும் சிலர் சைக்கிளில் இட்லியோ, வடையோ, கட்டுச் சோறோ கட்டிவந்து விற்றுப்போவார்கள். இரண்டு மூன்று முறை சைக்கிள் டீ வரும். மற்றபடி பான்பராக், சிகரெட்டுகள் விற்பனை மிக ஜோராக இருக்கும். இரவும் பகலும் கண் விழித்து ஓட்டுவதற்கு சிலர் சிகரெட்டையும்  பலர் பான்பராக்கையும் வாயில் முன் உதட்டில் அடக்கிக் கொள்வார்கள். ஒரு நடைக்கு டிரைவருக்கு 75 ரூபாய், கிளீனருக்கு 25 ரூபாய். சிலர் ஒரே நாளில் 1,000 ரூபாய்கூடச் சம்பாதிப்பது உண்டு. ஆனால், எவ்வளவு ஓட்டினாலும் ஆயிரத்தைத் தாண்டி கணேஷிடம் கணக்கு இருக்காது. தினமும் ஒருவர் வந்து அந்த 7 நாட்களிலும் ஒவ்வொரு வண்டிக்கும் 100 ரூபாய் வீதம் சாப்பாட்டுச் செலவுக்குக் கொடுத்துப் போவார். சில நேரங்களில் அவர் வருகைக்காகப் பசியோடு காத்திருப்பதும் நீடிக்கும்.
ஒவ்வொரு நாளும் மரணக் கிணற்றில் வண்டி ஓட்டுபவனின் வாழ்க்கையைப் போலத்தான் எங்களுடையது. முழுதாகச் சரிசெய்து தராமல் பிரேக் ஷூஸ் மாத்தாமல் அப்படியே விடப்பட்டிருந்த வண்டிதான் என்னுடையது. பிரேக் பிடிக்க ஒரு ஆள் ஏறி நின்று நான்கு ஐந்துமுறை பம்ப் அடிப்பதுபோல அடிக்க வேண்டும். எங்கேயாவது திடீரென வண்டி நின்றுவிட்டால், பின்னால்வரும் டிப்பரைக்கொண்டுவந்து வண்டிக்குச் சமமாக நிறுத்தி, கடப்பாரையை வண்டிகளுக்கு இடையில் கொடுத்து, அது இறுகி நின்றதும் வண்டியை நகர்த்தி, அதன் மூலம் ஸ்டார்ட் செய்து லோடைக் கொண்டுபோய்ச் சேர்ப்போம். ஒரே ஒரு ஆறுதல் கிளீனர் ஸ்டீபன் மட்டும்தான். அவனால் சரளமாக ஆங்கிலம் பேச முடிந்தது. அவனது ஆங்கிலத்தில் சென்னையில் உள்ள பலர் பேசுவது போன்ற பீட்டர்கள் இல்லை. விசாரித்தபோது அவன் ஒரு ஆங்கிலோ- இந்தியன் என்று சொன்னான்.
ஒரு ஆங்கிலோ-இந்தியனை இந்தத் தோற்றத்தில் கற்பனை செய்ய முடியவில்லை. எப்போதுமே மனிதன் கற்பிதங்களின் கனவுவெளிகளிலே தடுமாறிக்கொண்டு இருக்கிறான். உண்மை சுடும்போது பதறிப் போகிறான் அல்லது பயந்து விலகி ஓடுகிறான். அதனாலேயே, பெரும்பாலான மனிதர்கள் உண்மைகளைத் தரிசிக்க மறுக்கிறார்கள். என்னையும் உண்மை சுட்டது. ஸ்டீபனின் முகத்தில் சே குவேராவின் கிறுக்கல் மீசையும்  ஆதிமூலத்தின் கோட்டோவியங்களைப் போலக் கொசுறு தாடிகளும் இருந்தன. வெள்ளையாகவும் இல்லாமல் வெள்ளைக்கும் மாநிறத்துக்கும் இடையிலான அசத்தல் நிறத்தில் இருந்தான்.
திருச்சியில் அம்மா இருப்பதாகச் சொன்னான். அப்பா வேறு திருமணம் செய்து (ஓடிப் போனதாகவும்) கொண்டாரென்றும் தேடிப்பிடித்து, கட்டையால் இறுக்கிவிட்டு சென்னை வந்ததாகச் சொன்னான். அவன் கஞ்சாவை சிகரெட்டில் நுழைக்கும் அழகும் அதனை, நடுவிரல்களுக்கு இடையில்வைத்து கைகளைக் குவித்து அதையே குழலாகப் பாவித்து ஊதி இழுத்துப் புகை மென்று புகை துப்பும் அழகும் அலாதியாக இருக்கும்.
'படா பசங்க... உழைச்சவன் வயித்துல கடிச்சி உறிஞ்சிற கொசுங்கதான் டிப்பர் லாரி ஓனருங்க. தூத்துக்குடியில உக்காந்துக்கிட்டு அடியாள வெச்சி வேலை செய்றானுங்க. அந்த ராயபுரம் கணேசு பய சரியான சம்பளம் கேட்ட ரெண்டு டிரைவரைக் கொன்னு நிலக்கரியில புதைச்சவனாம்...எல்லோரும் அவனுக்குப் பயந்து நடுங்கி சாவுறானுங்க. எல்லாத்தையும் சம பங்கா பிரிச்சி உழைக்கிறதுக்கும் ஷேர் கொடுக்கணும். இந்த உக்காந்து திங்கிற கமிஷன் நாய்களை டயர்க்கு அடில உருட்டிவிடணும்'
ஸ்டீபனின் இந்த உறுதியான, பிசிறு இல்லாத வார்த்தைகள் அவனிடம் இருந்து வெளியே வரும்போது கஞ்சா புகைகூட பயந்து பயந்துதான் அவன் மூக்கிலிருந்து வெளியேறும். அவன் பேசும் நடப்பு அரசியல், உடமை விவாதம் என்று எல்லாவற்றிலும் ஒரு பார்வை என அவன் தனி ஆளாக நின்றான். அரசியல்சார்ந்து வாதிட எனக்குப் பல இடங்களில் குருவாக வாய்த்தவன்.
'சட்டசபைக் கூட்டம் நடக்கும்போது எல்லா ரெளடிப் பயலும் எம்.எல்.ஏ. ஹாஸ்டல்லதான் இருப்பான். எல்லாப் பயலும் முழு போதையில் கிடக்கிற அந்த நேரமா பார்த்து ஆர்.டி.எக்ஸ். கட்டிட்டுப்போய் ஹாஸ்ட்டல வெடிக்கவெச்சிடணும். ஒரு பய உயிரோட இருக்ககூடாது. புதுசா வந்தவன் அதுக்கப்புறம் பயப்படுவான். ஒழுங்கா வேலை செய்வான். பழைய களை எல்லாம்போய் புது ரத்தம் பாயும்'
திடீர் திடீரென அவன் தூக்கிப்போடும் இத்தகைய குண்டுகள் எனக்கு அதிர்ச்சி அளிக்கும். அவன் ஒரு ஆச்சர்யக்குறி. என்னிடம் மிகக் குறைந்தநேரத்தில் ஒட்டிய தோழனும் அவனே. சட்டென விலகிப்போன நண்பனும் அவனே.
முதல்வாரத்தில் வண்டி ஓட்டியதில் 6,000 ரூபாய்க்கு 3,200 ரூபாய் கணக்கு சொன்னார்கள். மறுப்பேதும் இன்றி வாங்கிக்கொண்டேன்.
ஒரு வாரமும் போட்டிருந்த ஒரே உடையான லுங்கி, சட்டை, பனியனைச் சுருட்டி பட்டறைக்குள் ஒளித்து வைத்தோம். அந்தக் கறுத்துக்கிடக்கும் துணிகளைக்கூட திருடிக்கொள்ள ஆட்கள் உண்டு. ஏழைகளின் தேசத்தில் பிணமும் உணவுதானே.
எந்த நேரமும் பீய்ச்சியடிக்கும் பிளான்ட் நீரில் அழுக்கு தீரக் குளித்தோம். இல்லை...இல்லை... உடல் தெளியக் குளித்தோம். எவ்வளவு குளித்தாலும் நகக் கண்களிலும் ரேகை நரம்புகளிலும் பீடித்துக்கிடக்கும் கறுமை போகாது. அது உணவோடு மற்றும் பிற வேலைகளும் செய்யச் செய்யத்தான் மறையும். அது மறையும் போது நாம் மீண்டும் பணிக்கு வந்திருப்போம். எனவே, தொடர் அழுக்கு என்பது தவிர்க்கவே முடியாது. சுத்தம் என்பது, உழைக்கும் வர்க்கத்துக்கு மனச்சுத்தம் மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ளாத சுத்தக்காரர்கள், உழைக்கும் மக்களை அந்நியப்படுத்தி, ஒதுக்கி வைக்க முயல்வார்கள் மனச் சுத்தமில்லாமல்.
ஸ்டீபனுக்கு வருமானம் இந்தத் தடவை மிகக் குறைவாகவே இருந்தது. வருத்தத்தில் இருந்தான். இந்தச் சூழலுக்குப் பழகிய டிரைவராக இருந்தால், இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்றவனுக்கு நான் கொடுத்த 200 ரூபாயை வாங்க விருப்பம் இல்லை.
'லாரியில்உழைக்கும் உழைப்பு என்பது, ஏனைய உடல் உழைப்புகளைவிட கடினமானது.  கொடியது. 24 மணி நேரமும் வெப்பத்தில் அமர்ந்திருக்க வேண்டும். கண், காது, விழிப்போடு இருக்க வேண்டும். கால்களும் கைகளும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் உடனடி மரணம்.  ராணுவ வீரனைவிட ஒரு ஓட்டுநரின் வேலை சவாலானது; துணிச்சலானது; அபாயகரமானது.
ஸ்டீபன் ஒரு வேலையை, மனிதர்களின் வலிகளைப் புரிந்து பேசுவது வியப்பாகத்தான் இருந்தது. ஸ்டீபன் தன்னுடன் வண்ணாரப்பேட்டைக்கு வரும்படி அழைத்தான். எனக்கு அப்போது அவனுடைய அரவணைப்பு தேவைப்பட்டது. ஏனெனில், இரண்டாண்டு மோட்டார் வாழ்வில் பெரும் துன்பங்களை அனுபவித்துக் கற்றுக் கொண்ட வேலையில், இன்று முதல் சம்பளம். வானம் எனக்குக் கீழே படர்ந்து இருந்தது. அதனால், அவனுடன் சென்றேன்.
அவனுக்கும் என்னிடம் மனசுவிட்டுப் பேசவேண்டி இருந்தது. சமூகக் கோபத்தைத் தெறிப்பவனைக் காதல் தெறித்து இருந்தது. அவனுக்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் வனிதாமீது காதலாம். இவன் ரூட்டுவிட்டா அவளும் நல்லா ரூட்டுவிடுறாளாம். பேசினால் படிந்துவிடும் என்று நம்பிக்கையோடு சொன்னான். நானும் ஊருக்குக் கடிதம் எழுத இன்லேண்ட் லெட்டர் வாங்கிக்கொண்டேன்.
அவனுடன் நடந்து செல்லும்போது, இதுதான் வீடென அடையாளம் காட்டினான். அதிர்ந்துபோனேன்.சாலை ஓரத்தில் பல டென்ட்டுகள். அவன் கை காட்டிய திசையில் அவனுடைய பிரமாண்டமான கூடாரவீடு நாலரை அடி உயரத்தில் நின்றிருந்தது. ஸ்டீபன் மகிழ்ச்சியாக இருந்தான். வீட்டினை நெருங்க நெருங்க... அவனுடைய குதூகலம் அதிகரித்தது. அவன் கூடாரத்தை ஒட்டிய கூடாரத்தில் மஞ்சள் நிலா ஒன்று அரை வட்டம் வெளியே எட்டிப் பார்த்தது.  அந்த அரை வட்டத்தில் ஒற்றை போதையூட்டும் கண்கள் இருந்தன். அதுதான் வனிதா.
- (கனவுகள் நிஜமாகும்...)

 http://en.vikatan.com/article.php?aid=24638&sid=702&mid=31

பெருங்கனவு தேசம்-3  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்!

இயக்குநர் கீரா

ட்டுப்பாடு இல்லாத குதிரையின் குளம்பில் மாட்டிய மலர் மாலையைப்போல என்னுடைய மன ஓட்டம் தறிகெட்டுக் கிடந்தது.
ராயபுரத்தில் இருந்து எந்தப் பேருந்திலும் ஏறவில்லை. கால்போன போக்கில் நடந்துகொண்டிருந்தேன். ஒரு வருடம் உழைத்து, ஓட்டுநர்களிடம் திட்டுவாங்கி, பூனாவின் கண்டாலா காடுகளில் கட்டை தூக்கி, அலைந்து பெற்ற ஓட்டுநர் உரிமத்தை, முகம் பழகாத ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டோமே என மனம் அலைந்துகொண்டு இருந்தது. கண்களில் பூச்சி பறந்தபோதுதான், இதுவரை எதுவும் சாப்பிடாதது புரிந்தது. நீண்ட தூரம் மாநகரப் பேருந்துகள் கக்கியப் பெரும்புகையைச் சகித்துக்கொண்டு நடந்து வந்ததால் உடம்பில் பெரு வியர்வையும் நாவறட்சியும் போட்டி போட்டபடி இருந்தன. அவசியம் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தேனீர்க் கடையைத் தேடிய என் கண்ணில்பட்டது பீச் இரயில்வே ஸ்டேசன். எதையும் யோசிக்காமல் விறுவிறுவென உள்ளே நுழைந்து தண்ணீர் பம்பைத் தேடினேன். ரயில்களின் தொடர் ஓட்டத்தில் மக்கள் கும்பல், கும்பலாக ஏறியபடியும்  இறங்கியபடியும் இருந்தார்கள். தண்ணீர் எங்கே என யாரிடம் கேட்பது என்றுகூடப் புரியவில்லை. ஏனெனில், நின்று பதில் சொல்லும் இயல்பான முகம் ஒன்றுகூட கண்ணில் படவில்லை. தூரத்தில் ஒரு காவலர் நின்றுகொண்டு இருந்தார். அவரிடம் கேட்கலாம் என நான், யோசித்து முடிக்கும்முன்பே அவரும் என்னைநோக்கி வந்தார். தயக்கம் கலைந்து '' ஸார்... தண்ணீர் எங்கே இருக்கு?'' என்றேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்து '' டிக்கெட் எடு'' என்றார். நான் ரயிலில் ஏறியதாகத் தவறாக எண்ணிவிட்டாரென நினைத்து, '' ஸார்... நான் ரயிலிலவரல... தண்ணி குடிக்கத்தான் இங்கேவந்தேன்'' என்றேன். அவர் என்னை, அவரின் பின்னாலேயே வரும்படி கூற,  நடந்தேன்.
அந்த இடம் ரயில்வே  நிலையத்துக்குள் இருக்கும் காவல் நிலையம். காவல் நிலையத்தைக் கண்டதும் லேசான நெருடல் ஏற்பட்டது. தயக்கத்தோடு நான் காவல் நிலைய வாசலிலேயே நிற்க, என்னை அழைத்த காவலர் என்னுடைய கழுத்தின் பின்புறம் கைவைத்து நிலையத்துக்குள் தள்ளினார். இயல்பாகவே தவறுகளைக்கண்டு பொங்கும் கிராமத்து குணம் அங்கே எட்டிப்பார்க்க பிடரியைப்பற்றி இருந்த  கையை மூர்க்கமாக எடுத்துவிட்டேன்.
அதுதான் தாமதம், பளீரென கன்னத்தில் ஏழு அறைகள் வரிசையாக விழுந்தன.  நெடுந்தூரம் நடந்த களைப்பும், நாவறட்சியும், பசியும் ஒரே தளத்தில் நின்று என்னை வாட்டியதாலும் நகரத்தில் கேட்பாரற்ற இயலாமையும் என்னுடைய மூர்க்கத்தை செயல் இழக்கச் செய்தன.
மிகுந்த தன்னிரக்கத்தோடு காவல் நிலையத்துக்கு அழைத்த விபரத்தைக் கேட்டேன். விரைப்பாக முறைத்த காவலர் அருகேவந்து என் பேன்ட் மற்றும் சட்டையில் இருந்த பர்ஸ், கர்ச்சீஃப், முகம் பார்ப்பதற்காகப் புதிதாக வாங்கிவைத்து இருந்த சிறு கண்ணாடி,  சட்டைப்பையில் இருந்த சில்லறைகள் முதற்கொண்டு என அனைத்தையும்  எடுத்துத்  தனது டேபிள்மீது வைத்தார். சில்லறைகளோடு சேர்த்து மணிபர்ஸில் இருந்த தொகை மொத்தம் முன்னூற்று சொச்சம் இருந்தது. காவலரின் முகத்தில் கடுகடுப்பு குறைந்தது.
'' பிளாட்ஃபார டிக்கெட்டும் இல்லாம, ரயில் டிக்கெட்டும் இல்லாம ரயில்வே ஸ்டேஷன்ல நின்னது தப்பு. அதுக்கு ஃபைன் 1,500 ரூபாய் கட்டணும், இல்லேன்னா, ஜெயிலுக்குத்தான் போகணும்’ பேசிக்கொண்டே எனது முன்னூற்று சொச்ச பணத்தையும் தன்னுடைய பேன்ட்டில் சொருகிக்கொண்டார். என் நிலையை எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. உயர் அதிகாரி வரும்வரை உட்காரச் சொல்லிவிட்டார்.
தொடர் வண்டி நிலையத்தில் நுழைவுச்சீட்டு எடுக்க வேண்டுமென எனக்குத் தெரியாது. பிறந்ததில் இருந்து ரயில் பயணமே செய்யாத எனக்கு இது தெரியவில்லை. அதற்காக, சிறை தண்டனை என்பது எல்லாம் மிகக் கேவலமாகத் தோன்றியது. பயணம் செய்யப் பணம் இல்லாதவனைச் சிறையில் தள்ளி உணவுகொடுத்து, தங்கவைத்து என்ன சாதிக்கப்போகிறது இந்த அரசமைப்பு. பணம் சம்பாதிக்கும் வழியைக் காட்டிவிட்டாலாவது அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.
நேரமாக, நேரமாகக் குழப்பமும் பயமும் படர்ந்தது. முடிவுக்கு வந்துவிட்டேன். காவலர் அசந்து இருந்த நேரத்தில் பிடித்தேன் ஓட்டம். ஓடினேன்... ஓடினேன்... நெடுந்தூரம் ஓடினேன்.  கடற்கரையில் பெரிய கூட்டம் இல்லை. குப்பைகளும் வழிப்போக்கர்களும், கிடைத்த நிழலில் ஒதுங்கிக்கிடக்கும் கூடாரமாகத்தான் இருந்தது. காந்தி முதல் கண்ணகிவரை காக்கையின் எச்சிலால் முகம் தொலைந்து நின்றார்கள். கடற்கரையில் சுட்டெரிக்கும் வெயிலிலும் சுதந்திர தாகத்தைக் காதலர்கள் தீர்த்துக்கொண்டு இருந்தார்கள்.
நெருக்கடிகளால் சூழ்ந்திருக்கும் இந்த நகரின் மனநெருக்கடிதான், குறிப்பாக நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் இட நெருக்கடிதான் இங்கே சுதந்திர வேட்கைகொள்ளச் செய்து இருந்தது. காந்தி அவர்களுக்குக் காவல் இருந்தார். பலூன் சிறுவர்கள், காதலர்களை எவ்வளவோ சீண்ட முயற்சிசெய்தும் முடியவில்லை. சூரியன் தனது வெப்பத்தின் மூலம் கொடுக்கும் நெருக்கடியையே சந்தித்த காதலர்களால் குழந்தைகளின் விளையாட்டைப் புறக்கணிக்க முடியாது.  இங்கே ஒன்று சொல்ல வேண்டும். காதல் என்றால் ஒன்றே ஒன்றுதான். அதென்ன நல்ல காதல், கள்ளக்காதல் என்று பிதற்றுகிறார்கள். காதலை ரகம் பார்க்க முடியாது.
சென்னையைப்பற்றிப் பேச வேண்டுமானால், கடற்கரையை மட்டும் பேசினாலே போதுமானது. அதுவே காலத்தின் சாட்சியாக, இந்த நகரம் உருவானதை உள்வாங்கி இருக்கிறது. நகரத்தின் கழிவுகளில் இருந்து ஆசை, கோபம், ஆற்றாமை, நேசம், கனவு, காதல் என மனிதர்களின்  எல்லா பரிமாணங்களையும் தன் முகத்தில் சுமந்தபடி திரிகின்றது.
எம்.ஜி.ஆர் சமாதி...! அப்பா எம்.ஜி.ஆரின் தீவிர விசிறியாக இருந்து, தொண்டராகி, அதையே எங்கள் நெஞ்சிலும் விதைத்துவிட்டுச் சென்றிருந்தார். தீவிர வாசிப்பின் வழியாக, தமிழகத் தலைவர்கள் மீது எந்தவித மரியாதையும் இல்லாமல் போனாலும் எம்.ஜி.ஆரை ஏனோ விடமுடியவில்லை. பட்டுக்கோட்டையாரின், கண்ணாதாசனின் தத்துவச் செறிவுமிக்க பாடல்களை என் நெஞ்சில் விதைத்தது எம்.ஜி.ஆரின் திரைப்படங்களே. சமூகத்துக்கு உதாரண மனிதராக, சமூக அவலங்களுக்கு எதிராக நிற்கத் தூண்டியதன் பின்னணியில் எம்.ஜி.ஆரின் படங்கள் இருந்தன.
ஆனாலும், இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இத்தனை கோடிகள் கொட்டி சமாதி அமைக்க வேண்டுமா? மக்கள் தலைவர்கள் மக்களைவிட எளிமையாக அல்லவா இருக்க வேண்டும்? சமாதி அவ்வளவு குளுமை. வெறுந்தரையில் சாப்பிடலாம். சென்னையில் சில கட்டடங்களைத்தவிர அண்ணா சமாதியும் எம்.ஜி.ஆர் சமாதியும் பிரமாண்டத்தின் உச்சம். சதுக்கத்தை அவ்வளவு அழகாக செதுக்கி இருந்தார்கள். அந்தப் பளிங்கு மேடையைச் சுற்றிவந்தார்கள் மக்கள். அணையா தீபத்தின் முன்பு தங்களால் இயன்ற சில்லறைகளைப் போட்டுவிட்டுக் கும்பிட்டுப் போனார்கள். அதைக்கூர்ந்து கவனித்தபோது, நான் அண்ணா நகருக்குப் போய்ச் சேர்வதற்கான விடை கிடைத்தது. 'திருடாதே பாப்பா திருடாதே' என எம்.ஜி.ஆரின் முக பாவத்தில் கேட்ட அந்தப் பாடலைக் கர்ண கொடூர குரலானாலும் பாடியே தீருவது எனப் பாடி பலபேரிடம் திட்டுவாங்கி பழகி இருந்த எனக்குத் திருடும் எண்ணம் வந்தது. சமாதிமுன்பு ஆட்கள் இல்லாத ஒரு தருணத்தில், சமாதியை வலம்வந்து அணையா தீபத்தில் இருந்து மற்றவர்கள் போட்டிருந்த காசைப் பொறுக்கி, அவசரமாக என்னுடைய பேன்ட் பையில் போட்டுக்கொண்டு விறுவிறுவென வெளியேறினேன்.
படபடத்த இதயத்துடன், சுற்றிலும் பார்த்தபடி குற்ற உணர்வு மேலிட, நடந்தவன் சட்டென நின்று சமாதியை உற்று நோக்கினேன். அது ஒரு அழகான பார்வை. சமாதிக்குள் ஊடுருவி அவரின் சடலத்தின் முன்பு நின்றது. எம்.ஜி.ஆர்., மூக்கில் வைக்கப்பட்டு இருந்த பஞ்சோடு கண்மூடிப் படுத்து இருந்தார். சட்டென அவர் விழிகள் திறந்துகொண்டன. பார்வை என் பார்வையைத் துளைத்து எடுத்தது. நாக்குக் குளறியது.
''இந்தக் காசை எப்படியாவது ஒருநாள் உன்கிட்டயே கொண்டுவந்து வெச்சிடுவேன்'' - இது நான்.
எம்.ஜி.ஆரிடம் மெல்லிய புன்சிரிப்பு.
''இல்லை... நிஜமாவே திருப்பித் தந்திடுவேன்''
அவரின் புன்சிரிப்பு மறையவே இல்லை.  அவருக்குக் கொடுத்த வாக்கு அப்படியே இருக்கிறது. இதுவரை  அந்தக் காசை திருப்பிக் கொடுக்கவே இல்லை.
(கனவு நிஜமாகும்...) 


 http://en.vikatan.com/article.php?aid=24293&sid=689&mid=31

பெருங்கனவு தேசம் பாகம் -2  

Posted by நாண்

பெருங்கனவு தேசம்!

''எப்படியோ... பல்வேறு லாரி அனுபவங்களுக்குப் பிறகு, ஓட்டுநர் உரிமம் பெற்றாயிற்று. இனிப் படையெடுக்க வேண்டியதுதான் பாக்கி. வீட்டில் எல்லோரிடமும் சென்னையில் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து ஒரு இயல்பான வாழ்வை, ஏற்ற இறக்கம் ஏதும் இல்லாத மரப்பாச்சி பொம்மை போல நாட்களை நகர்த்தப்போவதாகச் சொல்லியாயிற்று. எல்லோருக்கும் பெருத்த மகிழ்ச்சி. கவனத்தைச் சாலையில் வைத்து வாழும் வாழ்க்கை என்னுடையது இல்லை. மனதில் கனவுகள் நிறைத்து, அதை நிகழ்த்திப் புறப்படுகிறேன் என யாருக்குமே தெரியப்போவதில்லை.
அப்பொழுது எல்லாம் பாரிமுனைதான் சென்னையின் தலை. அங்கு இருந்தே தன்னுடைய உடல்களுக்கு ரத்தம் பாய்ச்சுவதுபோல, எல்லா மூலை முடுக்குகளுக்கும் பேருந்து பாயும். ஒரு மரண யோக, எம கண்டத்தில் அதிகாலை ஐந்து ஏழுக்கு இரண்டாவது முறையாகப் பேருந்தில் பயணித்து சென்னையின் பாரீஸ் எனப்படும் பாரிமுனையைவந்து அடைந்தேன்.
முதல் பேருந்துப் பயணம் வேறுவிதமாக இருந்தது. தாம்பரம் விமானப் பயிற்சி நிலையத்தில் பயிற்சிப் பரீட்சைக்காக பனிரெண்டாம் வகுப்பின் விடுமுறையில், அண்ணனுடன் சென்னைக்குவந்து வேளச்சேரி கன்னிகாபுரத்தில் அண்ணனின் வகுப்புத் தோழி வீட்டில் தங்கினோம். அந்த வீட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்து பார்த்தாலும் கிண்டி குதிரைப் பந்தய மைதானத்தில், குதிரைகள் சீறிப் பாய்வது புள்ளிகளாகத் தெரியும். மிகக் குறுகலான சந்துக்குள் புகுந்து மரப் படிக்கட்டுகளின் வழியாக மேலே ஏறினால், வான வெளிச்சத்தை மறைக்க ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளால் மூடப்பட்டிருக்கும். அந்த வீட்டில் இருக்கும் ஒற்றை அறையில் ஐந்து பேரோடு ஏழாவதாக நாங்களும் புகுந்தோம். பொதுவாக சென்னையில், வரும் விருந்தினர்களை அவசரமாக உபசரித்து அவசரமாக வெளியேற்றும் போக்கு பல வீடுகளில் கண்டிருக்கிறேன். அதற்கு இடப்பற்றாக் குறையும் பொருளாதாரக் கட்டமைப்புமே நுண்ணியக் காரணிகளாக இருக்கும். இந்த வீட்டில் அது இருந்தாலும் ஒரு முழுநாள் தங்கினோம். ஹவுஸ் ஓனர், விருந்தினர் (ஹவுஸ் ஓனர் என்ற பதம் எனக்கு புதிதாக இருந்தது. சென்னை ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசும் விந்தையைப் புரிய சற்று சிரமமாக இருந்தது.) வந்தால் தண்ணீருக்குத் திட்டுவார் எனச் சொல்லி அவர்கள் வழக்கமாகக் குளிக்கச் செல்லும் இடத்துக்கு ஒரு மதில் சுவரின் மீது ஏறிக் குதிக்கச்சொல்லி அழைத்துப்போனார்கள்.
நாங்கள் மதில் ஏறிக் குதித்தது ஒரு வனத்தில். அது சாதாரண வனம் இல்லை. மான்களும், ஏரிகளில் மீன்களும்,  அதிசய வண்ணப் பறவைகளும் நிறைந்து இருக்கும் வனம். இந்த அதிவேக இரைச்சலுடன் கூடிய உலகத்தின் பெருநகரங்களில் ஒன்றான இந்த சென்னையில் இப்படி ஓர் இடத்தில் இருந்த மான்கள் எங்களைக் கண்டு அச்சம் கொள்ளவில்லை. ஆசை தீர ஏரியில் நீராடினோம், புற்களில் புரண்டோம், கனிகளை உண்டு, குரங்குகளுக்கும் கொடுத்தோம். அளவு கடந்த பசுமையை, பெயர் தெரியாத மரங்கள் நீட்டிய நிழலை, பறவைகளின் எச்சங்களால் இயற்கை வரைந்த நவீன ஓவியங்களை என வியந்து வியந்து மாண்டோம். அந்த மாய உலகத்தைப் பிரிய மனம் இன்றி மதில் ஏறிக் குதித்தோம். வீடு வந்தடைந்து வனம் பற்றிய சிலாகிப்பில்தான் சில உண்மைகள் தெரிந்தன. சில ஆயிரம் ஏக்கர்களைக்கொண்ட அந்த வனத்தில்தான் ஆளுநர் மாளிகை இருக்கிறது. அந்த இடம் மிகுந்த பாதுகாப்புக்கு உரியது என்றும் புரிந்த போது அதிர்ந்துபோனேன். ஒரு ஆளுநர் மாளிகை இருக்கும் ஒரு வனம் எங்களைப் போல சாதாரண மனிதர்களும் வெகு எளிமையாக நுழையக்கூடிய இடமா? ஆளுநருக்கு அவ்வளவுதான் பாதுகாப்பா... அல்லது ஆளுநர்கள் இந்த தேசத்தில் பயன்படாதவர்கள் என்கிற எண்ணமா... எனக்கு விளங்கவே இல்லை.
தாம்பரம் விமானப் பயிற்சி மையத்தில் ஒரே நேரத்தில் சில ஆயிரம் மாணவர்களுக்குப் பயிற்சி நடந்தது. அதிகாரி இந்தியில் உரையாற்றினார். ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே கேள்வித்தாளில் இருந்தன. தமிழகத்தின் ஒரு மூலையில் இருந்து, தமிழ்வழிக் கல்வியிலேயே படித்து,ஆங்கிலத்தை மண்டையில் கொட்டிக் கொட்டி மனப்பாடமே செய்து, வாந்தி எடுத்துத் தேறிய என்னைப் போன்ற மாணவர்களுக்கு எதற்காக ஆங்கிலத்திலும் இந்தியிலும் கேள்வித்தாள் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை. தென்னிந்தியா தவிர்த்து, மற்ற எல்லா மாநிலங்களிலும் இந்தி இருப்பதால் வட இந்தியர்களே ஆங்கிலம் தெரியாவிட்டாலும் இத்தகைய துறைக்குள் கோலோச்சுவதின் உண்மை அப்பட்டமாகப் புரிந்தது. அவரவர் தாய்மொழியில் கேள்வித்தாள் கொடுத்து அவர்கள் தேறிய பின், நிர்வாக வசதிக்காக இந்தியையும் ஆங்கிலத்தையும் பயிற்றுவிப்பதுதானே பல்வேறு மொழிக் குடும்பங்கள் உள்ள ஒரு தேசமாக, ஒருங்கிணைந்த இந்தியா இருக்க முடியும். இல்லையென்றால், வடவரின் ஆதிக்கத்தில்தானே பிற மொழிக்காரர்கள் அல்லலுறக்கூடும் என்று தோன்றியது. தேடித் தேடி பொது அறிவை வெல்ல முயன்றது அர்த்தம் இல்லாதுப் போனது மண்டைக்குள் ஓடியது. வெளியே வந்ததும் அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டாம். நிச்சயம் தோல்விதான் என்று முடிவுசெய்து அண்ணனை அழைத்துக்கொண்டு வந்துவிட்டேன். சென்னை வந்ததற்கு மெரினா கடற்கரையில் கோடிக் காலடித் தடங்களோடு எங்களின் தடத்தையும் பதித்தோம். எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிகளில் நின்று புகைப்படம் எடுத்தோம். அந்த நாட்களில் கேமராவுடன் சிலர் எப்போதும் நின்றுகொண்டு இருப்பார்கள். பணத்தையும் முகவரியையும் கொடுத்துவிட்டுச் சென்றால் புகைப்படத்தை ஊருக்கு அனுப்பிவைப்பார்கள்.
இது இரண்டாவது பயணம். நிரந்தரக் குடியேற்றம் அமைக்கத் திட்டமிட்ட பயணம். பாரிமுனை அந்த அதிகாலையிலும் அற்புதமாக இருந்தது. தேநீர்க் கடையில் மசாலா டீ நாக்கைச் சுட்டது.
தூங்கி வழியும் முகங்கள், இரவு முழுவதும் வேலை செய்த அலுப்பில் எரிச்சலுடன் பதில் பேசும் தேநீர்க் கடை ஊழியர்கள், காலைப் பயணத்துக்குத் தயாராகும் விபூதிப் பட்டை பேருந்து நடத்துனர்கள், ஓட்டுநர்கள், இதுவே தங்களுடைய வசந்த மாளிகை என லட்சம் கொசுக்களுக்கு மத்தியில் சாக்குப் பைகளுக்குள் உடம்பைத் திணித்து இருந்த சாலையோர மக்கள், நடப்பதையே இழிவாகக் கருதி கார்களிலும் பைக்குகளிலும் மட்டுமே பயணித்து, குளிர்சாதனப் பெட்டிகளால் சுற்றுச்சூழலை கேடாக்கும் அலட்டலான மேட்டுக்குடி மனிதர்கள், வெளிச்சம் வரும் முன் தொப்பையைக் குறைக்க, வியர்வையில் குளிக்கும் விந்தை மனிதர்களை எல்லாம்  கடந்து நான் சென்றது அண்ணா நகரில் உள்ள திருமங்கலத்துக்கு.
விடிந்திருந்தது. கறுப்பாகவும் வெள்ளந்தியாகவும் இருப்பது புறக்கணிக்கப்பட்டு இருந்த அந்தப் பகுதிக்குள் விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் கண்டிருந்த வெள்ளை, மாநிற, பளபளத்த, மருவற்ற தோல் மனிதர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள்.
ரப்பர் செருப்பும், பேகி பேன்ட்டும், தொள தொள சட்டையுடனும் எவ்வளவு வாரினாலும் அடம்பிடித்து படிய மறுக்கும் சுருள் தலையோடு நின்றிருந்த என்னை, ஒரு காவலாளி விநோதமாகப் பார்த்தார். வீட்டு எண்ணைச் சொன்னதும், ' நெனைச்சேன்... அந்த ப்ளாட்டுக்குத்தான் வந்திருப்பேனு'  அந்த அடுக்ககக் குடியிருப்பில் என் நண்பன் தங்கி இருந்ததே திகைப்பாக இருந்தது.
அவ்வளவு நவீன வீட்டில் ஒரு கிழிந்த பாயும், அவனுடைய சில லுங்கிகளும், இரண்டு மூன்று பேன்ட், சட்டைகளும் ,ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியும், ஒரு ஸ்டவ்வும், இரண்டு மூன்று பாத்திரங்களும் இருந்தது. கூடவே குளிக்கும்போது பளீரென பூத்துவாலையை முகத்தில் இறைக்கும் ஷவர் இருந்தது. அழுக்குத்தீர குளித்தேன்.
மொட்டை மாடியில் நின்றபடி எங்களின் கிராமத்து நினைவுகளைக் கிளறிக்கொண்டோம். மொட்டை மாடியில் இருந்து திருமங்கலம் பேருந்து நிலையம் சீனியைப் பற்றிக்கொண்டு பறக்கும் எறும்புகளைப் போல பரபரத்துக் கிடந்தது. நாங்கள் பேசிக்கொண்டதில் தெரிந்த ஒரு விஷயம். இந்தக் குடியிருப்பில் நாங்கள் குடியிருக்கவில்லை. காவல் காக்கிறோம். அதாவது, வீட்டுக்காரருக்குப் பல இடங்கள், பல வீடுகள், இந்த வீட்டில் கடைசியாகக் குடியிருந்தோரால் பிரச்னை. அவர்களை அனுப்பிவிட்டு, கொஞ்ச நாட்களுக்கு யாருக்கும் வாடகைக்கு விடாமல் எங்களைக் காவல் இருக்கச் சொல்லியுள்ளார். அவ்வளவே. 'எவ்வளவுடா வாடகை?’ என்றேன். 'பத்தாயிரம்' என்றான். எனக்கு மயக்கம்வந்தது.
வந்த வேலையின்  விஷயம் சொல்லி நண்பனிடம் பேருந்துக்கான விவரம் கேட்டு நிறுத்தத்தில் காத்திருந்தேன். பல்லவன் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறைவந்தது. ஆனால், ராயபுரம் பேருந்து கிடைக்கவில்லை. ஒரு பகுதிக்குச் செல்லும் பேருந்துகள் நீண்ட நேரம் வருவதில்லை. வந்தாலும் தொடர்ச்சியாக, ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நேரத்தில் வருகின்றன. மொத்தக் கூட்டமும் அடித்துப் பிடித்து பிதுங்கி வழிந்தபடிச் செல்வதைப் பார்க்க அருவருப்பாக இருந்தது. அதே பேருந்தை இயக்குபவர்களின் அலட்சியம் குறித்து எந்த மக்களும் கவலைப்படாததைப் பார்க்கும்போது கோபமாக வந்தது. பின்னாட்களில் அவையே சலித்துப்போனதும் உண்டு.
எப்படியோ போராடி, ஒரு பேருந்தின் படிக்கட்டுகளுக்குள் முண்டி நுழைத்துக்கொண்ட பிறகுதான் ஒரு உண்மை புரிந்தது. என்னைச் சுற்றி நிறையப் பெண்களும் படியில் தொங்கிக்கொண்டு இருப்பது. நெரிசலில் ஆண்களும் பெண்களும் ஒருவரோடு ஒருவர் பிணைந்திருந்தார்கள். அந்தச் சூழல் அபாயகரமாகத் தோன்றியது. பெண்கள் எந்த நெளிதலையும் காட்டவில்லை. தினம் தினம் பயணித்து இந்த நெருக்கடிகள் அவர்களுக்கு மரத்துவிட்டதைக் கண்டுகொள்ள முடிந்தது. திரையில் காட்டும்போது காதலர்கள் விரல்களைத் தொட்டுக்கொண்டாலே சிலிர்ப்பது, இனி நகர ஆண்களுக்கும் பெண்களுக்கும் சாத்தியம் இல்லை. உழைக்கும் நடுத்தர மக்களின்மீது திணிக்கப்பட்ட வன்முறை இது. நடத்துநர் வேறு ஓர் இடத்தில் இருந்தார். பயணச்சீட்டு எடுக்க முடியாமல் தவித்தபோது, எல்லோரும் அவரவர் நின்ற இடத்தில் இருந்தே முன்னால் நின்றவர்களிடம் கொடுத்து, டூ ட்வன்ட்டி பைஃவ் ஒண்ணு; த்ரீ பிஃப்ட்டி ஒண்ணு எனக் காசு கொடுத்து அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். எனக்குக் குழப்பமாக இருந்தது. பயணமே ஒரு திகில் அனுபவமானது. கிடைத்த இடைவெளியில் எப்படியோ மேலேறி ஒரு ராயபுரம் கேட்டேன். ஊர்ப் பெயர் சொல்லிக் கேட்பது அவ்வளவு நாகரிகமில்லை போல. பலர் பார்த்தார்கள். அல்லது பலர் பார்ப்பதாக நான் உள் சுருங்கிக்கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக ராயபுரம்வந்தது. கையில் இருந்த முகவரியைப் பலரிடம் கேட்டு, குழப்பி... குழம்பி ஒரு வழியாக நான் சென்றுசேர வேண்டிய இடம்வந்தேன். நான் பார்த்த அண்ணா நகர் வேறு. ராயபுரம் வேறு. ஒரே நகரத்தில் இரண்டு முகங்கள். மேலும் இந்த நகரத்தில் பல முகங்கள் இருக்கக்கூடும்.
ராயபுரம் கறுப்பாக இருந்தது. வீடுகள் முதல் கடைகள் வரை, பட்டறைகள் முதல் மனிதர்கள் வரை எல்லாவற்றிலும் கறுமை அப்பிக்கிடந்தது. அந்தக் கறுமை புகையாலா, தூசியாலா, கருமண்ணால் ஆன புழுதியாலா, அல்லது தினம் கடந்து செல்லும் ஆயிரம் லாரிகளாலா அல்லது எல்லாம் சேர்ந்த கலவையா எதுவென்று தெரியவில்லை. மனிதர்களின் முகங்களில் தேங்கி அவர்களின் உடல் நரம்புகள்வரை ஊடுருவி இருக்க வேண்டும் இந்தக் கறுமை எனப்பட்டது.
நான் தேடிச் சென்ற அந்த அலுவலக வாசலில் பலபேர் அழுக்கு ஏறிய லுங்கியில் இருந்தார்கள். பரட்டை தலையில் முகத்தை நுழைத்து இருந்தார்கள். உடல் பெருத்த ஒருவர் என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை வாங்கிப் பார்த்தார். அதைத் தனது மேஜையில் வைத்துக்கொண்டார். இரண்டு நாள் கழித்து என்னை எர்ணாவூர் வரச் சொல்லிவிட்டு... என் பின்னால் நின்றவனைப் பார்த்தார். ஓட்டுநர் உரிமத்தைக் கேட்பதா... வேண்டாமா என எனக்குப் புரியவில்லை...''

(கனவுகள் நிஜமாகும்...)

 http://en.vikatan.com/article.php?aid=24095&sid=679&mid=31